இன்றைய முக்கிய நிகழ்வுகள் (17.12.2024)
ஓய்வூதியர் தினம்
(Pensioner,s Day) ஓய்வூதியர் என்பது உண்மையில் கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் தான் அதை விட அப்படி இருக்கும் நம் தாய் தந்தைகளை நல்ல படியாக பராமரிப்பது அதை விட கொண்டாடப்படவேண்டிய ஓன்று. சுப்ரீம் கோர்ட், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாள் ஓய்வூதியர் தினமாகக் நினைவுகூறப்படுகிறது. அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களை பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசமபர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுது.
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்
டிசம்பர் 17-ம் நாள் சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினமாக, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தநாள் உருவாக்கப்பட்டதற்கான காரணம் பற்றியும், விழிப்புணர்வு பெற வேண்டிய கட்டாயம் அனைவரிடமும் உள்ளது. கடந்த1980 முதல்1990க்கும் இடைப்பட்ட காலங்களில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏறத்தாழ 71 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவத்தின் தாக்கத்தால், பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் விதமாகவும், இது குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2001 இல் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்கான அடையாளமாக சிகப்பு நிற குடையை பயன்படுத்தினர். 2005ல் ஐரோப்பாவில் ஐ.சி.ஆர்.எஸ்.இ எனப்படும் பாலியல் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச குழு, சிவப்பு குடையை ஏற்றுக்கொண்டது. பாலியல் தொழில் புரிவதனால், அவர்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பம் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச மக்கள் அனைவரும், நம் போன்ற இதர பாலினத்தவர்கள் பற்றிய புரிதலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதில் இருந்து விடுபட எண்ணி, உழைத்து முன்னேற முயற்சி செய்பவர்களுக்கு நாம் அனைவரும் உதவிக் கரம் நீட்டுவோம்.
சாட்ட(ர்)னேலியா முதன்முறையாகக் கொண்டாடப்பட்ட நாள்.
கி.மு.497 சாட்டி(ர்)னேலியா……கிறிஸ்துமசுக்கு முன்னோடி என்று குறிப்பிடப்படும், பண்டைய ரோமானியப் பண்டிகையான சாட்ட(ர்)னேலியா முதன்முறையாகக் கொண்டாடப்பட்ட நாள். விவசாயம், செல்வம் உள்ளிட்டவற்றுக்கான கிரேக்கக் கடவுளான சாட்ட(ர்)ன்-னுக்கான ஆலயம் திறக்கப்பட்ட கி.மு.497 டிசம்பர் 17இல் ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட இது, பின்னாளில் ஜூலியன் நாட்காட்டியில் ஒவ்வோராண்டும் டிசம்பர் 17இல் தொடங்கி, 23வரை ஒரு வாரம் நடைபெறும் விழாவாகியது. ரோமக் குடியரசு, பின்னர் ரோமப் பேரரசு ஆகியவற்றின் கருவூலமாக சாட்ட(ர்)னின் ஆலயமே விளங்கியது. பொற்காலம், வெள்ளி, வெண்கலம், வீரம் ஆகியவற்றுக்குப்பின் இரும்புக்காலம் நடைபெறுவதாக்கூறிய ரோமானிய புராணங்களின்படி, உழைப்பின்றியே மக்களுக்கு எல்லாம் கிடைத்து, மகிழ்ச்சி நிறைந்திருந்த பொற்காலத்தில் சாட்ட(ர்)னின் ஆட்சியே நடைபெற்றதால், அப்படியான காலம் வேண்டும் என்று இவ்விழா கொண்டாடப்பட்டது. அடிப்படையில், விதைப்பு முடிந்ததும், விவசாயக் கடவுளான சாட்ட(ர்)னிடம், சூரியன் முழுமையாக ஒளிவீசி, நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டிக்கொள்கிற விழாதான் இது! இவ்விழாக் காலத்தில், வழக்கமான ரோமானியச் சட்டங்கள் நடைமுறையிலிருக்காது. அங்கு மிகப்பெரிய குற்றமாக இருந்த சூதுகூட இக்காலத்தில் அனுமதிக்கப்படும். விழாவுக்காக, சாட்ட(ர்)னேலியாவின் அரசர் என்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது உத்தரவுகள் நிறைவேற்றப்படும். விழாக் காலத்தில், அடிமைகளுக்கு, அவர்களின் உரிமையாளர்கள் சேவைகள் செய்வார்கள். மக்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வார்கள். கிறித்துவின் உண்மையான பிறந்த நாள் தெரியாத நிலையில், கி.