இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள்
இன்னிக்கு ஹேப்பியா பொங்கல் பண்டிகையை கொண்டாடிக்கிட்டி இருக்கற நம்ம தமிழகம். அப்போல்லாம் *மதறாஸ்* அல்லது *மெட்றாஸ் ஸ்டேட்* அப்படீன்னு சொல்லிகிட்டு இருந்தாய்ங்க. கிட்டத்தட்ட 1967 வரை அப்படியே அழைக்கப் பட்டு வந்த, இந்த பூமிக்கு. *தமிழ்நாடு* என்று பெயரை அஃப்ஷியலாக மாற்றுவதற்கு சில பல பெரியவங்க எடுத்துக்கிட்ட முயற்சிகள் எக்கச்சக்கம்… ஒரு வழியாக மெட்றாஸ் ஸ்டேட்டை, *தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் (1969 ஜனவரி 14)- இன்று*தான்.
அதாவது நம்ம இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆந்திர மாநிலமும் இருந்தது. இதுக்கப்புறம் தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து 1953 அக்டோபர் 1ஆம் தேதி ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.இதையடுத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து அக்டோபர் 13, 1956ல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரி போராட்டம் செய்தனர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்த போது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் அண்ணா தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் இந்த “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை அடியோடு ஒழித்து, “தமிழ் நாடு” என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்து இதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை, .1967 ஜூலை 18ல் தமிழக சட்டசபையில் முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். “தமிழ் நாடு” என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், “இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்’ என்று அழைக்க வேண்டும். `மதராசி’ என்று அழைக்கக் கூடாது” என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், “தமிழ் நாடு” பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்” என்று குறிப்பிட்டார்.
தமிழரசு கழகத்தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
“இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும். பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா? முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன். “தமிழ் நாடு” என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் “செயிண்ட் ஜார்ஜ் கோட்டை” என்று இருப்பதை “திருவள்ளுவர் கோட்டை” என்று மாற்ற வேண்டும்.”இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
“இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது. இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “தமிழ் நாடு” என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை” என்று கூறினார்கள்.
10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை “மெட்ராஸ் ஸ்டேட்” என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் “டமில் நாட்” (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.
தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.
அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.’’இவ்வாறு அண்ணா கூறினார்.
பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
பின் அண்ணா எழுந்து, “தமிழ் நாடு” என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்” என்று கூறி, “தமிழ்நாடு” என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் “வாழ்க” என்று குரல் எழுப்பினார்கள். சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது. . அதன்பிறகு 1969 இதே ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் நாளில் இருந்து பெயர் மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கான அரசிதழ் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
✍🏻டெயில் பீஸ்:
தமிழ்நாடு என்பதைக் கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்று தான் அழைக்க வேண்டும் என்று ராஜாஜி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார். அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
தி காம்ரேட்’ என்ற ஆங்கில வார இதழ் முதன்முறையாக வெளியான நாள்
