இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 01)

இன்று மார்ச் 1 உலக கடற்புல் தினம்- (World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1ஆம் தேதி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். #பின்னணி மே 27, 2022 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக கடற்பாசி நாளினை ஏ/76/எல்.56 ஆவணத்தில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இது நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை விடக் கடற்பாசி சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கார்பனை நிலைப்படுத்த அதிக திறன் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்த் துறைகள், நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் தழுவல் ஆகியவற்றில் பங்களிப்பதற்காக உலக கடற்பாசி தினத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தது.

உலக பாராட்டு தினமின்று! நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள். சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான். உணவை விட ஆதரவும் பாராட்டும்தான் தொடர்ந்து பிள்ளையை வளர்க்கிறது. தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் விலங்கினங்களின் குட்டிகள் தொடுதல் இல்லாதபோது குறைந்த ஆயுட்காலத்தில் இறந்து போகின்றன. மொழியறிவு வளரும் வரை வார்த்தைகள் தரும் நம்பிக்கையும் பாராட்டும் தொடுதல் மூலமாகவே முழுமையாக நிகழ்கிறது. பிறகு வார்த்தைகள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் வளர்ந்த பின்னாலும் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை ஒரு தொடுதல் சொல்லிவிடும் என்பதுதான் உண்மை.தொடுதலுக்கு இசைந்து வெளிவரும் வார்த்தைகள் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வைத் தருகிறாள். விரல் பிடித்து அழைத்துச் செல்லும் அப்பா பாதி ஆசிரியர் ஆகிறார். தட்டிக்கொடுத்துக் கதை சொல்லும் பாட்டி கற்பனையை வளர்க்கிறாள். தோளில் கை போட்டு ரகசியம் பேசும் சகோதரன் உலகைச் சொல்லிக்கொடுக்கிறான். வாரி அணைக்கும் காதலி ஆசையை அள்ளித் தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளை உங்கள் பொறுப்பை உணர்த்துகிறான். உடல் மொழி சொல்லாததை வாய் மொழி சொல்வது கடினம். நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய் மொழி ஆதிக்கம் பெருகுகிறது. வார்த்தைகள் மூலம் தான் பெரும்பாலான செய்திகள் செல்கின்றன. அதனால் வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்று விட்டன.உறவுகள் இயந்திரத்தனமாக இயங்குகையில் தேவைகள் கருதி மட்டுமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரம் தான் செல்வம் என்று இயங்குகின்ற உலகில் பொருள் ஈட்ட வழியில்லாத வார்த்தைகள் குறைந்து போகின்றன. பிரச்சினை என்றால் பேசுகிறோம். காரியம் என்றால் பேசுகிறோம். பரஸ்பர அன்புக்கும் நட்புக்கும் அபிமானத்துக்கும் பேசும் பேச்சுகள் குறைந்துவருகின்றன. இதனால் மனதார ஒருவரைப் பாராட்டுவது என்பதே அரிதான செயலாகிறது. ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக இப்படிப் பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்று சந்தேகப்படுகிறோம்!எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை மனதாரப் பாராட்டுதல் என்பது பாராட்டுபவரின் மன வளத்தைக் காட்டுகிறது. அது ஒரு பரிமாண வளர்ச்சி. அதனால் தான் பலருக்கு மனதாரப் பாராட்டும் மன விசாலம் இருப்பதில்லை.