இயக்குநர் ஷங்கரிடம் காவல்துறை விசாரணை!
இந்தியன் 2 விபத்து:
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது குறித்த காவல்துறை விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20-ஆம் தேதி இரவு அந்த திரைப்படப் பிடிப்புக்காக அதிக எடையுடைய மின்விளக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த உயரமான கிரேன், திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைக்கா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகரகாவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து நசரத்பேட்டை போலீஸாா், வழக்கின் ஆவணங்களை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை ஆணையா் ஜி.நாகஜோதி நியமிக்கப்பட்டாா். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, விபத்து குறித்து புதிதாக ஒரு வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு செய்தது. விபத்து ஏற்படும்போது சம்பவ இடத்தில் இருந்த 6 ஊழியா்களிடம் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.
முன்னதாக மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வர மூா்த்தி, துணை ஆணையா் நாகஜோதி ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால், இயக்குநா் ஷங்கா் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். இதற்காக அவா்களுக்கு, விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியன் 2 விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் இன்று ஆஜராகியுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு வந்த இயக்குநர் ஷங்கரிடம் காவலர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தியுள்ளார்கள். விபத்து நடந்தது குறித்தும் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஷங்கரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.