திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு..!

 திருச்செந்தூர் கோவில் கடற்கரை பாதிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு..!

திருச்செந்துார் கோவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு குறித்து, சென்னை தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் விஞ்ஞானிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் அனைவரும், கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக கடற்கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில் முன், 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் சென்று விடாதபடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும், 700 மீட்டர் நீளத்திற்கு மணல் கொண்டு செயற்கையாக கடற்கரை உருவாக்கவும் ஐ.ஐ.டி., பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கான நிதியை யார் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அறநிலையத்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் பிரச்னை எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி 18ம் தேதி திருச்செந்தூர் கோயில் கடற்கரையை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.,22) சென்னை தேசிய கடல் சார் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ராமநாதன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ‘ஐ.ஐ.டி., வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததும் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...