இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
மோதிலால் நேரு நினைவு தினம்….!!
நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார். இவரின் மகன் ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். இந்திய தேசிய காங்கிரஸில் 1888-ல் இணைந்தார். எனினும், 1905-ல் வங்கப் பிரிவினையின்போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார். காந்தியின் அன்பாலும் எளிமையான வாழ்க்கையாலும் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் தனது 69வது வயதில் இதே பிப் 5 (1931)ல் மறைந்தார்.
சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று ,1827 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். திருவாரூரில் (1762) பிறந்தவர். இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா. வீட்டில் செல்லமாக ‘சியாம கிருஷ்ணா’ என்று அழைத்தனர். பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது. இளம் வயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ஆனால் தந்தை அதை விரும்பவில்லை. தாயின் ஆதரவிலும், இறைவன் அருளாலும் அவரது சங்கீதத் திறன் வளர்ந்தது. தந்தையிடம் சமஸ்கிருதம், தெலுங்கு கற்றார். தனது தாய் மாமாவிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமி என்பவரிடம் சாஸ்திரீய சங்கீதத்தின் தத்துவங்கள், தாள, கதி, நடை பேதங்களின் கிரமங்கள் போன்ற நுட்பங்களைக் கற்றார். சங்கீத சுவாமி தன்னிடம் இருந்த அரிய இசைச் சுவடிகளை இவரிடம் கொடுத்து, பச்சிமிரியம் ஆதியப்பரிடம் சென்று சங்கீதம் கற்குமாறு கூறி அனுப்பிவைத்தார். பெரும் இசைஞானியான ஆதியப்பர், சங்கீதத்தின் நுட்பங்கள், ராகங்களின் தன்மைகளை வீணையில் வாசித்தும் பாடிக்காட்டியும் இவருக்கு விளக்கினார். ‘உன் வாக்கில் காமாட்சி தாண்டவம் ஆடுகிறாள்’ என்பாராம். சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்கு கற்ற இவர் இளமையிலேயே பாடல்கள் இயற்றத் தொடங்கினார். முதலில் சமஸ்கிருதத்திலும் பிறகு தெலுங்கிலும் இயற்றினார். தமிழிலும் சில பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சரணாகதி தத்துவத்தை உணர்த்துபவை. ‘தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரர்’ என்று பலரும் இவரை போற்றிக் கொண்டாடினார்கள். உயரமான தோற்றம் உடையவர். காதில் கடுக்கன், ஜரிகையிட்ட பஞ்சகச்ச வேட்டி, அங்கவஸ்திரத்துடன் வீதியில் கம்பீரமாக நடந்து சென்றால், ‘இதோ காமாட்சிதாசர், சங்கீத சாகித்ய கலாநிதி போகிறார்’ என்று மக்கள் மிகுந்த மரியாதையுடன் வணங்குவார்களாம். மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜர், இவரது சமகாலத்தவர். இருவரும் சந்திக்கும்போதெல்லாம் நேரம் போவதே தெரியாமல் பாடிக்கொண்டும், இசை குறித்து பேசிக்கொண்டும் இருப்பார்களாம். சங்கீதத்தில் மிகவும் திறமை வாய்ந்த, அதே நேரம் ஆணவம் மிக்க பொப்பிலி கேசவய்யா என்பவர் பலரையும் போட்டிக்கு அழைத்து அவர்களை வென்று அடிமையாக்கி வந்தார். தஞ்சைக்கு வந்து சரபோஜி மன்னரிடம் தன்னை இசையில் வெல்ல யாராவது உள்ளனரா என்று சவால் விட்டார். அனைவரும் சியாமா சாஸ்திரியைப் பாடச் சொல்லலாம் என்றனர். போட்டி இசையில் விருப்பம் இல்லை என்றாலும் அரண்மனை சென்று பாடினார். ‘இந்த சிறுவனா எனக்குப் போட்டி?’ என்று முதலில் எக்காளமிட்ட அவர் இறுதியில் ‘காமாட்சியம்மன் அருள் பெற்ற சியாமாவே வென்றார். நான் தோற்றேன்’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டாராம். சுமார் 300 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பெயரில் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் பெயரிலும் பல கிருதிகளை இயற்றியுள்ளார். அம்மன் சன்னதியில் ‘நவரத்தின மாலிகை’ என்னும் பிரசித்தி பெற்ற 9 கிருதிகளைப் பாடியுள்ளார். கர்னாடக இசையில் கரைகண்டு, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் புகழ்பெற்ற சியாமா சாஸ்திரி 65 வயதில் (1827) மறைந்தார்.
