“கதை கேளு.., கதை கேளு…”

ஸ்ரீரங்கம் கோயில் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு

மின்கைத்தடியின் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!

மின்கைத்தடி மின்னிதழ் “கதை கேளு” எனும் தொகுப்பை அறிமுகம் செய்வதில் பெருமைக் கொள்கிறது. இதில் வரும் சேதிகள் வரலாற்றுக் குறிப்புகள் பல நம்மில் தெரிந்தவர்கள் நினைவுக்கூறவும் தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளவும் கூடிய கதைகளை தொகுத்து தரும் ஒரு முயற்சி.

அதில் இன்றைய “கதை கேளு” தொகுப்பில் நான் பார்க்க படிக்கவிருப்பது…

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என அனைவராலும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இந்த கோயிலின் தனிச்சிறப்பு, அழகு என்று சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது பள்ளி கொண்ட திருக்கோலத்தில் சயனித்திருக்கும் அரங்கன், அடுத்தது பல வண்ணங்களில், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரவேற்கும் ராஜகோபுரம் தான். இந்த வெள்ளை கோபுரத்திற்கு பின்னால், பலரும் அறியாத, அரங்கன் மீது தீராத பக்தி கொண்ட ஒரு பக்தையின் தியாக வரலாறு உள்ளது.

பரப்பளவில் இந்தியாவிலேயே பெரிய கோயில் ஸ்ரீரங்கம் தான். ஸ்ரீரங்கம் கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வெள்ளை கோபுரத்திற்கு பின்னால், பலரும் அறியாத, அரங்கன் மீது தீராத பக்தி கொண்ட ஒரு பக்தையின் தியாக வரலாறு உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரமானது 1987 ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை வெள்ளை கோபுரம் தான் இக்கோயிலின் ராஜகோபுரமாக இருந்துள்ளது. முகலாயர்கள் ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கம் கோயில் பலமுறை சூறையாடப்பட்டுள்ளது என்பதும், எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மூலவர் அரங்கனின் சிலை பலமுறை அடியார்களால் மறைத்து வைத்து, பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கோயிலின் வரலாறு கூறுகிறது.

சரி, இப்போது வெள்ளை கோபுரம் பற்றிய விஷயத்திற்கு வருவோம். 15 ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட டில்லி சுல்தான், ஸ்ரீரங்கம் கோயிலை கொள்ளையடிக்க திட்டமிட்டு, படையெடுத்தார். பலமுறை கொள்ளையடித்த பிறகும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஏதோ ஒரு பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவே சுல்தானின் படைகள் நினைத்தன. இதனால் அது என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கத்திலேயே சுல்தானின் படைகள் முகாமிட்டு இருந்தன.

அந்த கால கட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றி வசித்த கிராமவாசிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிக நெருக்கடியான காலமாகவே இருந்துள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்த வெள்ளையம்மாள், அதற்கான வேலைகளிலும் இறங்கினாள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் சுல்தான் படையெடுப்பு காலத்தில், கோயில் திருப்பணி மற்றும் நடனம் ஆடுவது போன்ற பணிகளை செய்து வந்தவர் தான் வெள்ளையம்மாள். அரங்கன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த, சிறந்த பக்தை. ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டிருந்த டில்லி சுல்தான் படையின் படை தளபதி ஒரு பெண் பித்தன்.

இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட வெள்ளையம்மாள், படை தளபதியுடன் நெருங்கி பழகி வந்தாள். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த வெள்ளையம்மாள், ஒருநாள் படைத்தளபதியிடம் ஸ்ரீரங்கம் கோயிலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷம் எங்குள்ளது என்பது எனக்கு தெரியும் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளாள்.

அந்த காலத்தில் கோயில் கோபுரங்களுக்கு வண்ணங்கள் பூசும் வழக்கம் இல்லாததால் வெள்ளை நிறத்தில் இருந்த இந்த வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு படத்தளபதியை அழைத்துச் சென்ற வெள்ளையம்மாள், அங்கிருந்து அவனை கீழே தள்ளி விட்டு, கொலை செய்கிறாள். பிறகு சுல்தானின் படைகள் தன்னை எப்படியும் சும்மா விட மாட்டார்கள் என எண்ணிய வெள்ளையம்மாள், கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தானும் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

அரங்கன் மீது கொண்ட பக்திக்காக, அவனது கோயிலை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக தனது உயிரை தியாகம் செய்த பக்தையான வெள்ளையம்மாளின் நினைவாகவே இன்று வரை இந்த கோபுரம் வண்ணம் பூசப்படாமல் வெள்ளை நிறத்திலேயே காட்சி அளிப்பதாக சொல்லப்படுகிறது.

இவரின் உயிர் தியாகமும் அரங்கன் சேவைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுவதால், அவரின் பக்தியை கெளரவிக்கும் பொருட்டு இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், கோயில் கட்டப்பட்டது முதல் பல ஆண்டுகளாக ராஜகோபுரமாக இருந்ததால், தனித்துவப்படுத்திக் காட்டுவதற்காகவே இதற்கு வண்ணம் பூசப்படுவதில்லை என்ற காரணமும் சொல்லப்படுகிறது.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!