இன்றைய முக்கிய நிகழ்வுகள் பிப்ரவரி 04)
தமிழ் மொழிக்கு தனி பெருமையை கொடுத்த, அறிஞர் வீரமாமுனிவரின் மறைந்த நாளின்று. l பிறந்ததென்னவோ இத்தாலி. கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தவர். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். l இங்கு வந்த இடத்தில் மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்து. அதன் பொருட்டுதான் நம் தமிழ் கற்றார். அப்போது நம்ம தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. ஆர்வம் அதிகரித்த நிலையில் சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரைகள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார். l அஹையடுத்து கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர். l இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார். l வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார். l அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரை நடையாக்கினார். l தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார். l உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே. lஇயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை. l தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
“இலக்கணத் தாத்தா” ,மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று. இலக்கணத் தாத்தா” என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர். புரசை – லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்), ஹில்டகார்டு மற்றும் பலர். இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவலபில், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய “The Poets of the Powers” என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம். தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை அவர்களையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும். தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. அரசாங்க இலக்கிய – இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
உலக புற்று நோய் தினம்!
உலகப் புற்றுநோய் தினம் இன்று (பிப்.4) அனுசரிக்கப்படும் நிலையில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் 9 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புற்றுநோய்களுக்கென தனியாக மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ இல்லை. இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இதன் கீழ் நாடு முழுவதிலுமிருந்து 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் புற்றுநோய் திசு மாதிரிகளில் இருந்து 960 மரபணு மாதிரி கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகள் குறித்த தரவுகள் bcga.iitm.ac.in என்ற தளத்தில் வெளியிட்டுள்ளது.
பத்மா சுப்ரமணியம் பிறந்த தினம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை)
தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.
இவரது தந்தை கே. சுப்பிரமணியம், தாய் எஸ். டி. சுப்புலட்சுமி, சகோதரர் எஸ் வி இரமணன் ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.
பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சங்கீத நாடக அகாதமி விருது, 1983, இசைப்பேரறிஞர் விருது, 1994. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை பத்மசிறீ, பத்ம பூஷன், 2003, கலைமாமணி விருது – தமிழக அரசிடமிருந்து காளிதாஸ் சம்மன் விருது (1990 -1991) நாத பிரம்மம் – நாரத கான சபா, சென்னை.பாரத சஸ்த்ர ரக்சாமணி, நேரு விருது (1983) – ஒருங்கிணைந்த இரஷ்யா அரசு புகுகா ஆசிய கலாச்சாரப் பரிசு (Fukuoka Asian Cultural Prize) – ஜப்பான், ஆசியாவில் மேம்பாட்டிற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக. கம்பன் புகழ் விருது, 2011 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை நிசகாந்தி புரஸ்காரம், 2015.
இலங்கை விடுதலை அடைந்த நாள் – இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் வரலாறு கி.மு. 6-ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் 700 பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். கி.மு. 3-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் முதன்முதலாக வர்த்தகத் தளத்தை அமைத்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்தான். அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி இலங்கையில் தனது பலத்தை அவர்கள் விஸ்தரித்துக் கொண்டனர். ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் இலங்கை விடுதலை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமூக நிலையில் இருந்துவந்த தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள் சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. 1958-ல் ஆரம்பித்து இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் ஆயுதேமந்திய உள்நாட்டு போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதெல்லாம் ஏட்டளவு செய்தியாகிப் போனதுதான் மிச்சம்.