ஆனால் நாம் அனைவரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். எங்கிருந்து பாராட்டு வரும்? கொடுத்தால்தானே திரும்பப்பெற? நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவரில் எத்தனை பேர் மனதாரச் சமைத்தவரை பாராட்டுகின்றனர்? சரியில்லை என்றால் திட்டித் தீர்க்க யோசிப்பதில்லை. “ஒரு நாளில் எத்தனை பேரிடம் பாராட்டு வாங்குகிறோமோ அவ்வளவு நல்ல சேவையைச் செய்கிறோம்!” என்பது சேவை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சொல்லித் தரும் பாடம். இதை நான் சற்றுத் திருப்பிப்போட்டுச் சொல்வேன். “ஒரு நாளில் எத்தனை பேரைப் பாராட்டுகிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.” பாராட்டுவதற்குப் பாராட்டப்படும் பொருளோ மனிதரோ அருகதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவரின் அருகதைதான் முக்கியம். நம் வாழ்க்கையை மெலிதாகத் தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறு காரியங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் நாள் அன்று நிச்சயம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் மனிதர்களின் நல்ல பண்புகளை, நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்றும். வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டு அவசியமா என்று வாதாடுவார்கள். அது வீண் வாதம். பாராட்டுகள் அதிகமானால் பாதகமில்லை. குறைவானால் தான் பாதகம். முடியாதவரிடம் முடியும் என்று சொல்லிச் சற்று அதிகப்படியாகப் பாராட்டினால் பிழையில்லை. ஆனால் முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும் பொழுது பலர் தங்கள் திறமைகளின் மேல் நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்கள்.பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில்கூடப் பெரிய பாராட்டுகள் அவசியப்படவில்லை. நல்ல வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருக்கும். இன்று மூன்று பேராய், நான்கு பேராய் சிறுத்துள்ள குடும்பங்களில் வாய் மொழியே குறைந்துவருகிறது. அவசர யுகத்தில் பாராட்டுக்கு ஏது நேரம்? ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். ஒரு பத்துப் பேரை இன்று மனதார, பிரதி பலன் எதிர்பார்க்காமல் அவர்கள் நல்ல செயல்களுக்குப் பாராட்டுங்கள். சங்கிலித் தொடர்ச்சியாக நல்ல நிகழ்வுகளை நடத்துவீர்கள்.ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிவிட்டால் அவரிடம் பாராட்டத்தக்கவல்ல பண்புகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுக்கான வீரிய விதைகளைத் தூவும்.பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடுபவர்கள் பலர் இருப்பார்கள். பாராட்டை இன்றே செய்யுங்கள். உறவுகளில் குறைகள் சொல்வதைத் தள்ளிப்போடுங்கள்.உங்களைத் தொட்டுச் செல்லும் உறவுகளில்; மனிதர்களில் யாரையெல்லாம் பாராட்டலாம் என்று பட்டியல் போடுங்கள். இன்றே செயல்படுத்துங்கள். பாராட்டு ஒரு மூலதனம். அது பன்மடங்கு பெருகி உங்களிடம் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி. இந்த தகவலைக் கூட ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனலில் படித்து ஆந்தை குழுவைப் பாராட்ட தோன்றினால் நீங்களும் நம் நண்பரே!

உலகின் முதல் பயன்பாட்டுச் சாத்தியமான தட்டச்சு எந்திரத்தை ரெமிங்டன் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கிய நாள் உண்மையில் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனமான ரெமிங்டன், மாற்றுத் தொழில்களில் கால்பதிக்க விரும்பி, 1870இல் தையல் எந்திரத் தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1868இல் தன் தட்டச்சு எந்திரத்துக்குக் காப்புரிமை பெற்ற கிறிஸ்டொஃபர் ஷோல்ஸ் அதை உற்பத்தி செய்ய முடியாமல் இருந்தார்.அந்தக் காப்புரிமையை வாங்கி ரெமிங்டன் உற்பத்தி செய்தது. ஏற்கெனவே தையல் எந்திரம் தயாரித்துக் கொண்டிருந்ததால், தட்டச்சு எந்திரத்திலும் தையல் எந்திரத்தின் சாயல் இருந்தது. தையல் எந்திரம் போன்ற ஸ்டேண்ட், வரி முடிந்ததும் தொடக்கத்திற்குத் தள்ளுவதற்குக் காலில் மிதிக்கும் அமைப்பு, பூ வேலைப்பாடு போன்றவை இடம்பெற்றிருந்தன. உருளை வடிவ அச்சாகும் அமைப்பு, க்வெர்ட்டி விசை அமைப்பு என்று தற்போதைய தட்டச்சு எநதிரங்களிலுள்ள பெரும்பாலான அம்சங்களை இது அறிமுகப் படுத்தினாலும், பெரிய (கேப்பிடல்) எழுத்துக்கள் மட்டுமே அச்சிட முடியும், என்ன அச்சாகிறது என்பதை தட்டச்சு செய்பவர் பார்க்க முடியாது என்ற குறைகளும் இருந்தன. 1878இல் வந்த இரண்டாவது தலைமுறையில் சிறிய எழுத்துக்கள் அச்சிடும் வசதி சேர்க்கப்பட்டுவிட்டது. பல்வேறு தயாரிப்பாளர்களும் உற்பத்தி செய்யத்தொடங்கியதும் வேறுபாடுகளைக் களைய, 1910இல் பொதுவான வடிவைப்பு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து தட்டச்சு எந்திரங்கள் தற்போதைய வடிவை அடைந்தன.