இன்றைய முக்கிய நிகழ்வுகள் (19.12.2024)
விகடன் (ரியல்) எம்.டி. பாலு காலமான நாளின்று
இந்நாளில் சென்ட்ரல் ஜெயிலுக்குள் போய் எம்டியை பார்த்த த்ரில் அனுபவத்தை எழுதத் தோணியது..! ஆனால் செல்லினம் உதவவில்லை..இதை அடுத்து இன்னொரு சிஸ்டத்தில் அமர்ந்து அழகியில் டைப்பிடத் தொடங்கினால் கரண்ட் கட்! எனவே மீள் செய்திக்குறிப்புகள் இதோ விகடன் குழும நிறுவனங்களின் ஆசிரியராக இருந்து பின்னளில் சேர்மன் என்று ஒதுக்கப்பட்ட.எஸ்.பாலசுப்ரமணியன் (79), கடந்த இதே 19.12.(2014) அன்று இரவு 7.30 மணிக்கு காலமானார். தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தவப்புதல்வனான எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு,அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தனித்துவமாக வந்து கொண்டிருந்த ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். கிட்டத்தட்ட 50 ஆண்டு கால தமிழ் இதழியலின் பிதாமகனாகத் திகழ்ந்த எஸ்.பாலசுப்ரமணியன், தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. எழுத்துக்கு உயிர் நம்பி அதையும் எழுதுவோர் மற்றும் படிப்போர் ஒவ்வொருவரையும் உணர வைத்தவரவர். புலனாய்வு இதழியலின் சக்சச் முன்னோடியான ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையும், ஊடகத் துறைக்குக் கொடையான மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர் பட்டி, டிங்கரிங் பார்த்து நனவாக்கிய நல்ல கனவுகள். இந்த வி.குமார் ஆகிய ஆந்தையின் அத்தனை அபிஷ்டுகளையும் பொறுத்தாண்டவர் . சமூகநலக் காரியங்களுக்காக லட்சக்கணக்கான வாசகர்களை ஒன்றுதிரட்டி, நிறைய நல்ல விஷயங்களை நிகழ்த்திக் காட்டிய சமூக நல நிர்வாகி. பின்னாளில் (வேறொரு காரணத்துககக) மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல் தானமாக அளிக்கப்பட்டது. ஹூம்..அன்னாரின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்ற அடியேனின் கனா மட்டும் இன்னும் நிறைவேறவில்லை.. ஜெய் எம்டி பாலு சார்
முத்தமிழ்க் காவலர் என்றழைக்கப்பட்ட கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை நினைவு தினம் இன்று.
திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் . நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பிளாஸ்டிக் குறைக்கும் நாள்
இன்றைய காலகட்டத்தில் என்னதான் சட்டம் போட்டு தடை செய்ய முயன்றாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் அதிகரித்துக் கொண்டே போகிறது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம்! கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் எனக் கூறப்பட்டு வருகிறது. இனியாவது பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க முயற்சி செய்வோம். அதற்கு முதலில் இயன்றளவு ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்வதும், மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும், பிளாஸ்டிக் குப்பைகளைப் பகுப்பாய்ந்து பிரித்து அழிப்பதும் கடமையாக மேற்கொள்ள வேண்டும். பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டே படைக்கப்படுகின்றன. எனவே மானுட சிந்தனை மேலோங்க அனைத்து உயிரிங்களின் நேசமிகு மனிதர்களாக சூழலியல் பாதுகாப்பில் சிறிதளவேனும் அக்கறையோடு செயல்படுவோம்.
