பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம்..!
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது . தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒரேநேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.