இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!

 இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (15-12-2024) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த 2 நாட்களில் நகரும்.

இதன் காரணமாக நாளை (டிச. 16) முதல் 3 நாட்களுக்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் நேற்று முன்தினம் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...