பெண்களை அலுவலகப் பணிக்குக் கொண்டுவந்தது இந்தத் தட்டச்சு எந்திரங்களே! 1868இல் ஷோல்ஸ் உருவாக்கிய தட்டச்சு எந்திரம் வெற்றிகரமாக அமைந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரம் பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒற்றைப் பிரதியை எழுதுவது போன்றே அச்சிட வேண்டும் என்ற தேடல் தொடங்கிவிட்டது. 1575இல் இத்தாலிய அச்சக உரிமையாளர் ஒருவர் உருவாக்கிய ஓர் எந்திரத்தில் தொடங்கி, 1870இல் டென்மார்க்கின் ஹேன்சன் என்ற தச்சர் உருவாக்கி, வணிகரீதியில் விற்பனையே செய்த எழுதும் பந்து என்ற எந்திரம் வரை, தட்டச்சு எந்திரம் 52 முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சார்லி சாப்ளினின் உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்ட தினம் சார்லி சாப்ளின் நமக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், ஏதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்ல முடியும்’ என்கிற ஒரே கருதான். ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony). ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக ஆட்சி புரிந்த காலத்தில் (1940), சாப்ளின் ‘The Great Dictator’ (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார். சாப்ளினின் மற்ற குறும்படங்களை போல அல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது, கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்தப்படம்.இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.சிகை அலங்கரிப்பவர் வாழும் (யூத) சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை. சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலமாரியை திறக்கிறார் அதில் பல விதங்களில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் அதில் முகத்தை சரிசெய்கிறார்.சில நேரம் குழந்தைபோல சிரித்துக்கொண்டே அறையிலுள்ள திரைச்சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவதுபோல நடனமாடுகிறார். இதில் சாப்ளினின் நடிப்பு அபாரம்.படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர் ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப் பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார், பின்பு தன் காதலியிடம் சேருகிறார். சுபம். தி கிரேட் டிக்டேடர் இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் – ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார். ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தைத்தான் ‘ஹிட்லர் காலத்தில்..சார்லி சாப்ளின் தில்’ என்றார் ஒரு கவிஞர். சாப்ளின் 1977 ஆம் ஆண்டு, கிருஸ்துமஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது. ஆனால் இதே மார்ச் 1,1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. அதே சமயம் அத்திட்டம் தோல்வியுற்று,திருடர்கள் பிடிபட்டனர்.சாப்ளினின் உடல் பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் கைப்பற்றப் பட்டது. அதை அடுத்து ஆறரை அடி குழியில் மிகக் கடினமான சிமெண்ட் கலைவையால் இவருக்கான கல்லறை அமைக்கப்பட்டு புதைக்கப்பட்டது இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப் பட்டது.

ஸ்பெயினில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட நாள்– ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 18 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. அதாவது *ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். ‘யூரோ’ என்னும் வார்த்தை டிசம்பர் 16,1995-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.1999-ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002-ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.

