இன்றைய முக்கிய நிகழ்வுகள் (31.12.2024)
புரூக்ளின் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தினம்
1909ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மான்ஹாட்டன் புரூக்ளின் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட தினம் சரித்திரச் சின்னங்களாக இன்றைக்கும் சில அற்புதமான கட்டடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகள்… என எத்தனையோ உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, அமெரிக்கா, நியூயார்க்கில் பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கும்படி நீளமாகக் காட்சியளிக்கும் `புரூக்ளின் பாலம்.’ இதை வடிவமைத்து, கட்டி முடித்தவர்களின் கதை நம்மைக் கலங்கவைப்பது. கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.. பயனுள்ளதாக இருக்கும் அவர் பெயர் ஜான் அகஸ்டஸ் ரோப்ளிங் (John Augustus Roebling). ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான பிரபல இன்ஜினீயர். `சஸ்பென்ஷன் பிரிட்ஜ்’ (Suspension Bridge) என்று பொறியியல் துறையில் சொல்வார்கள். அந்த வகை பாலங்கள் சிலவற்றை அமெரிக்காவில் சிறப்பாக வடிவமைத்து, கட்டிக்கொடுத்து நல்ல பெயர் எடுத்திருந்தார் ஜான். 1863-ம் ஆண்டு அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. நியூயார்க்கின் மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் நடுவில் `ஈஸ்ட் ரிவர்’ (East River) ஓடிக்கொண்டிருந்தது. `அதற்கு மேல் கண்ணைக் கவரும் பாலம் ஒன்றைக் கட்டினால் என்ன?’ என்று நினைத்தார். நினைத்ததை தன் சக பொறியாள நண்பர்களிடம் பகிர்ந்தார். கேட்டவர்கள் அவரைக் கேலி செய்தார்கள். `இதை மறந்துடுங்க’, `அப்படி ஒரு பாலத்தைக் கட்டவே முடியாது’ என்றார்கள். `சாத்தியமில்லை’ என்று பிறர் சொல்வதை சாத்தியப்படுத்தும் வேட்கை கொண்டவர் ஜான். அந்தப் பாலத்தைக் கட்டி முடித்தே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார். அவருடைய மகன் வாஷிங்டன் ரோப்ளிங். அவரும் ஒரு இன்ஜினீயர்தான். மகனை அழைத்தார். விஷயத்தைச் சொன்னார். முடிவாக “அந்தப் பாலத்தை எப்படியாவது கட்டி முடித்தே ஆக வேண்டும்’’ என்றார். இருவரும் நாள் கணக்கில் விவாதித்தார்கள். மன்ஹாட்டனுக்கும் புரூக்ளினுக்கும் போய்வந்தார்கள். ஈஸ்ட் ரிவரை அங்குலம் அங்குலமாக அலசினார்கள். அந்தப் பாலத்தை எப்படிக் கட்டுவது… அதனால் ஏற்படும் இடர்கள் என்னென்ன… அவற்றை எப்படிக் களைவது? – எல்லாவற்றையும் பேசித் தீர்த்தார்கள். ஜானின் கனவுப் பாலம் நனவாகும் அந்த நாள் வந்தது. அது, 1869-ம் ஆண்டு. வேலை செய்ய ஆட்களைத் திரட்டினார்கள்; வேண்டிய உபகரணங்கள், தளவாடங்கள் அனைத்தையும் சேகரித்தார்கள். களத்தில் இறங்கினார்கள். `ஈஸ்ட் ரிவர்’ என்கிற அந்த நதியின் மேலாக ஜான் கற்பனையாலேயே அந்தக் கனவுப் பாலத்தைக் கட்டிப் பார்த்தார். பாலம் கட்டும் வேலை ஆரம்பமானது. வேலையை ஆரம்பித்து சில மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. பாலம் கட்டுமிடத்தில் ஒரு விபத்து… அல்ல… துயரம். ஜான் ஒரு கப்பல் துறையின் மேடை விளிம்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக துறைமுகத்தை நோக்கி வந்த ஒரு சிறு வணிகக் கப்பல் (Ferry) மோதியதில் அவர் கால் விரல்களில் படுகாயம். கிட்டத்தட்ட கூழாகிப் போயின விரல்கள். மருத்துவர்கள், `கால் விரல்களை எடுத்துவிட வேண்டும், இல்லையென்றால் ஆபத்து’ என்று சொல்லிவிட்டார்கள். விரல்களை அறுவைசிகிச்சை செய்து அகற்றினார்கள். மேற்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜான். `வாட்டர் தெரபி’ என்று ஏதேதோ மாற்று வைத்தியம் செய்து பார்த்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமானது. `டெட்டானஸ்’ (Tetanus – தசைகளில் ஏற்படும் ஒருவகைத் தொற்று) என்றார்கள் மருத்துவர்கள். பிறகு என்ன சிகிச்சை கொடுத்தும் கேட்கவில்லை. அந்த விபத்து நடந்து வெறும் 24 நாள்களிலேயே இறந்து போனார் ஜான். ஜானின் மகன் வாஷிங்டனின் கைக்கு புரூக்ளின் பாலம் கட்டும் பொறுப்பு வந்தபோது அவருக்கு 32 வயது. அப்பாவின் மரணம், வாஷிங்டனைக் கொஞ்சம் உலுக்கித்தான் போட்டது. இருந்தாலும், அப்பாவின் லட்சியம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் பாலம் கட்டுவதில் தொடர்ந்து பல பிரச்னைகள், இன்னல்கள், தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அது, வாஷிங்டனையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் வாய்வு தொடர்பான `கேய்ஸன் நோய்’ (Caisson Disease), `டிகம்ப்ரெஷன் நோய்’ (Decompression sickness) என்றார்கள். ஆனால், அந்த நோய் வாஷிங்டனைப் படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்தில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம் வந்தது. அதன் விளைவாக அவரால் வாய் பேச முடியவில்லை; நடக்க முடியவில்லை. `அவ்வளவுதான் புரூக்ளின் பிரிட்ஜ் பிராஜக்ட்’ என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள். ஏனென்றால், ஜானுக்கும் அவர் மகன் வாஷிங்டனுக்கும்தான் அந்தப் பாலத்தை எப்படிக் கட்டி முடிக்க வேண்டும் என்பது தெரியும். அப்பா இறந்துவிட்டார்; மகன் நடைப்பிணம். பிறகு எப்படிப் பாலத்தைக் கட்டுவார்கள்? நடமாட்டமில்லை, பேச முடியவில்லை. ஆனால், வாஷிங்டனுக்கு எப்படியாவது பாலத்தைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்கிற வேட்கை இருந்தது. தான் நினைப்பதை ஒருவர் புரிந்துகொண்டால் போதும். அதை அவர் மற்ற இன்ஜினீயர்களுக்குத் தகவல் பரிமாற்றம் செய்யலாம். அவர்கள் தான் நினைத்ததைச் செய்துவிடுவார்களே! என யோசித்தார். அந்தத் தகவல் பரிமாற்றத்துக்கு உதவ தன் மனைவியையே தேர்ந்தெடுத்தார் வாஷிங்டன். அப்போது அவரால் ஒரு கையைத்தான் உயர்த்த முடிந்தது. அதிலும் ஒரு விரல்தான் லேசாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அந்த விரலால் தன் மனைவியின் கையைத் தொடுவார். அந்தத் தொடுகை மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டுக் கேட்டு அவர் மனைவி புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத `பிறரின் கையை விரலால் தொட்டுத் தொட்டுச் சொல்லும்’ சங்கேத மொழி. வாஷிங்டனின் மனைவி எமிலி வெகு சீக்கிரமே அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். கணவர் சொன்னதை மற்ற இன்ஜினீயர்களுக்கு எடுத்துச் சொன்னார். மறுபடியும் பாலம் கட்டும் வேலை வேகமெடுத்தது. எமிலி, வாஷிங்டன் ரோப்ளிங்குக்கு 11 வருட காலம் உதவினார். பாலம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1869-ம் ஆண்டு தொடங்கிய பணிகள், 1883-ம் ஆண்டு முடிவடைந்தன. கிட்டத்தட்ட 14 அண்டுகள். அமெரிக்காவே அந்தப் பாலத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தது. முடியாது என்றதை முடியும் என்றார் தந்தை; முடித்தே காட்டிவிட்டார் மகன். கண்ணைக் கவரும் அந்த `புரூக்ளின் பாலம்’ கம்பீரமாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. அந்த அப்பா, மகனின் மன உறுதிக்கும், நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக!
தியாகி விஸ்வநாததாஸ் மறைந்த நாளின்று:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1886ம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாததாஸ்.இளமையிலே மதுரை மாவட்டம் திருமங்கலதிலுள்ள தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். இளம் வயதிலேயே பாடுவதில் அளவுக்கதிகமான ஆர்வம்.1911-ம் காந்திஜி தூத்துக்குடிக்கு வந்திருந்த வேளையில் அவர் பேசுவதற்கு முன்பாகவே பக்திபாடல்களை மேடையில் பாடினர் தாஸ். அவரது இனிய குரலை கேட்ட காந்திஜி ‘உங்கள் குரல் ,நாட்டு விடுதலைக்கு பயன்படட்டும் ‘என்றரர்.அதை வேத வாக்காக கருதி .அன்று முதல் தன பக்தி பாடல்கள்,நாடகங்கள் ,அனைத்திலும் தேச பக்தி பாடல்களையும் சுதந்திர போரட்ட வசனங்களையும் திணித்தார் . அனல் பறக்கும் அவரது பாடல்களும் வசனங்களும் ஆங்கிலேயர்களை எரிச்சலடைய வைத்தது. இனி மேடையில் சுதந்திர பாடல்களைப் பாடக்கூடாது என தாஸ்க்கு உத்தரவிட்டது.. தாஸ் அதைமீறினார் . ஒரு தடவை அல்ல பல தடவை கைதானார். சிறைக்கு சென்றார் .அவர் மட்டும் அல்ல.அவரது குடும்பமே சிறையில் வாடியது.மேடையில் பாடியதற்காக தாசின் மூத்தமகன் சுப்ரமணியன்தாஸ் திருமணமான சில தினங்களிலே பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார் . அப்போது விஸ்வநாததாஸ் கடலூர் சிறையில் இருந்தார்.’இனி விடுதலை போராட்ட பாடல்களை பாட மாட்டேன் என எழுதி கொடுத்து விட்டு,இதுவரை பாடியதற்கு மன்னிபுக்கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகுறேன் ‘என சுப்ரமணியதாசிடம் நீதிபதி சொல்ல கடலூர் சிறையில் இருந்த தன தந்தையிடம் இது குறித்துக் கேட்டிருக்கிறார் சுப்ரமணிய தாஸ் . ‘மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுப்பதை விட சிறையிலே செத்துப்போ ‘ என ஆக்ரோசமாக மகனுக்குப் பதில் அனுப்பினார் விஸ்வநாததாஸ் . இப்படி ,ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திர போராட்ட பிரசாரத்தை மேடைகள் மூலம் அரங்கேற்றிக் கொண்டிருந்த விஸ்வநாத தாஸை,வறுமை எட்டிப்பார்த்தது . அவரது வீடு ஏலத்துக்கு வந்தது .இதை அறிந்தார் அப்போதைய மேயர் வாசுதேவ நாயர் .நீதிக்கட்சியயைச் சேர்ந்தவர் இவர் “நீங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு நீதிக்கட்சிக்கு வந்து சேர்ந்துவிடுங்கள். உங்கள் சொத்தை மீட்டு தருகிறோம் .மாதந்தோறும் குறுப்பிட்ட பணம் தருகிறோம்” என்றார். விஸ்வநாத தாஸ் கட்சி மாறச் சம்மதிக்க வில்லை.அவர் சென்னையில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ‘ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நாடகம் நடத்துங்கள்.உங்கள் கடனை அடைக்கிறோம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறோம்’ என சென்னை கவர்னர் எர்ஸ்கின் பிரபு வைத்த கோரிக்கை ,விஸ்வநாத் தாஸ் கோபமூட்டியது . “உங்கள் பணம் எனக்கு அற்பமானது .பணம் கொடுத்து என் சுதந்திர உணர்வை மழுங்கடித்து விடமுடியாது ” என்றார் வீராவேசமாக .இது ஆங்கிலேயருக்கு ஆத்திரம் மூட்டியது.அவரைக் கைது செய்ய திட்டமிட்டது .அது குறித்துக் கவலைப்படாமல் தனது நாடகங்களை சென்னையில் நடத்திக்கொண்டிருந்தார் . 1940-ம் ஆண்டின் கடைசி நாள்(31.12.1940) வள்ளி திருமணம் நாடகம் .அதில் ஆங்கிலேய அரசை விமர்சித்து கடுமையாக வசனங்கள் வரும் என்பதை அறிந்த ஆங்கிலேய காவல்துறை. அவரைக் கைது செய்யக் காத்திருந்தது. அவரது ஆக்ரோஷமான பாடல்களைக் கேட்க திரளான மக்கள் கூடியிருந்தர்கள். .திரை விலகியது.மயில் வாகனத்தில் முருகன் வேடத்தில் கையில் வேலுடன் பாடதொடங்கினார் தாஸ் .பாடல் உச்சஸ்தாயியில் செல்ல ….மூச்சு திணறல் ஏற்பட்டது .அடுத்த சில விநாடிகளிலே வாகனத்திலிருந்து சரிந்து கீழே விழுந்தார். மேடையிலே இறந்து போனார். மறுநாள் சென்னையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி,கே.பி.சுந்தரம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . இது விஸ்வநாத தாஸ்சின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு
கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம்
அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய, பத்ம விபூசண் பெற்ற கே.ஆர்.ராமநாதன் நினைவு தினம் கல்பதி இராமகிருஷ்ணா இராமநாதன் (Kalpathi Ramakrishna Ramanathan) 28 பிப்ரவரி 28, 1893ல் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் கல்பதியில் பிறந்தார். ராமநாதன் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணக் கல்லூரியில் எம்.ஏ பட்டதாரி பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் மெட்ராஸ் மாகாணக் கல்லூரியில் (சென்னை பல்கலைக்கழகத்தில்) எம்.ஏ பட்டம் இயற்பியலில் பெற்றார். ஏழு ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் கே.ஆர்.ஆர்.ஆர்ல் வேலை செய்தார். இந்த அனுபவம் அவரை இடியுடன் கூடிய வெப்ப மண்டல ஆராய்ச்சி கட்டுரை எழுத உதவியது. பின்னர் 1921 ஆம் ஆண்டில், ராமநாதன் கொல்கத்தாவுக்குச் சென்றார். சி.வி.ராமன் மேற்பார்வையில் திரவங்களில் எக்ஸ்-ரே சிதைவு பற்றிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த வேலைக்கு டி.எஸ்.சி. மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றவர் முதல்முறையாக பெற்றார். அகமதாபாத், பௌதீக ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் முதல் பணிப்பாளர் ஆவார். 1922ல் ராமான் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியராக ராமானுடன் சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் வளிமண்டலவியல் திணைக்களத்தில் ஒரு மூத்த விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அவர் அங்கேயே இருந்தார். அதே ஆண்டில் அவர் தனது முதல் இயக்குனராக அகமதாபாத், பௌதீக ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் (PRL) சேர்ந்தார். அவர் இந்தியாவில் டாப்சன் ஓசோன் நிறமாலை ஒளிப்பட அளவையும் நிறுவினார். இராமநாதன் 1966 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 1984 ஆம் ஆண்டு முதல் 91 வயதில் மறையும் வரை அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பணியாளராக பணி புரிந்தார். 1934ல் இந்திய தேசிய அறிவியல் கழகம், வானியல் அமைப்புக்கான உலகளாவிய வானிலை அமைப்பு விருது வழங்கியது. பத்ம பூசண் விருது (1965), பத்ம விபூசண் விருது (1976), இந்திய தேசிய அறிவியல் கழகம் 1977 ஆம் ஆண்டு வழங்கிய ஆர்யபட்டா பதக்கமும் வழங்கப்பட்டன. அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய கே.ஆர்.ராமநாதன் இதே டிசம்பர் 31, 1984ல் தனது 91வது வயதில் காலமானார்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஜ்நாராயண் நினைவு தினம்.
(Raj Narain, நவம்பர் 1917 – 31 டிசம்பர் 1986) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், லோக்பந்து என அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றவர். இதனால் இந்திரா காந்தி 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க நேரிட்டது. மேலும் நெருக்கடி நிலை காலத்தில் ராஜ் நாராயணன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மது லிமாயியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். 1977-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியை, உத்தரப் பிரதேசத்தின் ரே பரலி மக்களவைத் தொகுதியில், இந்திரா காந்தியை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர். ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் காலமான தினம்
தொ. மு. சி. ரகுநாதன்,சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.
‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.
‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.
தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.
இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் – விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். . இந்த படைப்புகள் அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.
பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.
‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.
‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
1984இல் இந்திராவின் மரணத்தை அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிக அதிகமான பாராளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றி ராஜீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்ற தினம் இன்று உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் ராஜிவ் காந்தியும் ஒருவர். தலைமுறைகள் மாற்றத்தை உணர்த்திய தலைவர்களில் ஒருவரும் ராஜிவ் காந்தியே.
உலகத்திற்கு ஒளி கிடைத்த நாள் இன்று.
ஆம். 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் முதல் ஒளிவிளக்கு உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது. 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ல் அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்தார். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். 18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவே இருந்தது. 1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருடன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்