கோவா விடுதலை நாள்
இதே டிசம்பர் 19 1961, கோவா மாநிலம் போர்த்துகீசிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்தியாவுடன் இணைந்தது. இதனையடுத்து இன்றைய தினம் கோவா விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களால் கோவாவில் அதிகாரம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், இந்தியாவில் உண்டான சுதந்திர வேட்கை, கோவாவிலும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு 17-12-1961 அன்று இந்திய படைகளை கோவாவுக்கு அனுப்பி வைத்தார். முப்படைகளும் போரில் ஈடுபடுத்தப்பட்டன. இந்திய இராணுவத்தளபதி கான்டேத் முன்னின்று நடத்த ராணுவ தளபதி ஜே.என்.சவுத்திரி, விமானப் படை தளபதி பின்டோ, கப்பல் படை தளபதி பி.எஸ்.சோமான் ஆகியோர் தலைமையில் படைகள் பாய்ந்தன. நாற்பது மணிநேரத்துக்குள் கோவா இந்தியா வசம் வந்தது.இதன் பயனாக 1961-ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் கோவா, இந்தியாவுடன் இணைந்தது. இதேபோல் போர்ச்சுகீசிய ஆதிக்கத்தில் இருந்த டையூ டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவையும் இந்தியாவுடன் இன்றைய தினத்தில் இணைந்தன. கடந்த 1987-ஆம் ஆண்டு தனி மாநிலம் அந்தஸ்து பெற்றது.
டல்ஹவுசி பிரபு காலமான நாளின்று
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு ( 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்டவ்ர் ஒரு ஸ்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாக போக்கே, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது. டல்ஹவுசி பிரபு (1848 – *1856) பற்றிய சில தகவல்கள் இவர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள்:
- அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)
- இரண்டாம் சீக்கிய போர் -1849
- இரண்டாம் பர்மியப் போர் – 1852
- இரயில் பாதை அறிமுகம் – 1853
- தபால், தந்தி அறிமுகம்
- சார்லஸ் வுட் கல்வி அறிக்கை – 1854
- பொதுப்பணி துறை
அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின அவகாசியிலிக் கொள்கை படி பிடிக்கப்பட்ட நாடுகள் – சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854) அவகாசியிலிக் கொள்கை படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு – அயோத்தி 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டு சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக பதவியேற்றார். 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது. பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1953 பம்பாய் இருந்து தானே வரை (34 கி.மீ.) போடப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌரா வில் இருந்து ராணிக்கஞ்ச் வரை போடப்பட்டது. 1856 – சென்னை இருந்து அரக்கோணம் வரை போடப்பட்டது. 1853 – கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது. 1852 – ஆம் ஆண்டு ‘ ஓ ஷாகன்னசே’ என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிபரபாளராக நியமனம் செய்யப்பட்டது. 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852 கராச்சியில் வெளியிடப்பட்டது. 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட் கல்வி அறிக்கை ‘ Woods Dispatch’ வெளியிடப்பட்டது. சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது. ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. 1856 விதவை மறுமணம் சட்டம் ( Widow Remarriage Act – 1856) இயற்றப்பட்டது. விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் – ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது 1853 ICS தேர்வு துவக்கப்பட்டது.
பிரான்சிஸ் நேப்பியர் நினைவு நாள்
பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier, செப்டம்பர் 15, 1819 – டிசம்பர் 19, 1898) வியன்னா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிலாந்தின் தூதராக பணியாற்றியவர். 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால்தான் கட்டப்பட்டதாக்கும். 1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது. பணிகள் நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார். ரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நேப்பியர் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் அமைக்க உதவியதால் அவரது பெயரே அந்த மையத்துக்கு சூட்டப்பட்டது. பாசன திட்டங்கள் பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். முல்லை பெரியார் அணைக்கான திட்டமிடல் இவரது ஆட்சி காலத்திலேயே நடைபெற்றது. சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது. . இறப்பு 1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார். இத்தாலியில் இதீ டிசம்பர் 19, 1898 இல் தனது 79ஆம் வயதில் காலமானார்.