1911 – மவுலானா முகமது அலியின் ‘தி காம்ரேட்’ என்ற ஆங்கில வார இதழ் முதன்முறையாக வெளியான நாள் இந்த இதழைத் தொடங்குவதற்கு முன்பே, அவர், தி டைம்ஸ், தி அப்சர்வர் உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் வீச்சுடைய கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். முஸ்லிம் லீகின் நிறுவனர்களுள் ஒருவனரான அவர், அதன் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த காம்ரேட் இதழைத் தொடங்கியது, வங்கப் பிரிவினைக்கு எதிராக, சுதேசி இயக்கம் நடத்திய போராட்டங்களின் உச்சமாக, வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த முதல் இதழிலேயே, ‘விரிவடைந்துகொண்டே வரும் இந்து முஸ்லிம் பிளவுக்குக் காரணமான வேறுபாடுகளை வெளிப்படையாக அடையாளம் காணுதல்’ என்ற கட்டுரையை எழுதிய அவர், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் தேவையையும் அதில் வலியுறுத்தியிருந்தார். வங்கப் பிரிவினை கைவிடப்பட்டு, மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதை எதிர்த்து காம்ரேட் இதழில் தொடர் கட்டுரைகளை எழுதிய அவர், தி ட்ரிப்யூன், தி பெங்காலி முதலான இதழ்களின் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கடுமையாகக் கண்டித்தார். வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டது முகமது அலியைக் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று நேரு, ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமியர்களுக்காக ஹம்தர்த் என்ற உருது நாளிதழையும் அலி நடத்தினார். துருக்கியர்களுக்கு எதிரான இங்கிலாந்தின் நடவடிக்கைகளை காம்ரேட் இதழில் பட்டியலிட்ட அவர், ஆனாலும் (முதல் உலகப்போரில்) நேச நாடுகளுடனேயே துருக்கியர்கள் நிற்க வேண்டுமென்று எழுதியிருந்தார். அக்கட்டுரைக்காக காம்ரேட் இதழ் தடைசெய்யப்பட்டு, பிரதிகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. 1923இல் குறுகிய காலம் காங்கிரசின் தலைவராகவும் அவர் பணியாற்றினர். 1924இல் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி எழுத மீண்டும் காம்ரேட் இதழை அவர் தொடங்கினாலும், இரண்டாண்டுகளில் நின்றுபோனது. 1930 நவம்பரில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்தியாவுக்கு விடுதலையளிக்காவிட்டால் உயிருடன் திரும்பப் போவதில்லையென்றும், தனக்கு அங்கேயே மயானம் ஒதுக்கும்படியும் கூறினாராம். ஆங்கிலேய அரசால் அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், 1931 ஜனவரியில் பக்கவாதத்தால் அங்கேயே மறைந்து, ஜெருசலேமில் அடக்கம் செய்யப்பட்டார். வங்கத்தின் விடுதலைப்போராட்ட வீரர் முஜிபுர் ரஹ்மான் கான் 1937இல் தொடங்கிய ஆங்கில இதழுக்கு, முகமது அலியின் நினைவாக தி காம்ரேட் என்று பெயரிட்டார்.
மூன்றாம் பானிபட் போர் நடைப்பெற்ற தினம் இன்று
இந்தியா வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த போர்களில், ஒன்றான மூன்றாம் பானிபட் போர் நடைப்பெற்ற தினம் இன்று. ஆப்கானிஸ்தான் மன்னன் அகமது ஷா அப்தாலிக்கும், மராட்டியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் மராத்தியர்களின் வீழ்ச்சி வட இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சிக்கு வித்திட்டது இந்தப் போரில் 60லிருந்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள போர்களில், ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்ப்பலி ஏற்பட்டது இந்தப் போரில்தான். போர் முடிந்த மறுநாள், 40 ஆயிரம் மராட்டியக் கைதிகள் இரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. போரிலும், போரைத் தொடர்ந்தும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மராட்டிய வீரர்கள் உயிரிழந்ததாக வரலாற்றாசிரியர் ஷேஜ்வாக்கர் குறிப்பிடுகிறார். 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகவும், இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றிய போர்களில் ஒன்றாகவும் இப்போர் குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் நினைவு நாள்
ஜனவரி 14 , 2017 தமிழ்நாட்டில் இரண்டு முறை கவர்னராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு. 1990 – 91 மற்றும் 2004 – 2011 வரை தமிழகத்தின் கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். இதேபோல் உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் ஆகிய மாநிலங்களில் கவர்னராக பர்னாலா பணியாற்றியுள்ளார். கவர்னர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் சுர்ஜித் சிங் பர்னாலா. 1991ல் பர்னாலா கவர்னராக இருந்த போது திமுக ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு அறிக்கை கேட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி ஆட்சி கலைப்பு பரிந்துரைக்கு பர்னாலா மறுப்பு தெரிவித்து விட்டார். ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டதால் பர்னாலா பீகாருக்கு மாற்றப்பட்டார். பீகாருக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1991ல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவராக சுர்ஜித் சிங் பர்னாலா விளங்கினார்
