நிர்பயா
கடந்த 2012 டிசம்பர் 16 இல் தலைநகர் புது டில்லியில் நள்ளிரவில் ஒரு கும்பல் மருத்துவ மாணவி நிர்பயா என்றழைக்கப்பட்ட ஜ்யோதி சிங்கை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தும் கொடூரமாக தாக்கியும் திறந்த வெளியில் தூக்கி எறியப்பட்டு 10 நாட்களுக்குப் பின் மூளை செயல் இழந்ததை அடுத்து சிங்கப்பூர் நகரின் சிறந்த மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இதே 29 டிசம்பர் 2013 அன்று உயிரிழந்தார். நாடெங்கிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கை கோரி எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன ! ஆறு குற்றவாளிகளில் ஒருவர் விசாரணைக்காலத்தில் மரணமுற்றார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை. விதிக்கப்பட்டது. ஆறாவது நபர் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளி என்பதால் சிறார் நீதி மன்றம் விதித்த மூன்றாண்டு தண்டனைக்காலம் முடிந்து விடுதலையானார். தூக்கு தண்டனை குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்பெண் மாண்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்நாட்டில் அரங்கேறி இருக்கும் கொடூரம் மன்னிக்க முடியாதது.
ராபர்ட் புரூஸ் ஃபுட் நினைவு தினம்
(Rabert Bruce Foote Death Anniversary) இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படுபவர் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஆவார். இவர் சென்னையில் இந்தியப் புவியியல் அளவைத்துறையில், நிலவியலாளராகப் பணிபுரிந்தார். இவர் சென்னைக்கு அருகில் பல்லாவரம் மற்றும் அத்திரப்பாக்கம் பகுதிகளில் கல்கோடாரி, முதுமக்கள்தாழி, பானைகள், கற்கால வெட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 5 முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இவை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியவை எனத் தெரிய வந்தது. இந்த அரிய கண்டுபிடிப்பு, பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது எனத் தெரிய வந்தது. இவர் இந்தியாவிலேயே இரண்டாவது மிக நீளமான பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இவர் 42 ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது. இவர் கண்டுபிடித்த கற்கருவிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் 1904ம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகம் எடுத்து காட்சிக்கு வைத்துள்ளது. இவர் 1912ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று இறந்தார். இவரின் நினைவு தினத்தை புவியியல் துறை மற்றும் மானிடவியல் துறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
பழ. கோமதி நாயகம் காலமான நாளின்று
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் தம்பியும், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளருமானவர் பழ. கோமதி நாயகம். இவர் தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் நீர்வளம் மற்றும் மேலாண்மைப் பணிகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியபின் பாசன வடிவமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்தவர். ஆரம்பத்தில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பொறியியல் பட்டமும் (1968), அண்ணா பல்கலைக்கழகத்தில் நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் (1980) பெற்றவர். அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்திலும், ஊட்டா