களேபரமான நாடாளுமன்ற வளாகம்..!

 களேபரமான நாடாளுமன்ற வளாகம்..!

பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அப்போது, அம்பேத்கரை பற்றி அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில், பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு, போராட்டம் ஆகியவற்றால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் மதியம் 2 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போது, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...