அமெரிக்காவின் முதல் சிசேரியன் அறுவையை, டாக்டர் ஜெஸி பென்னெட், தன் மனைவி எலிசபெத்துக்குச் செய்த நாள்
சிகிச்சையளித்துவந்த டாக்டர் ஹம்ஃப்ரி, தாய்-சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாகும் என்று அறுவை மூலம் குழந்தையை எடுக்க மறுத்துவிட்டார். குழந்தைக்காகத் தன் உயிரை இழக்கத் தயாராக இருப்பதாக எலிசபெத் மன்றாடியதால், காட்டுக்குள்ளிருந்த தன் வீட்டிலேயே, இரண்டு பீப்பாய்களின்மீது ஒரு பலகையில் எலிசபெத்தைக் கிடத்தி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பென்னெட் அறுவை செய்து, குழந்தையுடன், இன்னொருமுறை இவ்வாறான வேதனையைத் தவிர்ப்பதற்காக, கருப்பையையும் எடுத்துவிட்டார். எலிசபெத் அதன்பின் 36 ஆண்டுகள் வாழ்ந்தார். சிசேரியனுக்குப்பின் தாய் உயிருடனிருந்தார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று, இந்த அறுவைபற்றி பென்னெட் உயிருடனிருந்தவரை யாருக்கும் தெரிவிக்கவேயில்லை. சந்திரகுப்த மவுரியரின் மனைவி, தெரியாமல் நஞ்சு அருந்தி இறந்துவிட்ட நிலையில், வயிற்றில் சிசு உயிருடனிருக்கும் என்று நம்பிய சாணக்கியரின் அறிவுரையின்படி, இந்தியாவில் கி.மு.320இல், அறுவைமூலம் பிந்துசாரர் பிறந்ததே உலகின் மிகப்பழைய சிசேரியனாகக் கருதப்படுகிறது. ஸ்பெயினின் கேட்டலோனியாவில், 1204இல் சிசேரியன் மூலம் பிறந்த, புனிதர் ரேமண்ட் நானேட்டஸ் பெயரில் உள்ள நான்-நேட்டஸ் என்பதற்கு பிறக்காதவர் என்று லத்தீனில் பொருள். பல்வேறு சமூகங்களிலும், இவ்வாறு அறுவைமூலம் குழந்தை எடுக்கப்பட்ட செய்திகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 1580இல் ஸ்விட்சர்லாந்தில்தான் முதன்முதலாகத் தாய் உயிருடனிருந்தார் என்பதால், பொதுவாகக் குறிப்பிடப்படுவதைப்போல, ஜூலியஸ் சீசர், சிசேரியன்மூலம் பிறந்திருக்க வாய்ப்பில்லை. மூரிஷ் மொழியில், சீசை என்றால் யானை. சீசரின் முன்னோர்களில் ஒருவர் போரில் யானையைக் கொன்றதால் ஏற்பட்டிருக்கலாம் என்பது உட்பட பல காரணங்கள் சீசர் என்ற பெயருக்குக் கூறப்படுகின்றன. லத்தீனில் யுட்டரோ சீசோ என்பது கருப்பையிலிருந்து வெட்டி எடுப்பதைக் குறிப்பதால், இந்த அறுவை சிகிச்சைக்கு சிசேரியன் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆதாரப்பூர்வமான வரலாறு கிடைக்கவில்லை. 1865இல்கூட 85 சதவீத உயிரிழப்புகளைக் கொண்டிருந்த இச்சிகிச்சை, தற்போது பாதுகாப்பானதாகிவிட்டது.
ஆல்பர்ட் சுவைட்சர் பிறந்த தினம்
1911 ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்த சுவைட்சர், கல்வியறிவு இல்லாமல் வறுமையிலும் கடும் நோயிலும் வாடிய ஆப்பிரிக்க நாட்டு ஆதிவாசிகளுக்கு மருத்துவப் பணி புரிய லாம்பர்னே என்னும் ஊருக்குச் செல்லத் தீர்மானித்தார். நண்பர்களும் உறவினர்களும் இம்முடிவை எதிர்த்து அவரைத் தடுக்க முயன்றார்கள். சுவைட்சர் அவர்களின் அறிவுரையைச் செவி மடுக்காமல் லாம்பர்னேயில் காட்டுப் பகுதியில் மரங்களால் கட்டப் பட்ட கட்டிடத்தில் சிறிய அளவில் மருத்துவமனையை அமைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். நச்சுக்காய்ச்சல், தொழுநோய் பூச்சிக்கடி ஆகியவற்றால் அங்கு வாழ்ந்த நீக்ரோ இன மக்களுக்கு சிகிச்சை அளித்தார். சுவைட்சர் ஒரு ஜெர்மானியர் என்பதாலும் அந்தக் கால கட்டத்தில் முதல் உலகப் போரினால் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் பகைமை இருந்ததாலும் பிரஞ்சு அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தது. அவர் செய்த மருத்துவப் பணிக்கு இடையூறு செய்தது. போதிய நிதி வசதியும் மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லாததால் தம் சொற்பொழிவுகள் வாயிலாக கிறித்தவ சமயப் பணிஆற்ற பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். அப்பயணத்தில் கிடைத்த பணத்தையும் பொருள்களையும் கொண்டு லாம்பர்னேயில் உள்ள மருத்துவமனையை நடத்தி விரிவாக்கினார். மனிதநேயத்துடன் இவர் ஆற்றிய 40ஆண்டுக் கால மருத்துவத் தொண்டைப் போற்றிப் பாராட்டி நோபல் பரிசு 1952ல் வழங்கப் பட்டது.