பல்கலைக்கழகத்திலும், நீர்மேலாண்மையிலும், கற்பித்தலிலும் சிறப்புப் பட்டயம் பெற்றவர். பாசன விஷயங்களில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, தமிழகத்தில் முதன்முதலில் பாசன மேம்பாட்டுக்காகத் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் மோகனகிருஷ்ணனை முதல்வராகக் கொண்டு, திருச்சியில் பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தைத் தமிழக அரசு தொடங்கியபோது, அதனுடன் இணைந்து அங்கே அயல்பணிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் வள மையத்திலும் அயல்பணிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சங்க காலந்தொட்டே பாசனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த மேலை நாட்டையும் விடத் தமிழர்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளைச் சங்கத் தமிழ்ப் பாடல்களில் தொடங்கி, மாநிலம் முழுவதும் ஆறுகளிலும் ஏரிகளிலும் மேற்கொண்ட கள ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் மூலம் நிறுவி வந்தவர். இந்த வகையில் இவர் எழுதிய “தமிழர் பாசன வரலாறு’ என்ற நூல், தமிழில் ஒரு முன்னோடி நூல். இப்போதும் பாசனத் தொழில்நுட்பம் கற்கும் பலருக்கும் ஆதார நூலாக விளங்குகிறது இந்த நூல். பூர்வீகத்தில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவரான இவருடைய முனைவர் பட்ட ஆய்வும்கூட, தாமிரவருணி ஆற்றைப் பற்றியதுதான். அன்னார் மறைந்து இன்றும் ஒன்பது ஆண்டுகள் ஆகிறது தாமிரபரணி ஆற்றை முன்வைத்து “நதிநீர்ப் பிரச்னைகளில் சமூகப் பொருளாதாரப் பின்னணி’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். விருப்ப ஓய்வுக்குப் பின் சுவீடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பவானி ஆறு பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டார். ஸ்வீடன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற தண்ணீர் பற்றிய உலகளாவிய ஆய்வரங்கில் பங்கேற்றுத் தன் ஆய்வில் கண்டவற்றை விளக்கினார். சாயத் தொழிற்சாலைகளால் நொய்யல் ஆறு, மற்றும் அமராவதி ஆறுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் களைய உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுக்களிலும் இடம் பெற்றிருந்தார். தான் படித்த மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பாடத் திட்டக் குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டார். பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவர் எழுதியுள்ள 17 நூல்களில் - தமிழக பாசன வரலாறு, நிலவரை திருநெல்வேலி மாவட்டம், பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை, ஆங்கிலத்தில் தமிழக ஏரிப் பாசன முறைமைகளில் பாரம்பரிய நீர் மேலாண்மை நடைமுறைகள், இந்திய ஏரிகளில் புனரமைப்பு மற்றும் மேலாண்மை சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், பழைமையின் அறிவைத் தேடி பாசன ஏரிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமிழீழ அரசு நடத்திய காலகட்டத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று தமிழ்ப் பகுதிகளில் பாசன அமைப்புகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய மேலாண்மை தொடர்பான உத்திகளை வகுத்துக் கொடுத்தவர்.
தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமத்தை பெற்ற நாள்
1891ஆம் ஆண்டு கண்டுபிடிப்புகளின் நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமத்தை பெற்ற நாள் . தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார். இத்தனைக்கும் நம்மை போலவே அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல..
