கொடுங்கோல் மன்னன் தைமூர் காலமான தினமின்று!
எத்தனையோ கொடுங்கோல் மன்னர்களையும் சர்வாதிகாரிகளையும் பார்த்திருக்கிறது. ஆனால், தைமூரைப் போல ஒரு கொடுங்கோலனை அதிகம் கண்டிருக்காது.
தைமூர், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய – மங்கோலியப் பேரரசன். இவன் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகிவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவனார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவனே. உலகம் முழுவதையும் வென்று, தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வெறிபிடித்து அலைந்தவன். அதற்காக வாழ்நாள் முழுவதையும் போர்க் களத்திலேயே கழித்தவன் தைமூர். இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளை செங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில், மாகாணங்களை ஆள்வதில் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களைச் சகாடை துருக்கி என்றே அழைத்தார்கள்.தைமூரின் தந்தை தராகாய்க்குச் சொந்தமாகப் பெரிய நிலப்பரப்பு இருந்தது. 1336ஆம் ஆண்டு தைமூர் பிறந்தான். இவனுக்கு எட்டு வயதானபோது தாயார் மற்றும் சகோதரர்களுடன், எதிரிப் பிரிவினரால் சிறைபிடிக்கப்பட்டு சாமர்கண்டுக்குக் கொண்டு செல்லப்பட்டான். பின், அங்கிருந்து தப்பி மீண்டும் தங்கள் இடத்துக்குத் திரும்பினர். இனத்தின் தளபதி: 16 வயதுச் சிறுவனாக தைமூர் இருந்தபோது பழங்குடியினரிடம் அவர் தந்தை, “இனிமேல் நம் இனத்தின் தளபதி என் மகன்தான்” என்று அறிவித்தார். தன் தந்தைக்குப் பின் அவரின் பணியை தைமூர் தொடர்ந்தான். 18 வயதில் தைமூர், குதிரையேற்றத்திலும் வேட்டையாடுவதிலும் சிறந்து விளங்கினா . மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்கள் வழிவந்த தைமூரின் இனத்தவர் துருக்கி அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். தைமூரும் அவ்வாறே மாறினான். பாரசீகக் கல்வியும் உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர், தனது மூதாதையர்களின் பேரரசை மீண்டும் உருவாக்க எண்ணம் கொண்டான். அதற்காகத் தொடர்ந்து போர் புரிந்தான் . இளம் வயதில் ஒரு போரின்போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்கு உள்ளானது. அதைச் சரிசெய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டப் பெயரே ‘தைமூர் இ லெங்க்’. இதன் அர்த்தம் ‘நொண்டி தைமூர்’ ஆகும். மனிதத்தன்மையற்ற ஆட்சி: தைமூரின் மாபெரும் படை முதலில் பாக்தாத் நகரத்தின் மீது படையெடுத்தது. அதன்பின் தைமூர் பாரசீகத்தின் மீது படையெடுத்தான் . பாரசீகத்தில் தைமூரின் மாபெரும் படை வெட்டி வீழ்த்திய வீரர்களின் எண்ணிக்கை 70 ஆயிரம். அடுத்து தைமூர் வென்ற இடம் ரஷ்யாவின் மாஸ்கோ. தைமூரின் போர்க்குணமே அவன் பல வெற்றிகளைக் காண காரணம். இரக்கம் காட்டுவதோ, எதிரிகளை ஏனோதானோ என்று விட்டுவிடுவதோ தைமூருக்குப் பிடிக்காத ஒன்று. அடியோடு அழித்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பான் . தைமூரின் ஆட்சி மனிதத் தன்மையற்றதாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களைச் செங்கிஸ்கானைவிடக் கொடுமையாகத் தண்டித்தான் . மக்களைக் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினான் . கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரத்தை அமைத்து மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தினான். இந்தியப் படையெடுப்பு: அவனுடைய முன்னோரான செங்கிஸ்கான் செய்யத் தவறிய ஒன்றை 1398இல் தைமூர் செய்தான் . அது அவனுடைய இந்தியப் படையெடுப்பு. வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆழமான சிந்து நதியைக் கடந்தாக வேண்டும். இயற்கை அமைத்துத் தந்த இந்தப் பெரும் அரண்களைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைவது கடினம்.இவற்றைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைந்தவர்கள் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர், கஜினி முகமது உள்ளிட்ட மிகச் சிலரே. பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவுக்கு 1398ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வந்து சேர்ந்தான் தைமூர். சிந்து நதியில் படகுகளை வரிசையாக நிறுத்தி இணைத்துப் பாலத்தை ஏற்படுத்திக் கணநேரத்தில் நதியைக் கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினான் . சிந்து நதியைக் கடந்த தைமூரின் படை, மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பஞ்சாப் பகுதி முழுவதையும் சூறையாடி வெறியாட்டம் போட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் தைமூரிடம் அடிமைகளாகச் சிக்கினார்கள். ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை பேரின் தலைகளும் சீவப்பட்டன. பின் டிசம்பர் 17, 1398இல் தைமூர், டெல்லி அரியணையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரைக் கைப்பற்றினான். டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், மீரட், லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினான் தைமூர். அதன் பின்னர் 1400இல் துருக்கி, 1401இல் எகிப்து மற்றும் பாக்தாத் நகரங்களை வென்று, 1404இல் சமர்கண்ட் திரும்பினான் தைமூர். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. இந்தியக் கட்டிடக் கலை: பல லட்சம் பேரை வெட்டி வீழ்த்தி ரத்தச் சரித்திரத்துக்குக் காரணமான தைமூரின் மரணம் அவ்வளவு கோரமானதாக இல்லை. சீனாவைக் கைப்பற்றத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர், சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து, 1405ஆம் ஆண்டு உயிரைவிட்டான். அவரது உடலை கஸ்தூரி, பன்னீரால் அடைத்து மஸ்லின் துணியில் சுற்றி சமர்கண்ட் நகரத்திற்கு அனுப்பினார்கள். தைமூர் முன்பு தன்னுடன் அழைத்துச் சென்ற இந்தியக் கட்டிடக் கலைஞர்கள், துருக்கி சென்றவுடன் சில மாதங்களிலேயே துருக்கிய மற்றும் பெர்ஷியக் கலைநுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லறை கட்டப்பட்டது. இந்தியக் கட்டிடக் கலைஞர்கள் சமர்கன்ட் நகரில், ‘குர் அமிர்க்’ என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டி முடித்தார்கள். தோண்டப்பட்ட கல்லறை: 1941இல் சோவியத்தைச் சேர்ந்த மிகாயில் ஜிராசிமாவ் என்கிற ஆராய்ச்சியாளர் தைமூரின் கல்லறையைத் தோண்டி அவரது உடலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம் தோற்றம், மங்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிப்படுத்தினார். பின் 1942 நவம்பர் மாதம் இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
மைக்கலாஞ்சலோ காலமான தினம்
1564 இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர், சிற்பி, கட்டிடக் கலை வல்லுநர், கவிஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட மைக்கலாஞ்சலோ டி லோடொவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni) l இத்தாலி, தஸ்கனியில் உள்ள அரெ ஸ்சோ என்னும் இடத்தில் பிறந்தார் (1475). தந்தை ஒரு நீதிபதியாக இருந்தவர். தஸ்கனியின் பிரபுத்துவக் குடும்பம் இவர்களுடையது. ஆரம்ப காலத்தில் பிரான்ஸில் வளர்ந்தார். தாயார் இறந்த பிறகு வேறொரு நகரில் கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இங்கு இவரது தந்தைக்குச் சொந்தமாக ஒரு பளிங்குக்கல் குவாரி இருந்தது. சிறிது காலம் இலக்கணம் படித்தார். படிப்பில் இவருக்கு ஆர்வம் இல்லை. தேவாலயங்களில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்து வரைந்தார். ஓவியர்கள், சிற்பிகளுடன் இருப்பதையே விரும்பினார். பிறகு தந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஓவியமும் சிற்பமும் பயின்றார். 1488-ல் இவரது திறமையால் கவரப்பட்ட பயிற்சியாளர் அந்நகர ஆட்சியாளரிடம் சிபாரிசு செய்தார். சிறிது காலம் அரசு பாடசாலையில் கல்வி கற்றார். இந்த சமயத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் கலைகளைப் பற்றிப் பல விஷயங்களை அறிந்துகொண்டார். தனது 21-வது வயதில் ரோம் நகருக்குச் சென்றார். ரோமானியக் கடவுள் பாக்கஸின் சிலையை வடித்தார். தனது 24-வது வயதில் இவர் வடித்த பியேட்டா சிற்பம் (ஏசுவை தன் மடியில் ஏந்தித் துயரத்துடன் காணப்படும் மேரி மாதா) உலகின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. டேவிட், மோசஸ் சிலைகளும் இவரது புகழை இன்றும் பாடும் சிற்ப வடிவங்கள். l 1499-ல் புளோரன்ஸ் திரும்பினார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்நகரின் சுதந்திர சின்னமாக டேவிட் சிலையை வைக்கத் திட்டமிடப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிப் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலையை முடித்துக் கொடுக்குமாறு மைக்கலாஞ்சலோ கேட்டுக் கொள்ளப்பட்டார். 1504-ல் இவர் இந்தச் சிலையை வடித்து முடித்தார். l அடுத்த வருடமே மீண்டும் ரோமிற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். போப்பின் கல்லறையைக் கட்டும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. இவரது அனைத்துக் கலைப் படைப்புகளும் இவரது பிரமிக்க வைக்கும் திறமைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. இவர் தலைசிறந்த ஓவியர், சிற்பி மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளரும்கூட. l கடிதங்கள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என்று ஏராளமாக எழுதிக் குவித்துள்ளார். ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களில் இவரது அற்புத ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன. l இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இரண்டு நூல்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்திற்கும் சிகரமாக இவரது படைப்புகள் திகழ்ந்தன என்று போற்றப்படுகிறார். l பியேட்டா (Pieta) டேவிட் (David) ஆகியவை இவரது உலகப் புகழ்பெற்ற படைப்புகள். லியானார்டோ டா வின்சியின் சமகாலத்தவரும் அவருடன் இணைத்து மறுமலர்ச்சிக் காலத் தந்தை என்று போற்றப்பட்டவருமான மைக்கலாஞ்சலோ இதே பிப் 18., 1564-ம் ஆண்டில் தனது 89-ம் வயதில் மறைந்தார்.
சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் பிறந்த நாள்:
ம. சிங்காரவேலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படுகிறார். இவர் வசதியான் குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். வழக்குறைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் “இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!” என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார்.ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். மேலும் இவரே இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்). ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார். 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார். தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார். பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.
கோயபல்சின் மிகப்புகழ்பெற்ற ஸ்போர்ட்பாலஸ்ட் உரை, பெர்லினில் உள்ள, 14,000 பேர் அமரும் ஸ்போர்ட்பாலஸ்ட் அரங்கில் நிகழ்த்தப்பட்ட நாள் பிப்ரவரி 18. முதல் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர விரும்பினாலும், பிறப்பிலேயே ஊனமுற்றிருந்த வலதுகாலால் அந்த வாய்ப்பு கோயபல்சுக்குக் கிடைக்கவில்லை. எழுத்தாளராக விரும்பிய பால் ஜோசஃப் கோயபல்ஸ், 1924இல் முனைவர் பட்டம் பெற்றார். 1926இல் நாஸிக் கட்சியில் சேர்ந்த அவர், தன் மேடைப் பேச்சாற்றலால், 1933இல் நாஸிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மக்கள் விழிப்புணர்வு, கருத்துப் பரப்புதல் அமைச்சர் ஆகி, ஊடகங்கள், கலைகள் உள்ளிட்ட மக்கள் தொடர்பு முறைகளனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். யூதர்களின்மீது ஆழமான வெறுப்புணர்வைக்கொண்டிருந்ததுடன், அவர்களை முழுமையாக அழிக்கவேண்டும் என்ற கருத்தைப் பரப்ப, புதிதாக உருவாகியிருந்த ஊடகமான வானொலியையும், திரைப்படத்தையும் பயன்படுத்தினார். 1943 ஃபிப்ரவரி 2இல் நடைபெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையில், ஜெர்மன் படைப்பிரிவு தோல்வியுற்று, சோவியத்திடம் சரணடைந்த பின்னணியில் நிகழ்த்தப்பட்ட ஸ்போர்ட்பாலஸ்ட் உரையில்தான், தாங்கள் நெருக்கடியிலிருப்பதை நாஸிகள் முதன் முறையாக வெளிப்படுத்தினர். ஆனாலும், போல்ஸ்விசம்(பொதுவுடைமை) ஆபத்து ஜெர்மெனியை நெருங்குவதாகவும், ஜெர்மெனி வீழ்ந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டமும் வீழ்ந்துவிடுமென்றும், ஜெர்மன் மக்களும், அச்சு நாடுகளும் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து ஐரோப்பாவைக் காக்கமுடியுமென்றும், அதனால் உடனடியாக ‘முழுமையான போரில்’ ஈடுபடவேண்டுமென்றும் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யுமாறு பேசினார் கோயபல்ஸ். ‘முழுமையான போர்’என்பது, நாட்டின் அனைத்து மக்களையும், வசதிகளையும் போருக்காகப் பயன்படுத்துவதுடன், போருக்குத் தேவைப்படாத உற்பத்திகளை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றதாகக் கூறப்பட்ட அந்தக் கூட்டத்தில், செய்திகளைப் பரப்பக்கூடிய, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே பங்கேற்கச் செய்யப்பட்டிருந்தனர். அரங்கம்கூட, ‘முழுமையான போர் – குறுகிய போர்’ என்ற மிகப்பெரிய பதாகையுடன் அமைக்கப்பட்டிருந்ததுடன், லட்சக்கணக்கான ஜெர்மானியர்களுக்கு வானொலிமூலமும் இந்த உரை ஒலிபரப்பப்பட்டது. 1944 ஜூலை 23இல் ‘முழுமையான போர்’ என்று அறிவித்த ஹிட்லர், அதற்கான ப்ளெனிபொட்டென்ஷயரி(தளபதி)யாக கோயபல்சை நியமித்தார்!
