தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்..!

நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில் அதனை கண்டித்து இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜனதாவின் மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிக்கிறார்.

பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பை சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி – வேலைவாய்ப்பு – சமூகநீதி – வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாக பா.ஜனதாவை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.

அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (18-02-2025) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம், உரக்கக் குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!