இன்றைய முக்கிய நிகழ்வுகள் (03.01.2025)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (03.01.2025)

சாவித்திரிபாய் புலே பிறந்த தினமின்று

இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார் . இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் . தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் 1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. ‘தி பூனா அப்சர்வர்’ இதழ் மே 29, 1852 அன்று இப்படி எழுதியது: “அரசுப்பள்ளியில் படிக்கும் ஆண் பிள்ளைகளை போல பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஜோதிராவ் பள்ளியில் பயில்கிறார்கள். இதற்கு காரணம், அரசுப்பள்ளியை விட இங்கே கல்வி மிக உயர்ந்த தரத்தோடு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தாள் இப்பள்ளியில் மாணவிகள் அரசுப்பள்ளி ஆண்களை விட தாங்கள் அறிவு மிக்கவர்கள் என புரிய வைப்பார்கள். வருகிற தேர்வில் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெறக்கூடும். அரசு ஏதேனும் செய்யாவிட்டால் இந்த பெண்கள் ஆண்களை விட கல்வியில் சிறந்து ஒளிர்வதை கண்டு நாம் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்”. தீண்டப்படாத குழந்தைகள் பள்ளிகளில் சேருவதால் ஆதிக்க சாதி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்கும் சூழல் நிலவி வந்த காலம் அது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு என்று பள்ளிகளை நடத்திய புலே இணையருக்கு பணத்தட்டுப்பாடு இன்னமும் பெரிதாக இருந்தது. அவர்கள் பள்ளியை சேர்ந்த அறங்காவலர் ஒருவர் எழுதிய கடிதம் நிலையையும், சாவித்திரிபாயின் ஆளுமையையும் ஒருங்கே புலப்படுத்துகிறது “ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிற அளவுக்கு நிலைமை நன்றாக இல்லை. கூடுதல் சம்பளம் தரும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போகிறார்கள்…பெண்களின் கல்விக்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார். எந்த சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் அவர் பணியாற்றுகிறார். தகவல்களும், அறிவும் பரப்பப்படும் போது பெண் கல்வியின் நன்மைகளை மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47-வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார். கும்பினியார் கி.பி. 1793-ல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797-ல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799-ல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்துவிடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801-ல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக்கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801-ல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801-ல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று..

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று.. இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக வேலுநாச்சியார் பிறந்தார். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வீர வேங்கை வேலு நாச்சியார்.. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த காரணத்தால், வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதோடு, சிவகங்கையை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த காலத்தில், சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட மருது சகோதரர்களின் பாதுகாப்புடன் சிவகங்கையில் இருந்து தப்பிச் சென்ற வேலு நாச்சியார், ஏழு ஆண்டுகள் தலைமறவாக இருந்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கெதிராக, ஹைதர் அலி உதவியோடு 1780ம் ஆண்டு சிவகங்கையை நோக்கி புறப்பட்ட வேலு நாச்சியாரின் படை, தடைகளை தகர்த்து சிவகங்கைக்குள் நுழைந்தது. நவராத்திரி விழா கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், கோட்டைக்குள் நுழைந்த வேலு நாச்சியார் படை ஆங்கிலேயர்களின் படையுடன் கடுமையாக போர் புரிந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சிவகங்கையை மீட்ட வேலு நாச்சியார், 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இயற்கை ஏய்தினார்.

பழசி இராசா பிறந்தநாள்

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753 – நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...