இரண்டாம் உலகப் போரின்போது, சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான், அங்கிருந்த பல்லாயிரம் சீனர்களைப் படுகொலை செய்த, சூக் சிங் என்று குறிப்பிடப்படும் நிகழ்வு தொடங்கிய நாள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த சிங்கப்பூரையும், மலேயாவையும் 1942 ஃபிப்ரவரி 15இல் ஜப்பானியப் படைகள் கைப்பற்றின. சிங்கப்பூரிலிருந்த சீனர்கள், ஜப்பானிய எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்டதால், சிங்கப்பூரைக் கைப்பற்றுவதற்கு முன்பே, அங்கிருக்கும் சீனர்களை அழித்தொழிப்பதற்கான திட்டங்களை, ஜப்பான் ராணுவம் தீட்டிவிட்டது. ‘அந்நிய நாடுகளிலுள்ள சீனர்களைக் கையாளும் நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்’ என்பது, 1941 டிசம்பர் 28இலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. ஜப்பான் ஆக்கிரமிப்பிற்கு கட்டுப்படாதவர்கள், ஒத்துழைக்காதவர்கள் ஆகிய அனைவரும் ‘நீக்கப்படவேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏராளமான சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 18-50 வயதிற்குட்பட்ட அனைத்து ஆண் சீனர்களும், சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு, ஜப்பானியர்களுக்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்யப்பட்ட அனைவரும் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். ஜப்பானியர்களுக்கு எதிரானவர்கள் முடிவு செய்ய எவ்விதமான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அந்தந்த மையத்திற்கான அலுவலரின் விருப்பு வெறுப்புகளின்படியும், ஆள் காட்டிகளால் காட்டப்பட்டவர்களும் ஜப்பானியர்களுக்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்யப்பட்டனர். ஜப்பானுக்கு எதிரானவர்களாகக் கருதப்படாதவர்களின் முகத்தில் அல்லது கையில், ‘சோதிக்கப்பட்டவர்’ என்ற சதுர முத்திரை குத்தப்பட்டது. ஜப்பானுக்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்யப்பட்டவர்களுக்கு, முக்கோண முத்திரை குத்தப்பட்டு, தனியாக ட்ரக்குகளில் கொலைக் களங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும்கூட இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொலையும் செய்யப்பட்டனர். சிங்கப்பூரைத் தொடர்ந்து, மலேயாவிலும் அரங்கேற்றப்பட்ட இந்த இனப்படுகொலையில், ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாகக் கொல்லப்பட்டதாக, சிங்கப்பூரிலுள்ள சீனர்கள் கூறுகிறார்கள். ஹிட்லரின் யூதப் படுகொலைகளின் கொடூரங்களுக்கு இணையாக இவற்றைச் செய்த ஜப்பானின்மீது அணுக்குண்டுகள் வீசப்பட்டதில் தவறே இல்லை என்று தோன்றச்செய்யும் இந்நிகழ்வை மறுக்காத ஜப்பான், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டுமே மறுத்தது. உத்தரவுகள் பெரும்பாலும் வாய்மொழியாக இருந்ததுடன், பல ஆவணங்கள் அழிக்கப்பட்டும்விட்டதால், ஜப்பான் சரணடைந்தபின், போருக்குப் பிந்தைய விசாரணைகளில், இச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க முடியவில்லை. இறுதியாக, 1966இல் 50 மில்லியன் டாலர்களை இழப்பீடாகவும், கடனாகவும் வழங்க ஜப்பான் ஒப்புக்கொண்டது. சிங்கப்பூரை சிறப்பாக நிர்வகித்துக்காட்டும் உறுதியை லீ-க்வான்-யூவுக்கு உருவாக்குவதில் இந்நிகழ்வும் முக்கியப் பங்காற்றியது.