இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.12) தொடர்ந்து சரிந்து வருகின்றன. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76,188 என தொடங்கியது.
தொடர்ந்து சரிந்து 75,388 என்ற நிலையை சென்செக்ஸ் எட்டியது. பகல் 12 மணி நிலவரப்படி 76,000 என்று நிலையை கடந்தது. சுமார் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியை பொறுத்தவரையில் இன்று வர்த்தகம் 23,050 என்ற நிலையில் தொடங்கியது. காலை 10 மணி அளவில் சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து 22,818 என்ற நிலையை நிஃப்டி எட்டியது. பகல் 12 மணி நேர நிலவரப்படி 23,058 என்ற நிலையை நிஃப்டி எட்டியது.
முன்னதாக, இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் குறியீட்டெண் 1.018 புள்ளிகள் சரிந்து 76.293-ல் நிலைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 310 புள்ளிகள் சரிந்து 23,072-ல் நிலை பெற்றது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர், உலக நாடுகளின் நாணய மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வது போன்ற மாற் றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.