1819ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் தற்போதைய சிங்கப்பூர் உருவாகக் காரணமான ஒப்பந்தம் கையெழுத்தான நாள். சிங்கப்பூரின் பதிவு செய்யப்பட்ட வரலாறு, 3ஆம் நூற்றாண்டின் சீனக் குறிப்புகளில் பு-லுவோ-சுங் என்ற பெயரில் காணப்படுகிறது. சாவக மொழியில் கடல் துறை என்னும் பொருளுடைய துமாசிக் என்ற சொல்லிலிருந்து உருவான, டெமாசக் என்ற பெயருடைய இப்பகுதிக்கு, 1299இல் வந்த ஸ்ரீவிஜய அரசின் இளவசரர் சாங்-நில-உத்தமா, இங்கு அதுவரை அவர்கள் அறிந்திராத விலங்கான சிங்கத்தைக்கண்டு, சிங்கபுர என்ற பெயரைச் சூட்டியதாக செஜாரா மலேயு என்ற இலக்கியம் கூறினாலும், மாற்றுக்கருத்துகளும் உள்ளன. மஜாபகித் அரசின் படையெடுப்பைத் தொடர்ந்து, இதன் கடைசி அரசரான பரமேஸ்வரா என்னும் இஸ்கந்தர் ஷா, மலாய் தீபகற்பத்திற்கு இடம்பெயர்ந்து, மலாக்கா சுல்தானகத்தைத் தோற்றுவித்தார்.ஐரோப்பியர்களால் மலாய் கைப்பற்றப்பட்டபோது, 1613இல் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்த வணிகக் குடியிருப்பு போர்த்துகீசியர்களால் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த 200 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் முக்கியத்துவமின்றிப் போனது. போர்த்துகீசியர்களிடமிருந்து மலாயைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள், மலாக்கா நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஆங்கிலேய வணிகத்துக்கு இடையூறாக இருந்தது.சுமத்ரா தீவிலிருந்த ஆங்கிலேயக் குடியேற்றத்தின் ஆளுனரான ஸ்டாம்ஃபோர்ட் ராஃப்ள்ஸ், இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு ஒரு துறைமுகம் அமைக்க, கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியத் தலைமை ஆளுனராக இருந்த ஹேஸ்டிங்ஸ் பிரபுவிடம் அனுமதி பெற்றார். டச்சுக்காரர்களுடன் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், இடம் தேடியலைந்த ராஃப்ள்ஸ், பயன்படாமலிருந்த சிங்கப்பூர் முகத்துவாரத்தைக் கண்டுபிடித்தார். அது ஜோகோர் அரசின் கீழிருந்த நிலையில், ஜோகோர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது.வெளிநாட்டிலிருந்த ஜோகோர் சுல்தானின் சகோதரரைக் கடத்தி வந்த ராஃப்ள்ஸ், அவரை இப்பகுதியின் சுல்தானாக்குவதாகவும், அவருக்கு ஆண்டுக்கு 5,000 ஸ்பானிய டாலர்களும், இப்பகுதியின் ஜோகோர் ஆளுனருக்கு 3,000மும் தருவதாகக்கூறி இந்த ஒப்பந்தத்தைச் செய்தார். டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த துறைமுகங்கள் ஏராளமான கட்டணங்களை வசூலித்த நிலையில், சிங்கப்பூர் துறைமுகத்தை, குறைந்த கட்டணத்துடன், கட்டுப்பாடுகளற்ற துறைமுகமான ராஃப்ள்ஸ் அறிவித்ததால், மிகப்பெரிய வளர்ச்சியை சிங்கப்பூர் விரைவில் எட்டியது.
பாப் மார்லி பிறந்த தினம் இன்று.
“பணத்தால் ஒருபோதும் வாழ்க்கையை வாங்க முடியாது!” “இசையின் ஆகப்பெரும் மகத்துவமே, அது உங்களைத் தாக்கும்போது நீங்கள் உங்கள் வலியை மறப்பீர்கள்” பாப் மார்லியின் புகழ்பெற்ற வாசகங்கள் இவை. மனங்களின் வலி நிவாரணம் பாப் மார்லி பிறந்த தினம் இன்று. 1945-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை வாழ்ந்த பாப் மார்லி என்னும் ராபர்ட் நெஸ்டா மார்லி ஜமைக்காவைச் சேர்ந்த பாடகர் மற்றும் பாடலாசிரியர். எளிய மக்களின் வலி வேதனைகளை தனது பாடல்களில் பதிவுசெய்து, ஒரு இசைப்போராளியாக அறியப்பட்டவர். ஜமைக்காவின் கலாசாரம் மற்றும் அடையாளத்தின் சின்னமாகத் திகழ்ந்ததோடு, இருபதாம் நூற்றாண்டின் சர்வதேச இசை மற்றும் கலாசாரத்தின் முக்கிய நபராகவும் விளங்கினார். வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது, சர்வதேச அமைதி விருது உட்பட பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்த உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு* நூறாவது பிறந்ததினம். விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினைக்காக 4 நாட்களுக்கும் மேலாக விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்க்கு எதிராகவும், சாலையோரமாக கேபிள் முலமாக மின்பாதை அமைத்திடவும் 8 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் காத்திருப்பு நூதன போராட்டங்களால் மத்திய, மாநில அரசுகள் திரும்பி பார்க்கும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்த வேளையில் விவசாயிகளுக்கான முதல் உரிமை போராட்டத்தை நடத்தியவர் சி.நாராயணசாமி நாயுடு காமராஜர் ஆட்சியில் விவசாயத்துக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.1957-ல் இதை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவை பகுதியில் போராடினார் உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்காக நடந்த முதல் போராட்டம் இதுதான். அப்போராட்டத்தின் வெற்றி மீண்டும் விவசாயத்துக்கு 16 மணி நேர மின்சாரம் பெற்றுத்தந்தது. தொடர்ந்து விவசாயிகளை ஒன்றுதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டார் சி.நாராயணசாமி நாயுடு.இந்த நிலையில் 8 பைசாவாக இருந்த ஒரு யூனிட் மின்சாரத்தை 10 பைசாவாக உயர்த்தியது அன்றைய தமிழக அரசு. இதை எதிர்த்து 1970 மே 9-ல் கோவை பகுதியில் விவசாயிகளை திரட்டி போராடினார் சி.நாராயணசாமி நாயுடு. நிலைமை மோச மானதால் இறங்கி வந்த அரசு, ஒரு யூனிட் மின்சாரத்தை 9 பைசாவாக குறைத்தது. இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 பைசா ஆக்கியது அன்றைய தமிழக அரசுஇதை எதிர்த்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தலமையில் 17.06.1972-ல் நடத்திய (மாட்டு வண்டி) கட்ட வண்டி போராட்டத்தால் யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. இந்த தொடர் வெற்றிகள் உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவை ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் தலைவராக உயர்த்தியது. இப்படி, 1972-லிருந்து 1992 வரை 64-க்கு மேற்பட்ட விவசாயிகளின் உயிர் தியாகம் தான் இன்று நாம் கட்டணம் இல்லா மின்சாரத்தை உபயோகித்து வருகிறோம்.* போராட்டத்தை வலுப்படுத்தி கட்டணம் இல்லா மின்சாரத்தை பெற்றுத்தந்த *உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 100-வது பிறந்தநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்