பி.4ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை முதலாம் ஜூலியஸ்தான், டிசம்பர் 25இல் கொண்டாடுவதை அறிமுகப்படுத்தினார். சாட்ட(ர்)னேலியா முக்கிய விழாவாக இருந்ததால், மக்களை ஈர்ப்பதற்காக அதையொட்டிய தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 312இல் பேரரசர் கான்ஸ்ட்டாண்ட்டைன் கிறித்துவத்துக்கு மாறியதைத்தொடர்ந்து, சாட்ட(ர்)னேலியாவும், அதைத் தொடர்ந்து கிறிஸ்துமசும் கொண்டாடப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பல பகுதிகளில், நீண்டகாலம் நடைமுறையிலிருந்த, கிறிஸ்துமசின்போது தவறான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்தல் என்பது, சாட்ட(ர்)னேலியாவின் அரசர் என்பதன் தொடர்ச்சியே. இடைக்கால ஃப்ரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகியவற்றிலிருந்த, டிசம்பர் 28இல் ஒருநாள் பிஷப்-பாக ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் இதைப் பின்பற்றியதாகவே கருதப்படுகிறது. சாட்ட(ர்)னேலியாவின் கொண்டாட்டங்களான ஏராளமாகக் குடித்தல், உண்ணுதல், சூதாடுதல் உள்ளிட்டவை, இடைக்கால ஐரோப்பாவில், கிறிஸ்துமசின்போது செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பிற்கால சமூக மாற்றங்களுக்கு ஒவ்வாதவை மறைந்து, பரிசளித்தல் முதலானவை இன்றும் கிறிஸ்துமஸின் கூறுகளாகத் தொடர்கின்றன!
நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்த தினம் இன்று..
1920 நவம்பர் 20 முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது . 1920 டிசம்பர் 4 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. 98 இடங்களில் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது .
1920 டிசம்பர் 17 அன்று நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்றக் கொண்டது . அந்த நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பாராளுமன்ற நடைமுறைகளுக்கான அடித்தளம் இங்கே நாட்டப்பட்டது. இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக்கப்படும் மாநிலமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான். நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பின்தங்கிய சமூகங்களுக்கு வகுப்புவாரிப் வழங்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத்தகங்களும், இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப்பட்டன. நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் தொழில் வளத்தைப் பெருக்கத் தனியார் தொழில் தொடங்கினால் அதற்கு அரசும் உதவிடும் புதுமைத் திட்டம் கொண்டுவந்தது . நீதிக்கட்சி ஆட்சியிலே தான் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (Hindu Religious Endowments Act) கொண்டு வரப்பட்டது. நீதிக்கட்சியின் தொடர்ச்சித் தான் திராவிடர் கழகமும் , திராவிட முன்னேற்ற கழகமும் . இன உணர்வுத் தீபம் ஏற்றி வைத்த பெரியோர்களை நினைவு கூறுவோம் .
முதன் முறையாக அஸ்டெக் காலெண்டர் கல் / அஸ்டெக் சூரியக்கல் கண்டுபிடிக்கப்பட்ட தினம்
மெக்ஸிகோவில் ஸ்பெயின் நாட்டு படையெடுப்பால் நிலத்தில் புதைந்துபோன இந்தக் கல் மீண்டும், டிசம்பர் 17, 1790 இல் மெக்ஸிகோ பேராலயத்தை திருத்தும் போது கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. ஆய்வாளர்கள் இந்த 24 டன் எடையுள்ள சூரியக் கல் 1502 க்கும் 1521க்கும் இடையில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இன்று இது மெக்ஸிகோ நகரத்தில் உள்ள தேசிய மானிடவியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜேம் ஸ் சோண்டர் ஸ் என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்த நாள்
இதே டிசம்பர் 17, 1928 – பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் முகமாக இந்தியப் புரட்சியாளர்கள் பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகியோர் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி ஜேம் ஸ் சோண்டர் ஸ் என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்தனர். இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928ல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் ஆங்கிலேய காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928ல் காலமானார். இக்கொடுமைக்கு பழிவாங்கும் நோக்கோடு பகத் சிங் உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்வதற்கு கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.