சுய காயம் விழிப்புணர்வு தினமின்று ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி சுய காயம் விழிப்புணர்வு தினம் கல்வியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சனைக்கு ஆதரவளிக்கிறது. யாராவது வேண்டுமென்றே சுய காயம் அல்லது தீங்கு விளைவிக்கும்போது, அது உணர்ச்சி துயரத்தின் அறிகுறியாகும்.ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் போர்டு ஆஃப் ஃபேமிலி மெடிசின் ஆய்வின்படி, ஏறத்தாழ 4% அமெரிக்கர்கள் சுய-தீங்கு விளைவிக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள்.நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிகுறிகளை அடையாளம் காண உதவுவதும், மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு உதவியைக் கண்டறிய உதவுவதும் இந்த நாளின் நோக்கமாகும். இருப்பினும், உதவி மற்றும் ஆதரவைக் காணலாம்.வெட்டு, அரிப்பு, குத்துதல் மற்றும் ரசாயனங்களை உட்கொள்வது உட்பட பல வடிவங்களில் சுய காயம் ஏற்படுகிறது. சுய தீங்கு விளைவிப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்கள். அவற்றில் சில பயம், மன அழுத்தம், பதட்டம் அல்லது நேர்மறையான உணர்வுகளைத் தூண்டுவது ஆகியவை அடங்கும். தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் நபர்கள் தங்கள் காயங்களை மறைக்க முயற்சி செய்யலாம். அவர்களின் ஆடை பருவத்திற்கு பொருந்தாது. பிற அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்: விவரிக்கப்படாத வெட்டுக்கள், தீக்காயங்கள் அல்லது காயங்கள் உணர்ச்சிகளைக் கையாள இயலாமை உறவுகளைத் தவிர்த்தல் உறவுகளுடன் பிரச்சினைகள் வேலை, வீடு அல்லது பள்ளியில் பிரச்சினைகள் மோசமான சுயமரியாதை சுய காயத்தைப் புரிந்துகொள்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஆதாரங்களும் ஆதரவும் கிடைக்கின்றன. அதற்கான நிபுணர்கள் அதை நிவர்த்தி செய்வார்கள்.

பாகுபாடுகள் ஒழிப்பு தினம். Zero Discrimination Day. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஒன்றாம் தேதி மக்களிடையே பாகுபாடுகள் பார்க்கக் கூடாதென்பதை நினைவுறுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது. நிறம், உடல், ஆண், பெண், எடை, உயரம், வயது, மொழி போன்ற எந்த பாகுபடுத்தலும் இன்றி மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாள் உணர்த்தும் குறிக்கோள். இது முதன்முதலில் 1914ல் UNAIDS என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டது. மற்றவர்கள் நம்மை பாகுபாடாக நடத் தும்போது அதை மனவலியுடன் எதிர் கொண்டிருப்போம். ஆனால், நம்மிடமும் அத்தகைய பாகுபாடு காட்டும் மனோபாவம் இருப் பதை ஏனோ நாம் உணர்வதில்லை. உணர்ந்தாலும் அதைத் தவறென்று நாம் நினைப்பதில்லை. வாழும் இடம், பேசும் மொழி, செய்யும் தொழில், பின்பற்றும் மதம், சாதி, பாலினம், பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சக மனிதர்கள் மீது பாகுபாடு காட்டுகிறவர்களாக இருக்கிறோம். நகரங்களில் இந்தப் பாகுபாடு இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால், அங்கும் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. நிறம், வயது, படிப்பு, உடல் குறைபாடு, புறத்தோற்றம் ஆகியவற்றை வைத்து சக மனிதர்களை எடைபோடுகிறார்கள். இந்தியாவில் 85 சதவீப் பெண்கள் பாலினப் பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை இழக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7 சதவீதமாக இருக்கிறது. ஊதியமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆண் ஒரு மணி நேரத்தில் ஈட்டும் ஊதியத்தை அதே வேலையை செய்வதற்கு அந்த ஊதியத்தில் 65 சதவீதம்தான் பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. கரோனா காலகட்டத்தில் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக மாறி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 48 சதவீதம் பெண்கள்தான். ஆனால், இந்திய வேலைசார் பங்களிப்பில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதம் மட்டுமே. ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டால், 2025ல் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை விட 60 சதவீதம் உயரும் என்று மெக்கென்சி க்ளோபல் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கை கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் வளர்ச்சி பாலினப் பாகுபாடு காரணமாக தடைபடுகிறது.

