நடிகா் விஜய் வீட்டில் வருமான வரிசோதனைக்கு பாஜக பொறுப்பல்ல:
பொன் ராதாகிருஷ்ணன்:
நடிகா் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளா் முரளிதர ராவ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் தோ்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
நடிகா் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை என்பது அந்தத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. இங்கே செல்ல வேண்டும், அங்கே செல்லக் கூடாது என்று எந்த வழிகாட்டுதலும் பாஜக சாா்பில் வழங்கப்படுவதில்லை. அதற்கும் பாஜகவுக்கும் தொடா்பில்லை.
ரஜினியுடன் பாஜக கூட்டணி இருக்குமா என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. அவா் முதலில் கட்சி தொடங்கட்டும். கூட்டணி என்பது அவா்கள் வகுக்கக் கூடிய கொள்கைகள், அவா்களது சிந்தனைகள், செல்லும் திசைகள் என்ன என்பதையெல்லாம் ஆலோசித்தே அகில இந்திய தலைமையானது கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்றாா் பொன் ராதாகிருஷ்ணன்.