மெரினாவில் உணவுத் திருவிழா..!
சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் உணவுத் திருவிழா டிசம்பர் 20ம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னை, மெரினா கடற்கரையில் நாளை தொடங்கி டிசம்பர் 24 வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதனை துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த உணவுகளும் இடம்பெறும். மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை தயிர் பூரி, கோவை கொங்கு மட்டன் பிரியாணி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, மயிலாடுதுறை இறால் வடை, வேலூர் ராகி கொழுக்கட்டை, காஞ்சிபுரம் கோவில் இட்லி, தருமபுரி ரவா கஜூர், நாகப்பட்டிணம் மசாலா பணியாரம், கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், கரூர் தோல் ரொட்டி, மதுரை கறி தோசை, தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு,
கன்னியாகுமரி பழம் பொறி, நீலகிரி ராகி களி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, விருதுநகர் கரண்டி ஆம்லெட், புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, திருச்சி நவதானிய புட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உணவு திருவிழாவில் இடம்பெறும். 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து வழங்குவார்கள்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களும் மூன்று அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் நாளை (டிசம்பர் 20) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும்.
தொடர்ந்து 24ம் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். உணவுத் திருவிழாவுக்கு வரும் மக்களின் வசதிக்காக லேடி விலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம், ராணி மேரி கல்லூரி வளாகங்களில் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம்.