கே. பி. ஜானகி அம்மாள் காலமான நாளின்று கே. பி. ஜானகி அம்மாள் (K. P. Janaki Ammal) இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர். 1917 ஆம் ஆண்டு‍ பத்மநாபன் – லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார். ப.ஜீவானந்தம் மற்றும் பி.ராமமூர்த்தி ஆகியோரை வத்தலக்குண்டுவில் சந்தித்தார். கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு‍ 1940 ஆம் ஆண்டு‍ ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானகி அம்மாள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாட்டின் முதல் தலைவர் ஆவார்.

மேற்கு ஆஃப்ரிக்க ஃப்ரெஞ்ச்சுக் குடியேற்றமான அப்பர்(மேல்) வோல்ட்டா உருவாக்கப்பட்ட நாள் தற்போது புர்க்கினோ ஃபேசோ என்ற நாடாக இருக்கும் இது, வோல்ட்டா ஆற்றுக்கு மேலே அமைந்த பகுதி என்பதால் அப்போது அப்பர் வோல்ட்டா என்ற பெயர் சூட்டப்பட்டது. உலகம் முழுவதும் குடியேற்றங்களை ஏற்படுத்திய ஐரோப்பியர்கள், கீழை நாடுகளுக்கு வருவதற்காக, ஆஃப்ரிக்காவைக் கடந்து வந்தாலும், அதன் துறைமுகப் பகுதிகளில் வணிக மையங்களை மட்டுமே அமைத்தனர். அங்கிருந்த சூழல்கள் ஐரோப்பியர்களுக்கு ஒத்துக்கொள்ளாததால், ஆஃப்ரிக்காவின் உட்பகுதிக்குச் சென்று குடியேற்றங்களை நிறுவவில்லை. 1870வரையே, ஆஃப்ரிக்காவின் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், 1881இலிருந்து 1914வரை ஆஃப்ரிக்காவின் பகுதிகளை கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளிடையே நடைபெற்றது ‘ஆஃப்ரிக்கப் போட்டி’ என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான், 1896இல் இப்பகுதியைக் கைப்பற்ற ஃப்ரான்ஸ் முயற்சித்தபோது, மோசி என்ற மேற்கு ஆஃப்ரிக்கத் தொல்குடியினர் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தனர். பல குறுநில முடியரசுகளைக்கொண்ட இது, மோசி பேரரசு என்றும்கூட குறிப்பிடப்படுகிறது. மோசி மக்களை ஃப்ரெஞ்ச்சுக்காரர்களால் அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியவில்லை. 23 ஆண்டுகள் முயற்சித்து, 1919இல்தான் மோசிக்களின் தலைநகரான வாகடூகூ-வை கைப்பற்ற முடிந்தது. அப்போது உருவாக்கப்பட்ட இந்த அப்பர் வோல்ட்டாவில் போதுமான பொருளாதார வளர்ச்சியின்மையால், 1932இல் பிரிக்கப்பட்டு, அப்போதையே பிற ஃப்ரெஞ்ச்சுக் குடியேற்றங்களான, ஐவரி கோஸ்ட், ஃப்ரெஞ்ச் சூடான், நைஜர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுவிட்டது. 1937இல் அப்பகுதிகளை மீண்டும் அப்பர் கோஸ்ட் என்ற பெயரில் ஒருங்கிணைத்து, ஒரு நிர்வாகப் பிரிவாக மாற்றிய ஃப்ரான்சு, இரண்டாம் உலகப்போருக்குப்பின் மோசி மக்களின் போராட்டத்தால், 1947இல் மீண்டும் பழைய அப்பர் வோல்ட்டாவாகவே மாற்றியது. ஃப்ரான்சின் கடல்கடந்த குடியேற்றங்களை மறுசீரமைக்க 1957இல் ஃப்ரான்ஸ் இயற்றிய ‘அடிப்படைச் சட்டம்’ என்ற சட்டத்தின்படி, 1958இல் அப்பர் வோல்ட்டா குடியரசு என்ற பெயரில் தன்னாட்சிப் பெற்றது. 1960இல் முழுமையாக விடுதலைப் பெற்ற இது, 1984இல் புர்க்கினோ ஃபேசோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மோசி மொழியில் புர்க்கினோ என்றால் நேரான என்றும், பேஃசோ என்றால் தந்தையின் வீடு என்றும் பொருள். நேர்மையான மக்களின் மண் என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டது.