சோவியத்தின் டிமிட்ரி டோன்ஸ்கோய் பயன்பாட்டுக்கு வந்த நாள்
1981 – உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பலான, சோவியத்தின் டிமிட்ரி டோன்ஸ்கோய் பயன்பாட்டுக்கு வந்த நாள் சோவியத்தின் கடற்படைக்காக உருவாக்கப்பட்டு, ரஷ்யக் கடற்படையில் இன்னும் செயல்பாட்டிலிருக்கிற இதுதான், இன்றுவரை உலகில் உருவாக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல். இதைவிட நீளமான நீர்மூழ்கிக்கப்பல்கள் இருந்தாலும், 48 ஆயிரம் டன் பரிமாணம்கொண்ட(டிஸ்ப்ளேஸ்மெண்ட்) இதுதான் மிகப்பெரியது. இரண்டு அணு உலைகளின் அணுசக்தியால் இயங்கும் இது, 1300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் பயணிக்கக்கூடியது. அந்த ஆழத்தில், மூன்று மாதங்களுக்கு, நீருக்கு மேலே வராமலேயே 160 பேர் இருப்பதற்குத் தேவையான திறன்கொண்டது. மாஸ்கோவிலுள்ள க்ரெம்ளின் அரண்மனை வளாகத்தைக் கட்டியவரான, மாஸ்கோவின் இளவரசர்(அப்போது அரசர் என்ற பதவி கிடையாது. க்ராண்ட் ப்ரின்ஸ்தான் ஆளுபவர்!) டிமிட்ரி டோன்ஸ்கோய் பெயர்தான் இதற்குச் சூட்டப்பட்டது. ரஷ்யாவில் அமைக்கப்பட்ட கோட்டை வளாகங்களின் பொதுவான பெயர்தான் க்ரெம்ளின். அதனால், ரஷ்யாவின் பல இடங்களில் க்ரெம்ளின்கள் உள்ளன. இவற்றில், முக்கியத்துவம் காரணமாக மாஸ்கோ க்ரெம்ளினே பொதுவாக க்ரெம்ளின் என்றழைக்கப்படுகிறது. மற்றவை அமைந்துள்ள ஊர்ப் பெயருடன்(உதாரணமாக நோவ்கோரோட் க்ரெம்ளின், கோலோம்னா க்ரெம்ளின், … என்று) குறிப்பிடப்படுகின்றன. 20 நீருக்கடியிலிருந்து ஏவும் நெடுந்தொலைவு(பேலிஸ்டிக்) ஏவுகணைகள், 6 டார்ப்பீடோ ஏவுகுழாய்கள் ஆகிய ஆயுதங்களைக்கொண்ட இதனை, டைஃபூன் என்ற குறியீட்டுப் பெயரால் நேட்டோ அழைக்கிறது. வார்சா ஒப்பந்த நாடுகளில், கிழக்கத்திய முகாம் என்றழைக்கப்படும் சோவியத், சீனா உள்ளிட்ட நாடுகளின் பெயர்களை உச்சரிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, எளிதில் உச்சரிக்கக்கூடிய ஆங்கிலப் பெயர்களை குறியீட்டுப் பெயர்களாக நேட்டோ பயன்படுத்துகிறது. குழப்பம் ஏற்பட்டுவிடாமலிருக்க, வழக்கமான உரையாடலில் அதிகம் பயன்படுத்தப்படாத பெயர்களையே சூட்டும் நேட்டோ, விமானம், கப்பல், மற்றும் அவற்றின் ரகம் ஆகியவற்றுக்கு குழப்பமின்றி பெயர் சூட்டுவதற்கே தெளிவான வரையறைகள் வைத்துள்ளது. ஆனாலும், சோவியத்தின் மற்றொரு நீர்மூழ்கிக்கு அக்கூலா என்று நேட்டோ பெயர் சூட்டியிருக்க, இந்த டைஃபூன் நீர்மூழ்கியை உருவாக்கிய 1976 சோவியத் திட்டத்தின் பெயர் ‘ப்ராஜெக்ட் 941 அக்கூலா’ என்பதால் குழப்பம் ஏற்படுவதும் உண்டு. இந்த டிமிட்ரி டோன்ஸ்கோயின் தரம் அக்கூலா க்ளாஸ் என்றே வகைப்படுத்தப்பட்டு, இவ்வகையில் 1983-89 காலத்தில் மேலும் 5 நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டாலும், டிமிட்ரி டோன்ஸ்கோய் மட்டுமே இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்ட நாள்:
29-12-1993. உலகிலேயே அதிக அளவில் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. அதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் உலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப் பெரிய மொத்தம் 268 படிகள் கொண்ட மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த செம்பிலான புத்தர் சிலை 112 அடி உயரமானதாகும். அமர்ந்த நிலையிலான இந்த புத்தர் சிலை பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரிவதாக சொல்கிறார்கள். ஹாங்காங் நகரில் சுற்றுலா பயணிகள் மறக்காமல் செல்லும் இடம் இது.
ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ் மெக்கின்டோஷின் 257 ஆவது பர்த் டே
தண்ணீர் புகாத ஆடைகளை கண்டுப் பிடித்த ஸ்காட்லாந்து அறிவியலாளர் சார்லஸ் மெக்கின்டோஷின் 257 வது பர்த் டே இன்னிக்கு தான் அதாவது இப்போ மழை நாட்களில் வெளியே செல்ல சிறுவர் முதல் பெரியவங்க வரைக்கு நீர் புகாத ரெயின் கோட் அணிஞ்சு போறோமே. அந்த ரெயின்கோட் எனப்படும் நீர் புகா ஆடைகளை முதன் முதலில் உருவாக்கி, காப்பி ரைட்டோட வணிக ரீதியிலான உற்பத்தியையும் தொடங்கியவர்தான் சார்லஸ் மெக்கின்டோஷ் என்ற வேதியியலாளர். அது சரி எப்படி உருவாக்கினார்..? இளம் வயதில் பலரும் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், மெக்கின்டோஷ் வேதியியல் ஆய்வுகளில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். அப்போது, நாப்தா எனப்படும் தாரின் உபபொருளானது, ரப்பரில் எளிதில் கரைவதை அவர் கண்டுபிடித்தார். பசை போன்ற இந்த புதிய கலவை தண்ணீரை விலக்கும் குணம் பெற்றிருந்ததையும் மெக்கின்டோஷ் கண்டறிந்தார். இதுத்தான் ரெயின்கோட் உள்ளிட்ட தண்ணீரை விலக்கும் ஆடைகளைத் தயாரிப்பதில் இந்த ஆய்வு பெரிதும் உதவியது. இந்த கலவையை துணிகளுக்கு மேல் வைத்து தைத்து முதல் நீர்புகா ஆடையை அவர் வடிவமைத்தார். இதற்காக அவருக்கு 1823ம் ஆண்டில் காப்புரிமை கிடைத்தது. வணிகரீதியில் தண்னீர்புகா ஆடைகளைத் தயாரித்த மெக்கின்டோஷ், 1843ம் ஆண்டு மறைஞ்சார்.
தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் நினைவு நாள்
இன்று டிசம்பர் 29, 2015. தமிழறிஞரான இவர் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். தமிழண்ணல் அவர்கள் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற சிற்றூரில் பிறந்தவர். பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1948 இல் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். வசதி இல்லாததால் கல்லூரியில் சேராமல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களை தனிப்படிப்பின் வழியாகத் தேர்ச்சிப்பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து 1969-இல் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் ஆவர். புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் புதிய நோக்கில் தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றைப் பல கோணங்களில் விவாதித்துள்ளார். சிங்கப்பூர் அரசு பள்ளிகளுக்காக தமிழ் பாட நூல்களையும் எழுதி உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தர் தமிழண்ணல்.தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்தியவர் இவர். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி னார். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர் இவர் பெற்ற விருதுகள் : 1.நல்லாசிரியர் விருது. 21989இல் திரு. வி. க. விருது. 3.1995இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் விருது. 4.மத்திய அரசின் செம்மொழி விருது. 5.தமிழக அரசின் கலைமாமணி விருது. 6.எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, 7.கவிதை நூலுக்காக மதுரை மீனாட்சி விருது.
எகாக்கா கிளெசுக்கா (இசுபொட்டட் எல்க்/Spotted Elk) நினைவு நாள்
முக்கிய அமெரிக்க முதற்குடிமக்கள் தலைவராக இருந்தவரிர். இவர் போரிலும், பேச்சுவார்த்தையிலும் திறமை மிக்கவராக விளங்கினார். 1890 ம் ஆண்டு, தெற்கு டகோட்டாவில், இவரும் இவரோடிருந்த 150 பேரும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையால் படுகொலை ((Wounded Knee Massacre)) செய்யப்பட்டார்கள்.
உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் ஜாக் லூயி டேவிட் (Jacques Louis David) காலமான நாளின்று
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (1748) பிறந்தார். இவர் 9 வயது சிறுவனாக இருந்தபோது, இரும்பு வியாபாரியான தந்தை ஒரு மோதலில் கொல்லப்பட்டார். கட்டிடக் கலை நிபுணர்களான மாமன்களிடம் வளர்ந்தார். அவர்கள் இவரை நன்கு படிக்க வைத்தனர். அம்மா, மாமாக்கள் கூறியபடி, கட்டிடக் கலை பயின்றார். தனிமை விரும்பியான இவருக்குப் படிப்பில் அதிக கவனம் செல்லவில்லை. இவரது ஆர்வம் முழுவதும் ஓவியம் வரைவதில்தான் மையம் கொண்டிருந்தது. தூரத்து உறவினரும், ஓவியருமான ஃபிராங்கோயிஸ் பவுச்சரிடம் ஓவியம் பயின்றார். பின்னர், இன்னொரு ஓவியரான ஜோசஃப் மரி வியென்னிடம் சேர்ந்தார்.
அவர் கூறியபடி, சரித்திரச் சம்பவங்களை ஏராளமாக வரைந்தார். 17 வயதில் தொடங்கிய இவரது ஓவியப் பயணம் நாளுக்கு நாள் மெருகேறியது. 6 ஆண்டுகளில் பிரான்ஸின் சிறந்த ஓவியரானார். ஓவியத் துறையில் மிக உயர்ந்ததான ‘பிரிக்ஸ் டி ரோம்’ விருது பெறும் போட்டியில் 3 முறை தோல்வியைத் தழுவி, 4-வது முறை அந்த விருதை வென்றார். பிரெஞ்ச் அகாடமி இயக்குநராகப் பதவி ஏற்கச் சென்ற ஆசிரியருடன் இவரும் ரோம் நகருக்கு சென்றார். அங்குள்ள சிற்பங்கள், உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் ஆகியவை இவருக்குள் பல புதிய சாளரங்களை திறந்துவிட்டன. ரோமின் அழகிய காட்சிகள், கட்டிடங்களை ஓவியமாக வரைந்தார். பாரிஸ் திரும்பிய பிறகும், ஏராளமான ஓவியங்களை வரைந்தார். அவற்றையும், ஏற்கெனவே ரோமில் வரைந்த ஓவியங்களையும் மக்களின் பார்வைக்கு வைத்தார். அவை மகத்தான வரவேற்பை பெற்றன. 1784-ல் இவர் வரைந்த ‘ஓத் ஆஃப் ஹொராட்டி’ என்ற ஓவியம் பிரான்ஸின் முன்னணி ஓவியராக இவரை உயர்த்தியது. ஓவியம் கற்க இவரிடம் ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர். *கடமை, தேசப்பற்று, விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை கருவாகக் கொண்டு இவர் தீட்டிய ஓவியங்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றன. பிரெஞ்சுப் புரட்சியின் ஆரம்பகட்டத்தில், மக்களிடம் இவை மாபெரும் எழுச்சியை ஊட்டின.மக்கள் இயக்கத்தில் இணைந்து பல பதவிகளை வகித்தவர், பல இடங்களில் எழுச்சிமிக்க உரையாற்றினார். இதனால், ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை கில்லட் வெட்டுக் கத்திக்கு பலியாகும் ஆபத்தில் இருந்து உயிர்த் தப்பினார். பிரிட்டன் செல்வந்தர் ஒருவருக்காக மாவீரன் நெப்போலியன் ஓவியத்தை வரைந்தார். நெப்போலியன் தொடர் வெற்றிகளைக் குவிக்க, அவரது வீரத்தால் டேவிட் கவரப்பட்டார். தன் புகழைப் பரப்பவும், ராணுவத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும் இவரது ஓவியங்கள் பயன்படும் எனக் கருதிய நெப்போலியன், அரசின் தலைமை ஓவியராக இவரை நியமித்தார்.நெப்போலியன் வீழ்ச்சி அடைந்தபோது, ஆட்சியாளர்களால் இவருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறி பிரஸல்ஸ் சென்றார். இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். உலக ஓவிய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ஜாக் லூயி டேவிட் 77-வது வயதில் இதே டிசம்பர் 29 (1825)ல் மறைந்தார்.
குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா பிறந்த தினம்.
இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா பிறந்த தினம். குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார் கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும். இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் 1994ஆம் ஆண்டு மறைந்தார்.
