இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமின்று!
இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் ஊழல் மிக அதிகமாக வியாபித்துள்ளதை காணமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்ளநாட்டு பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை காண முடிகிறது. சர்வதேச அளவில் ஊழலை தடுக்க, ஐ.நா., அமைப்பு, 2003 அக்.,31ல், ஊழலுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி, அதை உலக நாடுகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிச.,9 ஐ சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து, ஊழலின் நச்சுத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென தெரிவித்தது. ஆண்டுக்கு ஒருமுறை ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரித்துவிட்டு, மற்ற நாட்களில் ‘மாமூல்’ வாழ்க்கையை தொடர்வதால் ஊழல் ஒழிப்பில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது. சட்டவிதிமுறைக்குப்பட்ட காரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடவேண்டும். லஞ்சம் கேட்பவரிடம், ‘லஞ்சம் ஏன் கொடுக்கணும்’ என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வு துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது.
பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்:
9-12-1979 பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது. உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலனவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் 1967-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் தாக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கணினி மாநாட்டில் முதல் மவுசை செயல்படுத்திக்காட்டிய நாள்
1968 – கம்ப்யூட்டர் மவுசை உருவாக்கிய டக்ளஸ் எங்கல்பர்ட், அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற, கூட்டு கணினி மாநாட்டில் முதல் மவுசை செயல்படுத்திக்காட்டிய நாள் இந்த மாநாட்டில், மவுஸ் மட்டுமின்றி, நவீன கணினித்துறையின் கூறுகளான, திரையில் ஒவ்வொரு செயலையும் தனித்தனியாகக் காட்டும் விண்டோ, ஹைப்பர்டெக்ஸ்ட், க்ராஃபிக்ஸ், மேம்படுத்தப்பட்ட கட்டளை உள்ளீடு, வீடியோ கான்ஃபரன்சிங், வோர்ட் ப்ராசசிங், டைனமிக் ஃபைல் லிங்க்கிங், ரிவிஷன் கண்ட்ரோல், கொலாபரேட்டிவ் ரியல்டைம் எடிட்டர் ஆகியவற்றையும் எங்கல்பர்ட் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திக்காட்டினார். அதனால் இந்நிகழ்ச்சி மதர் ஆஃப் ஆல் டெமோஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
மக்களின் பாடகர் மதுரை சோமு நினைவு தினம்.
இசை தெரியாத பாமர மக்களையும் அதன் ஆழ அகலங்களை அனுபவிக்க வைத்தவர் மதுரை சோமு என்கிற எஸ்.சோமசுந்தரம் (1919-1989). கச்சேரி மேடைகளைக் காட்டிலும் கோயில் திருவிழாக்களின் திறந்தவெளி அரங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர்.
நேரம், காலம் என்ற வரையறைகள் எதுவும் இன்றி மணிக்கணக்கில் பாடியவர். ஆறு மணி நேரம் வரைக்கும்கூட அவரது கச்சேரிகள் தொடர்வது உண்டு. அனைத்து விதமான பக்க வாத்தியங்களையும் கொண்டு ‘ஃபுல் பெஞ்ச்’ கச்சேரிகளை நடத்தியவர். தெய்வம் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகய்யா’ பாடலின் மூலம் எல்லோர்க்கும் அறிமுகமானவர். தஞ்சை சுவாமிமலையில் பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் சோமசுந்தரம். அவரின் தந்தை சச்சிதானந்தம், அரசுப் பணியின் காரணமாக மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் சோமுவும் மதுரையிலேயே வளர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகவும், தமிழக அரசின் அரசவை இசைப் புலவராகவும் விளங்கியவர். இசைப் பேரறிஞர், சங்கீத சக்ரவர்த்தி, அருள்ஞான தெய்வீக இசைக்கடல், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.
நோபல் பரிசு பெற்ற இரிக்கார்டோ ஜியாக்கோனி நினைவு தினம்
அண்ட X-கதிர் வானியலை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற இரிக்கார்டோ ஜியாக்கோனி நினைவு தினம் இன்று (டிசம்பர் 9, 2018). இரிக்கார்டோ ஜியாக்கோனி (Riccardo Giacconi) அக்டோபர் 6, 1931ல் இத்தாலியில் ஜெனோவாவில் பிறந்தார். இவர் வானியற்பியல் ஆய்வு செய்ய, அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் முன்பு மிலான் பல்கலைக்கழகத்தின் முந்தைய இலாரியா பட்டத்தைப் பெற்றார். புவியின் வளிமண்டலம் அண்ட X-கதிரை உட்கவர்ந்துவிடுவதால், X-கதிர் வானியலுக்கு விண்வெளியில் அமைந்த தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. இச்சிக்கலுக்கு தீர்வு கான முனைந்த ஜியாக்கோனி, X-கதிர் வானியலுக்கான தனித்த கருவிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டார். இவற்றில் ஏவூர்தியக ஒற்றி அல்லது காணிகளை 1950களிலும் 1960களிலும், முதல் X-கதிர் வானியல் செயற்கைக்கோளான உகுருவை 1970களிலும் வடிவமைத்து உருவாக்கினார். இவரது முன்னோடி ஆராய்ச்சிகள் 1978ல் அய்ன்சுட்டீன் வான்காணகத்தில் தொடர்ந்தன. அங்கேயும் பின்னர் சந்திரா X-கதிர் வான்காணகத்திலும் முதல் X-கதிர்வழிப் படம் எடுக்கும் தொலைநோக்கியை வடிவமைத்தார். அது விண்வெளியில் 1999 இல் நிறுவப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறது.
ஹோமாய் வியாரவல்லா (Homai Vyarawalla) அவர்களின் 111ஆவது பிறந்த நாள்
ஹோமாய்_வியாரவல்லா : இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை புகைபட கலைஞர் இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற பெருமைக்குரிய ஹோமாய் வியாரவல்லா (Homai Vyarawalla) அவர்களின் 111ஆவது பிறந்த நாள் .இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிறந்தார். தனது 13 வயது முதல் கேமரா லென்ஸ் மீது ஆர்வம் கொண்ட ஓமாயி வியாரவாலா அவர்களின் கார் எண் DLD 13, அவரின் பிறந்த வருடம் 1913 எனவே இவரை செல்லமாக டால்டா 13 என அழைப்பபார்கள். இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயின்ட்டிங்கில் பட்டயப் படிப்பை முடித்தார். தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை கல்லூரி காலத்தில் சந்தித்தார். மேலும் இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞராக திகழ்ந்தார். வரலாற்று நிகழ்வுகளை தனது கேமரா கண்களில் பதிவு செய்த பெருமைக்குரிய இவர், இந்தியா -பாக்., பிரிவினையின் போது முகம்முது அலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மற்றும் திபெத்தில் இருந்து 1956-ல் தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்தது, வுன்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள், பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் மனைவிக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும்போது ஹோமாய் எடுத்த படம் போன்றவை குறிப்பிடத்தக்க வையாகும். இவருக்கு இந்திய அரசு மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் பத்ம விபூஷன் விருதினை 2011 ஆம் ஆண்டு வழங்கியது. (ஆந்தை ரிப்போர்ட்டர்) புகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்த ஹோதாய் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். இன்று டிச.,9 அவரது பிறந்த நாள்.
ஐடா ஸோபியா ஸ்கடர் பிறந்ததினம்
ஐடா ஸோபியா ஸ்கடர் பிறந்ததினம் டிசம்பர் 9. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்தவராவார். இவர்தான் வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார். ஆம்.. ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. ‘தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்’ என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இவரால் உருவான பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டு ம் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. 100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக்கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.
ஜான் மில்டன் எனும் மகாகவிஞன் காலமான தினமின்று.
இங்கிலீஷ் லிட்டரேசரில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம் கொண்டவர் இவர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1608) பிறந்தார். தந்தை பத்திரம் எழுதுபவர், கவிஞர். படிக்கும்போதே மில்டனும் கவிதைகள் எழுதி வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார். ஷேக்ஸ்பியர் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ஏராளமான கவிதைகளை எழுதினார். ‘ஆன் தி மார்னிங் ஆஃப் கிறைஸ்ட்ஸ் நேடிவிட்டி’, ‘ஆன் ஷேக்ஸ்பியர்’ போன்ற கவிதைகள் இவரது ஆரம்பகாலப் படைப்புகள். உரைநடையிலும் முத்திரை பதித்தார். ‘தி டாக்ட்ரின் அண்ட் டிசிப்ளின் ஆஃப் டிவோர்ஸ்’, ‘ஆஃப் எஜுகேஷன்’, ‘பிலாசபி அண்ட் பாலிடிக்ஸ்’, ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்’ என பல படைப்புகள் இவரது கற்பனையில் வடிவம் பெற்றன. மறைந்த நண்பர் எட்வர்ட் கிங் நினைவாக ‘லிசிடஸ்’ என்ற இரங்கற் பா எழுதினார். அது ஆங்கில இலக்கிய இரங்கற் பாக்களிலேயே தலைசிறந்ததாக கருதப்படுகிறது. இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. இங்கிலாந்தில் 1640-ல் புரட்சி வெடித்தது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எழுந்தன. மன்னர் ஆட்சிக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினார். முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அப்போது, இவரது பார்வை பாதிக்கப்பட்டது. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது. தன் பிள்ளைகள், உதவியாளர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். படைப்பு பணியையும் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான் இவரது ‘மாஸ்டர்பீஸ்’ எனப்படும் படைப்பான ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தை படைத்தார். உலகத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இக்காவியம் அந்த நாளில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. ‘சாம்சன் அகானிஸ்ட்’ என்ற நாடக நூல் இவரது இறுதிப் படைப்பு. ஆங்கிலக் கவிஞர்களில் அதிகம் உவமைகளைப் பயன்படுத்தியவர் இவரே எனக் கருதப்படுகிறது. இவரை வழிகாட்டியாகவும் ஆதர்ச கவிஞராகவும் உலகம் முழுவதும் பலர் ஏற்றனர். அதில் வில்லியம் வேர்ட்ஸ்வர்த், வில்லியம் பிளேக், ஜான் கீட்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளியான ஜான் மில்டன் 66-வது வயதில் (1674) இதே நவம்பர் 8ல் மறைந்தார்.