இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.12.2024)

இன்று – சர்வதேச இடம்பெயர்வோர் தினம்

உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடை பிடிக்கப் படுகிறது.

சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர். இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

இடம்பெயர்வோர் என்பவர், ‘சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தோரை குறிக்கிறது’. இதைத் தவிர உள்நாட்டிலேயே இடம்பெயர்வோரும் உள்ளனர்.

ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல்,அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர்.

இடம் பெயர்ந்தோருக்கு ஒவ்வொரு அரசும் பாதுகாப்பு, சலுகைகள் வழங்க வேண்டும். இடம்பெயர்வோரை தவிர்க்கும் போது, அந்நாட்டிற்கு தான் இழப்பு. இவர்களை அங்கீகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் உயரும்.

சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

டிசம்பர் 18 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனப் படி இனம் , மதம் , மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மை இன மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதியிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசு வழி செய்ய வேண்டும் . மேலும் அவர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பரப்புவதற்கான வழிசெய்து தர வேண்டும் எனக் கூறுகிறது . இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25(1) இன் படி மதச்சுதந்திரத்தை அனுபவிக்கவும் , கடைப்பிடிக்கவும் , பரப்பவும் எல்லோருக்கும் சம அளவில் உரிமை உண்டு . சிறுபான்மையினருக்கு தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றவும் , கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வாகம் செய்யவும் உரிமை தரப்பட்டு உள்ளது . எனினும் மத பயங்கரவாதிகளால் சிறுபான்மை மக்களுக்கு பல அச்சுறுத்தல்கள் உள்ளன . சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்க பல திட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன . ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் மூலம் கடைப்பிடிக்கப்படுகிறது . எந்த ஒரு நாட்டிலும் மதம், மொழி, இனம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் அந்த நாட்டின் பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டுச் சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் சாரமாகும். சிறுபான்மையினர் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளை மதித்து நடக்க வேண்டும்; அவற்றைப் பரப்புவதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும்; சமூகங்களுடனான அவர்களுடைய பரஸ்பர நட்பும், மரியாதையும் பேணப்பட வேண்டும்; இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பவை அந்த அறிவிப்பின் அடிப்படை அம்சங்களாகும். இவை ஐ.நா. உடன்படிக்கை தொடர்பான அனைத்து நாடுகளின் விதிமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகள் மீறப்பட்டு, அவற்றால் எந்த ஒரு நாட்டின் எந்த ஒரு சிறுபான்மை மக்கள் பிரிவாவது பாதிக்கப்படுமானால், அதுகுறித்து அந்தப் பிரிவினர் சர்வதேச அமைப்புகளில் முறையிடவும், அந்த அமைப்புகள் அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐ.நா. அமைப்பின் அறிவிப்பு வழிவகை செய்துள்ளது. இவற்றை நேர்மையாக நடைமுறைப்படுத்தும் அரசுகளே நிஜமான ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.

தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் காலமான தினமின்று

தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) காலமான தினமின்று

திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை அதிகாரி. சிறுவயதிலேயே தாயை இழந்த வர், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே ஏராளமான ஆங்கிலப் படைப்பு களைப் படித்தார். எழுத்தாளராக வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்தார். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தாலும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்க்கும் விதமாக, உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்தினார். ‘சுதேசமித்திரன்’ இதழில் 1955-ல் சிறுகதை வளர்ச்சி குறித்த கட்டுரை எழுதினார். அதன் பிறகு, ஒரு விமர்சகராகவும் தீவிரமாக இயங்கினார். தமிழில் அதிக எண்ணிக்கையில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் என குறிப்பிடப்பட்டார். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் தன் இதழ்களில் குறிப்பிட்டு, வாசகர்களிடையே அவற்றைக் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக் கலை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் என இவரது படைப்புலகம் விரிகிறது. இவரது ‘பொய்த்தேவு’ நாவல் இலக்கிய உலகில் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.

தான் வாழ்ந்துவந்த காலத்தின் போக்கு, எழுத்தின் வகைகள், நண்பர்கள், சங்ககால, தற்கால படைப்பாளிகள் முதலானவை குறித்து எழுதினார். சமரசம் செய்துகொள்ளாத விமர்சகரான இவர், உள்ளுணர்வின் உந்துதல்கள் அடிப்படையிலேயே செயல்பட்டார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடியவர். சலிக்காத செயல்வேகம் கொண்டவர். பல பிரபல இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரைப் பற்றி ‘க.நா.சு.வின் இலக்கிய வட்டம்’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். வாசகர்களாலும் இலக்கிய வட்டாரத்திலும் ‘க.நா.சு’ என அன்போடு அழைக்கப்பட்ட க.நா.சுப்ரமணியம் 76-வது வயதில் (1988) மறைந்தார்.

நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சி.சு.செல்லப்பா நினைவு தினம்..!

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 – டிசம்பர் 18, 1998) தமிழ் படைப்புலகில் ஒரு முக்கியமான ஆளுமை. ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், விடுதலைப் போராட்டத்தில் பங்கு எடுத்தவர். தேர்ந்த இலக்கிய விமர்சகரான சி.சு.செல்லப்பா, ‘எழுத்து’ பத்திரிகையைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிகையின் மூலம் ஊக்குவித்தார். சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி உள்ளிட்ட பலர் சி.சு.செல்லப்பாவால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் ‘வாடிவாசல்’, ‘சுதந்திர தாகம்’ போன்றவற்றை எழுதிய செல்லப்பா, காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ. படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ‘சுதந்திரச் சங்கு’ இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு ‘மணிக்கொடி’ இதழ் கை கொடுத்தது. ‘சரசாவின் பொம்மை’ என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. 1937 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா, மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947 ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார். மதுரை வட்டார வரலாற்றை கூறும் வகையில் ‘சுதந்திர தாகம்’ போன்றவை தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படுகின்றன. மொத்தம் 29 நூல்கள் எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை, “இன்று நீ இருந்தால்” என்ற தலைப்பில் 2,000 வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையாக படைத்தார். இவரது, சுதந்திர தாகம் நாவலுக்கு, 2001ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. தான் பதிப்பித்த நூல்களை தலையில் சுமந்து தமிழகத்தில் கல்லூரி கல்லூரியாகச் சென்று விற்ற அவரை, ஏழ்மை மிகவும் வாட்டியது. வறுமைத் துயரில் வாடிய சி.சு.செல்லப்பா, 1998 டிசம்பர் 18ம் தேதி, தன் 86 வது வயதில் காலமானார்.

சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர். யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார். சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார். சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார். தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர். 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் 57ஆவது வயதில் (1879) மறைந்தார்.

நா.பார்த்தசாரதிபிறந்த தினம்

இன்று (டிசம்பர் 18). புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகமி விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய “சாயங்கால மேகங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18) பிறந்தார்.

உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18)தான் பிறந்தார். லெனின் மறைவுக்குப் பின், 1922 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக செயல்பட்டார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை தோற்றுவித்து, உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக ரஷ்யாவை மாற்றினார். போரின் காரணமாக உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனில் மட்டும் ஸ்டாலின் கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்களால் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்றது. இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் ஏராளமான உயிர் இழப்புகளையும், பொருள் இழப்புகளையும் சந்தித்து இருந்தன. போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் வீறு கொண்டு எழுந்து நின்றது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...