பெண்ணுரிமை போராளி தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பாப்பாஉமாநாத் புரட்சிகர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.1945ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாப்பா உறுப்பினரானார். 1946ம் ஆண்டு பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடும், அடக்குமுறைகளும் தோழர் பாப்பாவுக்கு உறுதியான படிப்பினைகளை அளித்தன. 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. தோழர் பாப்பாவும் அவரது அன்னை லட்சுமியும் கட்சியின்தலைமறைவு செயலகத்தில் பணிபுரிய சென்னைக்கு அனுப்பப்பட்டனர். அப்போது தோழர் பாப்பாவும் அன்னை லட்சுமியும் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.சிறைக்குள் நடந்த கொடிய தாக்குதலை கண்டித்து தோழர்கள் ஆர். உமாநாத், எம். கல்யாணசுந்தரம், ஆளவந்தார், அன்னை லட்சுமி, சிவகிரி பாண்டியன், பாப்பாஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். உறுதி குலையாது உண்ணாவிரதம் இருந்த 23 வது நாள் அன்னை லட்சுமி வீரமரணம் அடைந்தார். இறந்த நிலையில் கூட தோழர் பாப்பாவுக்கு பெற்ற அன்னையை பார்க்க அரக்கத்தனமான சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த பின் தோழர் பாப்பா தொடர்ந்து கட்சிப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். நீண்ட சிறை வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்வுக்கும் சொந்தக்காரராக விளங்கிய தோழர் உமாநாத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் தோழர் பாப்பா உமாநாத். தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும், கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரப் பணிகளிலும் நீண்டகாலம் சேவை புரிந்து பெருமை சேர்த்தவர். திருவெறும்பூர்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது பெண்களின் பிரச்சனைகளை விடாப்பிடியாக வலியுறுத்தினார். தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் வீரம்செறிந்தவாழ்க்கை மாதர் இயக்கத்திலும், கட்சிப்பணிகளிலும்ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும்.
எஞ்சின் உந்தும் விமானத்தில் பறந்து சாதனை படைத்த நாள்
ரைட் சகோதரர்கள் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர் ரைட் சகோதரர்களின் முதல் பறக்கும் விமானத்தின் பெயர் ‘ப்ளையர்’. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிட்டி ஹாக் என்ற இடத்தில் ஆர்வில் ரைட் முதன் முதலாக விமான என்ஜின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அதன்பிறகு வில்பரும், ஆர்விலும் மாறி மாறி வானில் பறந்து விமானத்தின் பறக்கும் திறனை நிரூபித்தார்கள். அவர்கள் 3 கட்டுப்பாட்டுக் கருவியின் மூலம், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தினர். அதில் ஒரு கட்டுப்பாட்டுக் கருவி விமானத்தை காற்றில் உயர்த்தவும், ஒன்று நிலைப்படுத்தவும், மற்றொன்று தரையிறக்கவும் உதவின.
நிஜமான எழுச்சி நடைக் கவிஞர் ரூமி நினைவு நாளின்று
1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞர். அரபு கவிஞர்களில் மிகவும் பிரபலமானவர் ரூமி. இந்திய அமீர் குஸ்ரோவின் (1253-1325) காலத்தை சேர்ந்தவர் ரூமி. ரூமி தனது படைப்புகளை தனது 50 ஆம் வயதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறார்.இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. எனினும் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். ரூமியின் கவிதைகள் உலகின் பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.ரூமியின் கவிதைகள் பெரும்பாலும் காதலை கொண்டாடியது. ரூமி கொண்டாடிய காதல் ஆண் – பெண் இடையேயான காதல் மட்டும் அல்ல.. அது இந்த பிரபஞ்சத்தின் மீது ஈர்ப்பு கொண்ட அனைத்தின் மீதான காதலாக இருந்தது. இந்நாளில் ரூமி கவிதைகளில் சில *கற்பனை செய். ஒரு குன்றின் உச்சியிலிருந்து ஒரு கழுகைப் போல நீ மிதந்திறங்குவதாக நினைத்துப்பார் ஒரு புலியைப் போல நீ தன்னிச்சையாகத் திரிவதாக இரை தேடி திரிகையில்தான் நீ மிகவும் அழகு. *வானில் தெரியும் நிலவைப் பார் ஏரியில் தென்படும் ஒன்றை அல்ல *வேர்களுக்கிடையே தேட வேண்டியதை சிலபோது கிளைக்களுக்கிடையில் நீ தேடிக் கொண்டிருப்பாய் *சிறகுடன் பிறந்த நீ வாழ்க்கையில் தவழ விரும்புவதேனோ *நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
- தொடர்ந்து தட்டிக்கொண்டே இரு… உள்ளிருக்கும் ஆனந்தம்… என்றேனும் சாளரத்தைத் திறந்து எட்டிப் பார்க்கும்…
எவர் வந்திருக்கிறார் என..
- உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல.
- தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.
- காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை, காதல் காற்றைப் போன்றது..
சர் ஹம்பிரி டேவி Sir Humphry Davy பர்த் டே டு டே
குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தவர் சர் ஹம்பிரி டேவி. இவர் 1778ம் ஆண்டு இதே டிசம்பர் 17ம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் பென்சான்ஸ் என்னும் ஊரில் பிறந்தார். இவரோட அப்பா ராபர்ட் டேவி. ஹம்பிரிக்கு பதினாறு வயது ஆகும்போது காலமாகிட்டார். குடும்ப பாரம் ஹம் பிரியின் தோளில் விழுந்தது. எனவே படிப்பை நிறுத்தி விட்டு ஒரு டாக்டரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அந்த டாக்டர் வீட்டில் பல நூல்கள் இருந்தன. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அவற்றைப் படித்து ஹம்பிரி தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு சிறு ஆய்வுக்கூடத்தை நிறுவி ரசாயனப் பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். ஹம்பிரிக்கு ஜேம்ஸ் வாட்டின் மகன் இளைய ஜேம்ஸ் வாட் நண்பரானார். அவரிடம் பல அறிவியல் நூல்களை வாங்கிப் படித்தார் ஹம்பிரி. டாக்டர் பொட்டோஸ் என்பவரிடம் இவரை வேலைக்குச் சேர்த்தார் இளைய ஜேம்ஸ் வாட். டாக்டர் பொட்டோஸ், வாயுக்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதற்காக நியூமேடிக் இன்ஸ்டிடியூட் என்னும் நிறுவனத்தை அமைத்திருந்தார். அவரது ஆய்வுக்கூடத்தில் ஹம்பிப்ரி ஆய்வுகளை மேற்கொண்டார். நைட்ரஜன் வாயு விஷத்தன்மை மிக்கது என்று டாக்டர் மிக்செல் என்பவர் கூறியிருந்தார். ஹம்பிரி அதனைப் பரிசோதனை செய்து பார்க்க நினைத்தார். நைட்ரஜன் ஆக்சைடை சிறிது சிறிதாக நுகர்ந்து பார்த்தார். அது அவருக்கு இன்ப மயக்கத்தை உண்டாக்கியது. மயக்கம் தெளிந்தவுடன், வாயுவினால் எந்தத் தீமையும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்தார். மயக்கமாக இருந்த நேரத்தில் இன்பக் கனவுகள் கண்டதையும் அறிவியல் பத்திரிகைகள் மூலமாக அறிவித்தார். இவரது இந்தச் சோதனை, அறுவை சிகிச்சைகளுக்கு குளோரோபாரம், ஈதர் முதலிய வாயுக்களை மயக்க மருந்துகளாகப் பயன்படுத்தும் முறைக்கு வழிகாட்டியாக அமைந்தது. கால்சியம், பேரியம், அலுமினியம், மெக்னீஷியம் ஆகிய உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்க அவரது ஆராய்ச்சிதான் முன்னோடியாகத் திகழ்ந்தது. சோடியம், பொட்டாசியம் என்ற இரண்டையும் கண்டுபிடித்ததற்காக மன்னர் நெப்போலியன் இவருக்கு பிரான்ஸ் நாட்டுப் பதக்கத்தைக் கொடுத்து கௌரவித்தார். 1812ம் ஆண்டு ஹம் பிரிக்கு ‘சர்’ பட்டமும் கொடுக்கப்பட்டது. இதுக்கிடையிலே அப்போ நிலக்கரிச் சுரங்கத்தில் பல விபத்துகள் நேர்ந்தன. அதற்கு பணியாளர்கள் எடுத்துச் செல்லும் விளக்குகள்தான் காரணம் என்ற உண்மையை ஹம்பிரி அறிந்தார். சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மிகுந்த விளக்கைக் கண்டுபிடித்து வழங்கினார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இது உதவியது. அறிவியல் துறையில் தன்னைக் கரைத்துக் கொண்டு பல கண்டு பிடிப்புகளை வழங்கிய சர் ஹம்பிரி டேவி, 1829ம் ஆண்டு மே 29ம் தேதி மறைஞ்சிட்டார்
266ஆம் திருத்தந்தை பிரான்சிசு அடிகளார் பிறந்த தினம்