சூலமங்கலம் ராஜலட்சுமி நினைவு தினம் இன்று எல்லையில்லாத இசை ஆர்வம், அந்த இளம் பெண்ணுக்கும், அவரது சகோதரிக்கும். சகோதரிகள் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து, பல கிராமபோன் ரிக்கார்டு ( இசைத்தட்டு ) கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி, அலைந்து திரிந்து எவ்வளவோ கெஞ்சிக் கூட கேட்டுப்பார்த்தார்களாம். ஆனால் எந்த ஒரு இசைத்தட்டு கம்பெனியும், இதற்கு இசைய மறுத்து விட்டார்களாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் :- ஓதுவார்கள் பலர் பாடியும், இந்தப் பாடல் மக்களைச் சரியாக சென்று அடையவில்லை.வேண்டாம் இந்த வீண் வேலை. விட்டு விட்டு நீங்கள் வேறு வேலையைப் பாருங்கள். விடவில்லை அந்த சகோதரிகள்.இசைத்தட்டு சுழல்வது போல், இசைத்தட்டு கம்பெனிகளை, சுற்றி சுற்று வந்து, சுழன்று வந்து பல முறை முயற்சித்தும், கீறல் விழுந்த இசைத்தட்டாக, “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்.ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல இராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம். முதலில் ‘‘ஆபேரி”. அடுத்து ‘’சுப பந்துவராளி”. அதனைத் தொடர்ந்து ‘’ கல்யாணி ‘’. இறுதியாக ‘’தோடி’’. இப்படி நான்கு இராகங்களில் பாடினார்கள் இந்தப் பாடலை……..! சரி. ரிக்கார்டு போட்டுத் தான் பார்ப்போமே…’ என்று ஒரே ஒரு கம்பெனி 1970 இல் வெறும் 500 ரிக்கார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். அப்புறம் நடந்தது தான்,எவருமே எதிர்பாராதது. சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த ரிக்கார்ட் பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது. சரி இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு, கஷ்டப்பட்டு பாடி, இந்த இசைத்தட்டை வெளியிட்ட அந்த சகோதரிகள் யார் ? சூலமங்கலம் சகோதரிகள் அந்தப் பாடல் – “கந்த சஷ்டி கவசம்” துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.” எவ்வளவு கஷ்டங்களையும், போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது இந்த கந்த சஷ்டி கவசம் ? அதற்குப் பின் கந்தசஷ்டி கவசத்தை பலரும் பலவிதமாக பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள்., பாடிய அளவிற்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை. காரணம், கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தி.அது தான் இந்த கந்த சஷ்டி கவசத்தின் வெற்றி. அந்த சூலமங்கலம் சகோதரிகளின் வெற்றி. இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர். இச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [ 1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள். இவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமி 1992 மார்ச் 1 இல் காலமானார்.

ஏ. என்.சிவராமன் பிறந்த & காலமான தினமின்று! தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பல அரிய அரசியல் தலைவர்களையும், ஆந்தையார் உள்ளிட்ட பத்திர்கையாளரள் மற்றும் இலக்கியத் துறையில் சாதனைப் படைத்த பல ஜாம்பவான்களையும் கொடுத்த பூமி. காவிரி தண்ணீர் குடித்தவன் என்று தஞ்சை மாவட்டத்துக் காரர்கள் பெருமை பேசிக்கொள்வதைப் போல தாமிரபரணி ஆற்று நீரைப் பருகியவன் என்று அவர்களுக்கு ஒரு பெருமிதம் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தினமணி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து ஓராண்டு அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல 53 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த பெருமை இவருக்கு உண்டு. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது, இந்த 53 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களே கிடையாதா என்ன எனும் ஐயப்பாடு உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இவருடைய இந்த 53 ஆண்டுகால பணி, அதன் பின்னர் அவர் எழுதிய எழுத்துக்கள், அந்த எழுத்துக்களைப் படித்துப் பயன்பெற்ற ஏராளமான தமிழ் உள்ளங்களுக்குத் தெரியும் இவருடைய பணியின் முக்கியத்துவம். இவர் எழுதாத துறைகளே இல்லை எனலாம். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல கல்வி அறிவு பெருகிக் கிடக்காத நேரத்தில் பல தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம் ஏராளம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருமை இவரது கட்டுரைகளுக்கு உண்டு. இவரை ஒரு சாதாரண பத்திரிகை ஆசிரியர் என்று மட்டும் ஒரு சம்புடத்தில் அடக்கிவிட முடியாது. இவருடைய விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், இவருடைய ஒருசில கட்டுரைகளையாவது படித்துப் பார்க்க வேண்டும். இவர் ஒரு பட்டதாரியா? இல்லை. பத்திரிகை துறைக்கென்று சிறப்புப் பயிற்சி எதுவும் பெற்றவரா? இல்லை. தமிழ் தவிர வேறு மொழி படித்துத் தேறியவரா?இல்லை, ஆனால் அவர் அறிந்த மொழிகள் ஏராளம். மகாகவி பாரதி சொன்னதைப் போல “யாமறிந்த மொழிகளிலே” என்று தலை நிமிர்ந்து சொன்னது போல இவருக்கும் தமிழ் தவிர, ஆங்கிலம், ப்ரெஞ்சு, ஜெர்மன், சம்ஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளில் திறமை பெற்றிருந்தார். ஆச்சரியமாக இருக்கிறதா? அடிப்படைக் கல்வி மிக அதிகமில்லாவிட்டாலும் பட்டறிவும், தானே கற்றுத் தேர்ந்த மொழி அறிவும் இவரது பெருமைக்குச் சான்றளிக்கக் கூடியவை. இவருடைய சாதனை என்று சொல்லக்கூடியது, இவர் தனது 93ஆம் வயதில் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஒருவருடைய உதவியோடு அராபிய மொழியையும் கற்றார் என்பதுதான். நம்ப முடிகிறதா? ஆம், உண்மை. இதோடு முடிந்து விட்டதா, இவரது பெருமை? இல்லை இன்னும் இருக்கிறது. வேதங்களை வழுவற அத்யாயனம் செய்து முடித்தவர். அதோடு அவைகளில் ஆராய்ச்சியும் செய்தவர். தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு, தினமும் பாராயணம் செய்து வந்தவர். அவர் வெறும் ஏ.என்.சிவராமன் எனும் தனி மனிதரா? பெருமை மிக்க பத்திரிகை ஆசிரியரா? கட்டுரைகள் மூலம் மக்களுக்கு பொது அறிவை வளர்க்கப் பாடுபட்டவரா? வேத வேதாந்தங்களைக் கரைத்துக் குடித்து அதன் சாரத்தைப் பிழிந்து கொடுத்த வள்ளலா? ஆம்! இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பெருமைக்குரிய பல்கலைக் கழகம். இவரைப் பற்றிச் சொல்லும்போது பலரும் இவரை “He is an Institution” என்பார்கள். அப்படிப் பல்முனை திறமை படைத்த ஒரு அதிசய மனிதர் இவர். பத்திரிகை ஆசிரியர் என்றால், பத்திரிகையில் என்னென்ன விஷயங்களை பிரசுரிப்பது, தலையங்கம் எழுதுவது, நிர்வாகத்தை நடத்துவது அதோடு முடிந்து விட்டது என்று நினைத்தால், இவரைப் பொறுத்த வரையில் அப்படி அல்ல. அந்தக் காலத்தில் இப்போது போல மின்னணு இயந்திரத்தில் டைப் செய்து செய்திகளையும் மற்ற கதை கட்டுரைகளையும் வெளியிடுவது போல இருக்கவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும், அச்சுக் கோத்து வடிவமைத்து பக்கங்கள் தயாரிக்கப்படும். அப்படி அச்சுக் கோர்க்கும் வித்தை முதல், அது அச்சாகி, முழு வடிவம் பெற்று, இதழ்கள் வெளிவந்து விற்பனை செய்வது வரையிலான அந்த Production and Marketing வரையிலான அத்தனை விஷயங்களிலும் கரை கண்டவர் நமது ஏ.என்.சிவராமன். இத்தனை தகுதிகள், பெருமைகள் இருந்த போதிலும் தலைகனம் என்பது சிறிதுகூட தன்னிடம் இல்லாத பார்வைக்கும், பழகுவதற்கும், மிக மிக எளிமையானவர். இவர் எளிமை சில சமயங்களில் இவரது உயர்ந்த அந்தஸ்தை வெளிக்காட்டாமல் போய்விடும். இவரை சாதாரண பணியாள் என்றுகூட இவரிடம் சிலர் வேலை ஏவியதும் நடந்திருக்கிறது. முழு வாழ்வு வாழ்ந்த முடித்தவர் ஏ.என்.எஸ். தொண்ணூறு வயதைக் கடந்த பின்னரும் கூட தினமும் பல மணி நேரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தவர். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வார். தெளிந்த சிந்தனை படைத்தவர். எதற்கும், யாருக்கும் அஞ்சாத துணிச்சலும், நேர்மையும் இவரது சிறப்பு குணாதிசயங்கள். இத்தனைக்கும் இடையில் இவரது தேசப் பற்று மிக உன்னதமானது. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டது. “சும்மா, ஒப்புக்கு ‘வந்தேமாதரம்’ என்று சொல்லக்கூடிய போலி சுதேசி அல்ல ஏ.என்.எஸ். ‘தினமணி’ பத்திரிகையில் அவர் பணியாற்ற சேருவதற்கு முன்பாகவே அவர் தன்னை தேச சேவையில் ஈடுபடுத்திக் கொண்டவர். தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து இவர் கட்டுரைகளை தினமணியில் வெளியிட்டு வந்தார்கள் என்றால், அவருக்கும் அந்த பத்திரிகைக்கும் இருந்த உறவு பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.குறிப்பாக சொல்வதானால் பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டவரிவர். அப்பேர்ப்படவருக்கு நினைவஞ்சலி.

ஏ.டி.பன்னீர்செல்வம் காலமான தினமின்று! திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூர் என்ற செல்வபுரத்தில், 1888 ஜூன் 1ம் தேதி பிறந்தவர், ஏ.டி.பன்னீர்செல்வம். இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலையில், ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். கடந்த, 1916ல், நீதிக்கட்சி துவங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் துவங்கினார். தஞ்சை நகராட்சி தலைவர், ஜில்லா போர்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1930 – 1939ல், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1930ல், லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். இரண்டாம் உலகப்போரின் போது, ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். ஆங்கில அரசு, அவருக்கு, ‘ராவ் பகதுார், சர்’ பட்டங்களை வழங்கி சிறப்பித்தது. 1940 இதே மார்ச் 1ம் தேதி, ஓமனில் நடந்த, விமான விபத்தில் உயிரிழந்தார்.. இச்செய்தி இடியெனத் தமிழ் மக்களைத் தாக்கிற்று. அன்றைய தினம் ஏ.டி. பன்னீர்செல்வம் மட்டும் லண்டன் சென்று பணியில் சேர்ந்திருந்தால் திராவிட நாடு கிடைத்திருக்கும் என்பதுத் தனி எபிசோட்… அச்சூழலில் ஏ.டி. பன்னீர்செல்வம் இறந்துவிட்டதாக இங்கிலாந்து அரசு அறிவித்தபோது தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார். பெரியாரின் துயரம் எனும் தலைப்பில் குடிஅரசில் வெளிவந்த காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா? கனவா? – தமிழர் சாந்தி பெறுவாராக! என்ற தலைப்பிட்டு அப்போது பெரியார் எழுதிய இரங்கல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. அந்த இரங்கலில், ”என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு பொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.” என்று எழுதினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *