இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 27)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 27)

நெல்லை கண்ணன் பிறந்த தினம் 

நெல்லை கண்ணன் (27 சனவரி 1945 – 18 ஆகத்து 2022) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். நெல்லை கண்ணன், திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாபிள்ளை, முத்து இலக்குமி இணையருக்கு நான்காவது மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார்.[2] இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணன் நெ.மாலதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவரான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளரும் ஆவார். இளையவரான ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளர்.

நெல்லை கண்ணன் பல்கலைக்கழக புதுமுக வகுப்பு (Pre University Course) வரை பயின்றவர். அதில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் தம் தந்தையிடம் தமிழ் பயின்றார். நெல்லை கண்ணனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது. நெல்லை கண்ணன் 2022 ஆகஸ்ட் 18 அன்று உடல்நலக்குறைவால் தனது 77வது அகவையில் காலமானார்.

இந்தி எதிர்ப்புப் போரில் தீயிட்டு உயிர் நீத்த மூன்றாவது ஈகி விருகம்பாக்கம் அரங்க நாதன் நினைவு நாள்.

27.1.1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விவரம் அறியாத சிறுவர்களின் போராட்டம் என்று கேலி செய்து கொண்டிருந்த காங்கிரசுத் தலைவர்களை வாய்மூட வைத்தவர்தான் விருகம்பாக்கம் அரங்கநாதன். சென்னை வாசிகளுக்கு கொஞ்சம் அடையாள சொல்ல வேண்டுமென்றால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை தெரிந்திருக்கும். அந்த அரங்கநாதன் யார் என்று எத்தனி பேருக்கு தெரியும்? அந்த அரங்கநாதன் ஒரு மாணவர் அல்ல. மத்திய அரசின் பி எஸ் என் எல் துறையில் பணியாற்றியவர். சின்ன வயசிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார். விருகம்பாக்கத்து இளைஞர்களால் ‘குரு’ என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன் விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைச்சு அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். அது போக அந்த இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் ஏடுகளை படிக்கச் சொல்லியும் கடமையாற்றினார். இதுக்கிடையிலே 60 களின் மத்தியில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட் டம், இந்திய அரசை அசைத்துப்பார்த்த ஒன்று. இந்தியை புகுத்த முயற்சித்த மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சியால், தமிழகத்தில் பெரும் புரட்சி வெடித்தது. மாணவர்கள், தமிழார்வலர்கள் அரசியல்கட்சிகள் ஒன்று திரண்டு இதை எதிர்த்தனர். அதுவரை வழக்கமான பேராட்டமாக மட்டும் தலைநகரை கிடுகிடுக்கச்செய்த இந்தி எதிர்ப்புப்போராட்டம், 1965 ஜனவரி 26-ம்தேதி இந்தியாவை உலுக்கிப்போட்டது. இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் முதல் களப்பலியான சிவலிங்கம் தீயிட்டு மரணித்த நாள் அன்றுதான். 1965 ஜனவரி 26- ம் தேதி, குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக தி.மு.கழகம் அறிவித்திருந்தது. அன்றைய தினம் தமிழர் ஒவ்வொருவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், மாலையில் துக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் திமுக தலைவர் அண்ணா அறிவித்திருந் தார். அதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாவும் மற்ற சில தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அண்ணாவின் அறிவிப்பாலும், கைது சம்பவங்களாலும் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற 24 வயது இளைஞர், இதுபற்றி உணர்ச்சிகரமாக தம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்” என்றார் அப்போது. சென்னை மாநகராட்சியில், சிப்பந்தியாக வேலை பார்த்து வந்த சிவலிங்கம் தீவிர மொழிப்பற்றாளர். வழக்கமாக வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் அவரை குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவு வழக்கமான இடத்தில் காணாமல் அவரது அண்ணன் திடுக்கிட்டார். அதே நேரம் வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்துகொண்டிருந்தது. ஓடிப்போய் பார்த்தார் அவர். அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். 2 பெட்ரோல் டின்கள் அருகில் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்தில், “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன. அதிர்ந்தது தமிழகம். சிவலிங்கத்தின் தியாகம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எங்குபார்த்தாலும் அவரின் அந்த தியாகம் பற்றியே உருக்கமாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானவர்களில் ஒருவர் சென்னை விருகம்பாத்தை சேர்ந்த அரங்கநாதன். காலையில் தீக்குளித்து இறந்த சிவலிங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அரங்கநாதன், அன்றிரவு முழுவதும் அதுபற்றியே பார்ப்பவரிடம் எல்லாம் பேசியிருக்கிறார். சின்ன வயசில் இருந்தே தமிழ்மொழி மீது தீராப்பற்று கொண்ட அரங்க நாதன் ஜனவரி 27ஆம் நாள் நள்ளிரவு 2மணிக்கு விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகில் ஓர் மாமரத்தின் அடியில் நின்று கொண்டு தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். பொழுது விடிந்தது. அங்கிருந்தவர்கள் கருகிய உடலைக் கண்டனர். அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றபட்டுந்த நிலையில் கடிதங்கள் கிடந்தது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவற்றின் நகல்களைப் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. அன்று வீரமிக்க இளைஞனை பறிகொடுத்த சோகத்தில் விருகம்பாக்கம் ஆழ்ந்து கிடந்தது.அதில், “இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே _ இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என எழுதப்பட்டிருந்திச்சு.அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலகநாடுகள் அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டதாக்கும். தற்போதுஅரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவு படுத்தியபடி இருந்தாலும் பல்ருக்கு அறியாதவராகவே இருப்பது சோகம்தான் அதை விட அரங்கநாதனின் நினைவிட்ம் பராமரிப்பின்றி ஹார்வேர்ட் குடோனாகிப் போனதும் வருத்தமாக்கும்.

சர்வதேச இனப்படுகொலை நினைவு நாளின்று (Holocaust Remembrance Day )

ஜனவரி 27 – இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து விஷவாயு மூலம் கொன்றனர். இதுபோல சுமார் அறுபது லட்சம் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர். அந்த இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யப்படைகள் வென்றன. 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் போலந்தின் அவுஷ்விட்ஸ் நகரில் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் ரஷ்யாவின் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நாளே சர்வ தேச இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அ.பத்மநாபன் காலமான நாளின்று

மகாகவி பாரதியாரைப் பற்றிய அதி முக்கியத் தகவல்களைத் திரட்டித் தமிழுலகுக்குத் தந்தவர்களில் முக்கியமானவர் இந்த இரா. அ. பத்மநாபன்.பாரதி எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மட்டுமல்லாமல், பாரதியின் அரிய புகைப்படங்களையும் அவர் மீட்டெடுத்தார். 1917-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள புளியஞ்சேரியில் பிறந்தவர். கோவையில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், இளம் வயதிலேயே நிஜ ‘ஆனந்த விகடன்’இதழில் பணியாற்றத் தொடங்கினார்.‘ஜெயபாரதி’, ‘ஹநுமான்’, ‘ஹிந்துஸ்தான்’ போன்ற இதழ்களிலும் பணியாற்றியிருக்கிறார். பாரதியின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, பாரதியைப் பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், படங்களைச் சேகரித்தார். 1957-ல் பாரதி நினைவு நாளில் ‘சித்திர பாரதி’ எனும் நூலை வெளியிட்டார். அகில இந்திய வானொலி, ‘தி இந்து’(ஆங்கிலம்), அமெரிக்கத் தூதரகம் என்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர். சென்னையில் வசித்த அவர் 2014 இதே ஜனவரி 27-ல் மறைந்தார்.

அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் எலிசபெத் சீமேன் நினைவு தினம்

1889ஆம் ஆண்டு உலகை 72 நாட்களில் சுற்றிவந்த பயணத்தை, நெல்லி ப்ளை என்ற பெயரில் எழுதிவந்த, அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் எலிசபெத் சீமேன் நினைவு தினம் . 1873இல் ஃபிரான்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வர்ன் எழுதிய, ‘எண்பது நாட்களில் உலகைச் சுற்றி’ என்ற புகழ்பெற்ற புதினத்தில் குறிப்பிடப்படும் பயணத்தை நடைமுறையில் சோதிப்பதற்காக, நியூயார்க் வோர்ல்ட் பத்திரிகை, தன்னிடம் பணியாற்றிய நெல்லியை பயணிக்க வைத்தது. உண்மையில், 1870ல் இந்தியாவின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம், பம்பாயிலிருந்து கல்கத்தா வரை இருப்புப்பாதை அமைக்கப்பட்டுவிட்டதாக செய்தி வெளியிட்ட டெய்லி டெலிகிராஃப், அதன்பின் உலகைச் சுற்றும் பயணத்தை 80 நாளில் முடிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், அதனைப் படித்துவிட்டு, 20 ஆயிரம் டாலர் (2016 மதிப்பில் 16 லட்சம் டாலர்) பந்தயம் கட்டி, இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும்தான் அந்தப் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கொஞ்சம் உடைகள், 200 பவுண்டு இங்கிலாந்துப் பணம் (அன்று சூரியன் மறையாத அரசு இங்கிலாந்தினுடையது!), கொஞ்சம் தங்கம், கொஞ்சம் அமெரிக்கப் பணம் ஆகியவற்றுடன் தனியே பயணத்தை மேற்கொண்ட நெல்லி, நீராவிக்கப்பல்கள், தொடர் வண்டிகள் ஆகியவற்றில் மாறிமாறிப் பயணித்து, 72 நாட்களில் மீண்டும் நியூயார்க் வந்தடைந்தார். ஃபிரான்சைக் கடக்கும்போது, அந்தப் புதினத்தை எழுதிய ஜூல்ஸ் வர்ன்-ஐயும் அவர் சந்தித்தார். பயணத்தை முடிக்க ஆகும் காலத்தை கணிக்க போட்டி ஒன்றையும் அப்பத்திரிகை நடத்தியது. காஸ்மோபொலிடன் என்ற பத்திரிகை போட்டிக்குத் தானும் ஒருவரை எதிர்த்திசையில் பயணிக்கவைத்தாலும், அவர் பயணத்தை முடிக்க 76 நாட்களாகிவிட்டது. நெல்லியின் இந்தச் சாதனை அடுத்த சில மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டாலும், உலகைச் சுற்றி முதலில் தனியே பயணித்தவர் அந்த ஒரு பெண்தான்! தற்போது, ‘ஜூல்ஸ் வர்ன் கோப்பை’ என்ற பெயரில், இயற்கைச் சக்தியால் இயங்கும் படகில் உலகைச் சுற்றிவரும் போட்டி 1993 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட தினம்

இன்று. 1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் சோவியத் யூனியனை நிர்மானித்தவரான விளாடிமிர் லெனின் காலமானார். ஆனாலும் லெனினின் உடல் கெடாத வண்ணம் ரசாயன தைலங்களைக் கொண்டு பதப் படுத்தப்பட்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ஜனவரி 27ஆம் நாள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. துவக்கத்தில் அனைத்து மக்களும் பார்வையிட ஒரு மாத காலம் மட்டுமே லெனினின் உடலைப் பாதுகாத்திடக் கருதியிருந்தனர். அதன்பிறகு மக்கள் லெனின் மீது காட்டிய அளவற்ற மதிப்பையும் மரியாதையையும் கண்டு அதனை நிரந்தரமாக பாதுகாக்கும் முடிவை மேற்கொண்டனர். 2012ஆம் ஆண்டு லெனின் உடலை அடக்கம் செய்துவிடலாம் என ரஷ்ய அரசு முடிவு செய்த போதிலும் அம்முடிவு குறித்து எழுந்த மக்கள் எதிர்ப்பு காரணமாக அம்முடிவை அமல் படுத்தும் துணிச்சல் இன்றி லெனின் உடல் இன்னமும் கூட மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் லெனின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. லெனின் உடலை இப்போதும் கூட தினசரி நூற்றுக்கணக்கான மக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு செல்கின்றனர்.

ஆர்.வெங்கட்ராமன் காலமான நாள்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.

இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” (1942) ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார். பின்பு இவர் லேபர்லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபட்டார். 1947-ல் சென்னை மாகாணா பார் கூட்டமைப்பின் செயலாளராகவும், 1951-ல் உச்சநீதிமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார். 1984 ஆம் ஆண்டு இந்திய துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் 1987-ல் ஜனாதிபதியாகவும் தேர்தெடுக்கப்பட்டர். இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் நடுநிலைமை தவராமல் தனது பணியை சிறப்பாக செய்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், தாமரைப் பட்டயம் போன்ற விருதுகளையும், மேலும் இவர் எழுதிய சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம் என்ற நு}லுக்கு ரஷ்யாவின் ‘சோவியத் லேண்ட்” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமன் தனது 98வது வயதில் இதே ஜன 27 (2009)ல் மறைந்தார்.

குழந்தைகளின் ரட்சகன் ஜே. டி. சாலிஞ்சர் நினைவு தினம்.

ஜே. டி. சாலிஞ்சர்(J. D. Salinger, ஜனவரி 1, 1919 – ஜனவரி 27, 2010) ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1951ல் வெளியான தி கேச்சர் இன் தி ரை (The Catcher in the Rye) என்ற புதினத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். மேலும் புகழை விரும்பாது வெகுசனத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்ததாலும் பரவலாக அறியப்பட்டவர். மிகக் குறைவான படைப்புகளையே பதிப்பித்தவர். 1965க்குப் பின் அவருடைய எந்தப் படைப்பும் வெளியாகவில்லை.

அமெரிக்க நாவலாசிரியரான சேலிஞ்சர் 1951ஆம் ஆண்டு “தி கேட்சர் இன் திரை” என்ற தனது முதல் நாவலைப் படைத்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்திரெண்டு. ஆங்கில நாவலில் அது ஒரு அற்புதம் என்று ஒரு விமர்சகர் எழுதினார். முதல் தரமான நாவல்கள் வரிசையில் இடம்பெறும் “தி கேட்சர் இன் தி ரை” பல மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இதனை “குழந்தைகளின் ரட்சகன்” என்ற பெயரில், தமிழில் தந்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். சர்ச்சைக்குரிய இந்த நாவல் பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது என்றாலும் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் இது வரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிருக்கிறது.

கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்ததினம்

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் (பிறப்பு: 27 ஜனவரி, 1946) ஒரு தமிழ்நாட்டு நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆவார். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சூழ்நிலை பாரதம்’ என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பச்சைக்கோயில்’ என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார். தமிழக அரசு இவரது பணிகளைப் பாராட்டும் விதமாகக் கலைமாமணி விருதளித்துள்ளது. நடுவண் அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...