இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிச.20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதலே சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள இடங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.