அலாய்ஸ் அல்சீமர் (Alois Alzheimer) காலமான நாள்
ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணரும், தலைசிறந்த நரம்பியல் மருத்துவருமான அலாய்ஸ் அல்சீமர் (Alois Alzheimer) காலமான நாள் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள மார்க்பிரைட் என்ற கிராமத்தில் (1864) பிறந்தார். தந்தை சொந்த ஊரில் ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்து வந்தார். தலைசிறந்த ராயல் ஹ்யுமானிஸ்டிக் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார். இளம் பருவத்திலேயே அறிவியலில் நாட்டம் கொண்டார். மருத்துவக் கல்வியிலும் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிக் கல்விக்குப் பிறகு அஷ்பென்பர்க், டுபிங்கன், பெர்லின், வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று 1887-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பிறகு பிராங்க்பர்ட்டில் பல மருத்துவமனைகளில் பணியாற்றினார். மருத்துவராக, பேராசிரியராகப் பணியாற்றினாலும் நோயியல் குறித்த ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நரம்பு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பிரபல உளவியல் நிபுணர்கள், நரம்பியல் விஞ்ஞானிகளுடன் இணைந்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மூனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர், உடற்கூறியல் ஆய்வக நிறுவனத்தில் பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். விரைவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளராக அறியப்பட்டார். தனது தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக, ஐரோப்பாவின் நுண்திசு நோய்க் கூறியலின் (Histopathology) முன்னணி நிபுணராகப் புகழ்பெற்றார். லுட்விக் மாக்ஸ்மில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, பிரெட்ரிக்-வில்ஹெம் பல்கலைக்கழகத்தின் நரம்பியல், உளவியல் துறையிலும், ரெக்லாவ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். மாணவர்கள் போற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தார். பிராங்க்பர்ட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் எமில் கிரேப்ளின் என்ற பிரபல ஜெர்மன் உளவியல் நிபுணரின் நட்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மறதியால் அவதிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்த நோய் குறித்து ஆராயத் தொடங்கினார். அந்தப் பெண் இறந்ததால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூளையை தனியே பிரித்தெடுத்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தார். பிரேதப் பரிசோதனை நடைபெற்ற 320 நோயாளிகளின் நோயியல், உடற்கூறியலை ஆராய்ந்து, ஏறக்குறைய 7 ஆண்டுகள் இதுசம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியில் அந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தார். மூளையில் அவரால் கண்டறியப்பட்ட இந்த முரண்பாடுகள் பின்னாளில் அல்சீமர் நோய்க்கான அறிகுறிகளாக கருதப்பட்டன. மூளை நோய்க் குறியியல் மற்றும் முதுமை அறிகுறிகள் குறித்து 1906-ல் விரிவுரையாற்றினார். தன் ஆராய்ச்சியில் கண்டறிந்தவற்றையும் அதுகுறித்த தனது விரிவுரையையும் கட்டுரையாக வெளியிட்டார். மருத்துவ உலகில் புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு ‘அல்சீமர்’ என்று தனது நண்பரின் பெயரையே வைத்து, அந்த நோயை 1910-ல் உலகுக்கு அறிமுகம் செய்தார் இவரது நண்பர் எமில். அதற்கான சிகிச்சை முறைகளையும் அலாய்ஸ் அல்சீமர் கண்டறிந்தார். மறதி நோய் மட்டுமல்லாது மூளையில் ஏற்படும் கட்டி, கைகால் வலிப்பு, மூளையின் வாஸ்குலார் நோய்கள், ஆரம்பகால முதுமை, மறதி உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். குறிப்பாக ‘நரம்பியல் நோய்களின் தந்தை’ எனப் போற்றப்பட்டார்.
பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த தினம்.
தமிழக முதிர்ந்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆன இவரே இன்றைய முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சிக்கு முதலும் ,முழுமையாகவும் கொடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்தவர் என்று சொன்னால் அது மிகையல்ல. . அன்பழகன் தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி ,கல்வி , சுகாதார,சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 1977 முதல் 2020 (இல் தான் இறக்கும்) வரை இருந்துள்ளார். இவர், ‘இனமானப் பேராசிரியர்’ என அழைக்கப்பட்டார். இதை எல்லாம் தாண்டி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால ஆத்மார்த்த நண்பராக இருந்தவர் என்பதே தனி எபிசோட்.