இன்றைய முக்கிய நிகழ்வுகள் (20.12.2024)
இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு நாள்
உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும் எளியோர் வலியோரிடம் இருந்து உதவி கோரும் உரிமையையும் ஆதரிக்கிறது.நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆக இதன் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரி சுபலட்சுமி என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி நினைவு நாள்
சகோதரி சுபலட்சுமி (R. S. Subbalakshmi) என்றழைக்கப்பட்ட ஆர். எஸ். சுபலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியுமாவார். சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரிவர். இவருடைய தந்தை சுப்பிரமணிய அய்யர். தாயார் விசாலாட்சி. இவர்களது முதல் குழந்தையாகப் பிறந்தவர் சுபலட்சுமி. சைதாப்பேட்டையில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்றார் 1898 இல் சுபலட்சுமியின் 11 ஆவது வயதில் இவர்களது குலமுறைப்படி திருமணம் நடைபெற்றது. ஆனால் உடனே தனது கணவனை இழந்தார். மனம் குலையாமல் கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் எழும்பூரிலிருந்த பிரசிடென்சி மேல்நிலை மற்றும் பயிற்சிப்பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1905 மெட்ரிகுலேசன் தேர்வில் எல்லாப்பாடங்களிலும் ( முதலாவதாத் தேறினார். கல்வி மட்டுமின்றி வீணை மீட்டுவதிலும் பயிற்சியெடுத்துக் கொண்டார். 1908 இல் பி. ஏ வகுப்பில் சேர்ந்து 1911 ஆம் வருடம் முதல் பிராமணக் குடும்பத்துப் பட்டதாரியாகவும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்வு பெற்றார். 1912 ஆம் ஆண்டு இளம் விதவைகளுக்கு கல்வியும், மறுவாழ்வும் அளிக்கக்கூடிய ‘ஸ்ரீ சாரதா ஐக்கிய சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்த ஆசிரமத்தின் ஆஸ்தான மருத்துவராகச் சேவையாற்றினார். இதனால் பல விதவைகள் பலனடைந்தனர். 1922 ஆம் ஆண்டு இந்த அமைப்புக்காக அப்போதைய அரசு 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டிக் கொடுத்தது. இந்த கட்டடத்தில் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபுவின் மனைவி லேடி வெலிங்டன் பெயரைக் கொண்டு பள்ளி ஒன்றைத் தொடங்கினார். பல்வேறு பெண்ணுரிமை இயக்கங்களில் பங்கு கொண்டார். சாரதா சட்டம் என்று சொல்லக் கூடிய குழந்தைகள் திருமண ஒழிப்பு சட்டம் கொண்டுவர பாடுபட்டார். அண்ணி பெசன்ட் அம்மையாருடன் இணைந்து பணியாற்றியவர். சென்னை மாகாண சபையில் எம்.எல்.சி. யாக பணியாற்றினார். ஆங்கில அரசு இவரது சேவையினைப் பாராட்டி ‘கேசரி ஹிந்து’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1969 ஆம் ஆண்டு தமது 82 வது வயதில் மறைந்தார்.
1971 – ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்ற அமைப்பு ஃப்ரெஞ்ச்சு மருத்துவர்களால் உருவாக்கப்பட்ட நாள்
டிசம்பர் 20. இயற்கையாகவும், மனிதனாலும் உருவாகும் பேரழிவுகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இனம், மதம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடுமின்றி உதவும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. 1967-70இல் நடைபெற்ற நைஜீரிய உள்நாட்டுப்போரில் நேரடியாகச் சுமார் ஒரு லட்சம் பேரும், பட்டினியால் இருபது லட்சம் பேர் வரையும் பலியாயினர். நைஜீரியாவிலிருந்து பயாஃப்ரா மக்கள் பிரிய முயற்சித்தபோது அவர்களை அடக்க நைஜீரிய அரசால் தொடுக்கப்பட்ட இப்போரின்போது, அப்பகுதிக்கு உணவு, மருந்துகள் செல்வதை அரசுப் படைகள் தடுத்ததாலேயே இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் மருத்துவ உதவியில் ஈடுபட்ட செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர்களும் நைஜீரிய ராணுவத்தின் தாக்குதல்களுக்குள்ளாயினர். இவற்றுக்கு செஞ்சிலுவைச்சங்கம் உறுதியான எதிர்ப்புத் தெரிவிக்காமல், நைஜீரிய அரசுடன் இணக்கமாக நடந்துகொண்டது. இதனால், பாகுபாடின்றி இயங்கும் ஓர் அமைப்பு தேவை என்று முடிவெடுத்த ஃப்ரெஞ்ச்சு மருத்துவர்கள் ‘அவசரகால மருத்து, அறுவைசிகிச்சை தலையீட்டுக் குழு’ என்ற அமைப்பினை 1971இல் உருவாக்கினர். 1970இல் வங்கத்தில் ஒரே இரவில் 5 லட்சம் பேருக்குமேல் உயிரிழந்த(இத்தொடரில் 2018 நவம்பர் 13இல் இடம்பெற்ற) போலா புயலின் சேதங்களைத் தொடர்ந்து, இயற்கைப் பேரிடர்களில் உதவுதற்காக, ‘ஃப்ரெஞ்ச்சு மருத்துவ உதவி’ என்ற மற்றொரு குழு, இவர்களுக்குத் தொடர்பின்றி, வேறு மருத்துவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இவையிரண்டும் இணைக்கப்பட்டே, ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ அமைப்பு உருவானது. தற்போது 150 நாடுகளைச் சேர்ந்த 67 ஆயிரம் உறுப்பினர்கள், பல்வேறு பாதிக்கப்பட்ட நாடுகளிலும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ள இவ்வமைப்பு, அதற்கான நிதியை நன்கொடைகள்மூலமே பெறுகிறது. சுதந்திரமான செயல்பாடுகளில் குறுக்கீடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும் தனி மனிதர்களின் சிறு நன்கொடைகளையே இவ்வமைப்பு ஏற்கிறது. மிகவிரைவாக உதவிக்கு வந்துவிடுவதாகப் பெயர் பெற்றிருக்கும் இவ்வமைப்புக்கு 1999இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தீவிரவாதத்துக்கெதிரான போர் என்று அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நாடுகளில், அவர்களால் தாக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மனிதநேய உதவிகள்கூட, எதிரிகளுக்கான உதவிகளாக கூட்டணி நாடுகளால் பார்க்கப்பட்டு, பாதுகாப்புகள் மறுக்கப்பட்டதால், அப்பகுதிகளில் இவ்வமைப்பின் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உயிரிழந்ததும் நிகழ்ந்துள்ளது.
போயிங் 707 விமானம், தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட தினம் இன்று (1957).
அ. வேங்கடாசலம் பிள்ளை பிறந்த நாள்
டிசம்பர் 20- 1886 அ. வேங்கடாசலம் பிள்ளை (டிசம்பர் 20, 1886 – டிசம்பர் 4, 1953) தமிழறிஞர். ”கரந்தைக் கவியரசு” என அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர்.” கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய “தமிழ்ப்பொழில்” ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். “பிரேரிக்கிறேன்” போய் “முன்மொழிகிறேன்” என்றும், “தீர்மானம்” போய் “முடிவு” என்றும் வந்தன. “உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்” என்று “தமிழ்ப் பொழில்” இதழில் கவியரசு எழுதினார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.