திருத்தந்தை பிரான்சிசு இவரது இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் புவேனோஸ் ஐரேஸ் நகரில் இத்தாலியின் வடக்குப் பகுதியில் தூரின் நகர் அமைந்துள்ள பியத்மாந்து பிரதேசத்தின் பகுதியிலிருந்து சென்று குடியேறிய இத்தாலிய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருடைய பெற்றோர் பெயர்கள் மாரியோ ஹோசே பெர்கோலியோ, ரெஜீனா மரியா சிவோரி ஆகும். மாரியோ ஹோசே தொடருந்துத் துறையில் அலுவல் பார்த்தார். ரெஜீனா மரியா வீட்டுப்பொறுப்பைப் பார்த்துக்கொண்டார். திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்விபயின்றார். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார்.[9] புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10] பின்னர் தம்மைக் கடவுள் இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1958இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார். 1992இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பெர்கோலியோவை புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். அவருக்கு 1992, சூன் 27ஆம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆயர் பட்டம் வழங்கிய முதன்மைத் தலைவர் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் அந்தோனியோ குவாராசீனோ ஆவார். பின்னர் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயர் ஆனார். அதன் பிறகு, 1998, பெப்ருவரி 28ஆம் நாள் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதே நேரத்தில் அவர் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்து தனி அமைப்பு இல்லாத கீழைச் சபைக் கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர். தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார். இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர். 2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.[4] ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.
“ப்ராஜெக்ட் ப்ளூ புக்” ஆய்வை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நாள்
1969 – அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (பறக்கும் தட்டு) பற்றி 22 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டிருந்த “ப்ராஜெக்ட் ப்ளூ புக்” ஆய்வை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நாள் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக 12,618 தகவல்களைச் சேகரித்த இந்த ஆய்வு, விமானம் உள்ளிட்டவற்றைத் தவறாக எண்ணிக்கொண்டதாக மிகப்பெரும்பாலான தகவல்களை மறுத்தாலும், 701 தகவல்களுக்கு இறுதிவரை சரியான விளக்கமளிக்க முடியவில்லை. ஏராளமானோர் தெரிவித்திருந்த பல தகவல்களை மாஸ் ஹிஸ்டீரியா என்றும், சிலவற்றை, விளம்பரத்திற்காகக் கிளப்பப்பட்ட வதந்திகள் என்றும் இந்த ஆய்வு கூறினாலும், இதற்கு முன்பும், பின்பும், பறக்கும் தட்டு குறித்த பல ரகசிய ஆய்வுகளை அமெரிக்க அரசு இன்றுவரை மேற்கொண்டுவருகிறது. அந்தத் தொடரிலேயே 2017 டிசம்பர் 9இல் குறிப்பிடப்பட்டுள்ள கெக்ஸ்பர்க் நிகழ்வில், மக்களுக்குத் தெரிந்தே வானிலிருந்து விழுந்த பொருட்களைக் கைப்பற்றிய அமெரிக்க அரசு பின்னர் அப்படி எதுவும் இல்லையென்று மறுத்ததால், ரகசிய ஆய்வுகள் நடத்தப்படுவதாக அமெரிக்க மக்களே கருதுகிறார்கள். அப்படிக்கூறும், ‘ரேஸ் டு த விட்ச் மவுண்ட்டன்’ போன்ற திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. இவை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாதவாறுதான் வரலாறும் உள்ளது. 1561இல் ஜெர்மெனியின் நியூரம்பர்க் மக்கள் பறக்கும் பொருள் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்கள். 1878இல் அமெரிக்காவின் டெக்சாஸில், சாசர் (தட்டு) போன்ற ஒன்று பறந்து சென்றதைப் பார்த்ததாக விவசாயி ஒருவர் கூறிதற்குப் பின்னர்தான் பறக்கும் தட்டு என்ற பெயர் ஏற்பட்டது. இவையெல்லாம் விமானம் உருவாவதற்கு முன்பே என்பதுடன், இன்னும் பல நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவதைகள் தோன்றியதாகக் கூறப்படுபவை, மிகப்பண்டைய காலங்களிலேயே அடையாளம் காணப்படாத பொருட்களாக இருந்து, நாம் அவற்றை விண்கல், வால்நட்சத்திரம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா, இத்தாலி, உருகுவே, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பறக்கும் தட்டு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன.