இன்றைய முக்கிய நிகழ்வுகள் (01.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (01.12.2024)

உலக எய்ட்ஸ் தினம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் பான் ஆகியோரால் கொண்டுவரப்பட்டது. எய்ட்ஸ் உலகளாவிய திட்டத்தின் பொது தகவல் அதிகாரிகளாக இவர்கள் இருந்தனர். எய்ட்ஸ் தினம் குறித்த தங்களது யோசனையை எய்ட்ஸ் குளோபல் புரோகிராம் இயக்குனருடன் இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.பிறகு இந்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 1988 டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டது. மேலும் உலக சுகாதாரத்திற்கான முதல் சர்வதேச நாள் இதுவாகும்.

விஜயலட்சுமி பண்டிட் காலமான தினமின்று

விஜயலட்சுமி பண்டிட். இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி. மோதிலால் நேரு-ஸ்வரூப ராணி தம்பதியினரின் மகளாவார். ஜவஹர்லால் நேருவின் தங்கை. நேருவை விட 11 வயது இளையவர். இந்தியாவில் அமைச்சர் பொறுப்பு வகித்த முதல் பெண்மணி இவர்தான். ஐ.நா.பொதுச்சபையின் முதல் பெண் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அனேக இந்திய பெண்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்தவர். ஒத்துழையாமை இயக்கத்தில் போராடியவர் என்ற பெருமைக்குரியவர். 1921ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்ற ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது பெயரை விஜலட்சுமி பண்டிட் என்று மாற்றிக் கொண்டார்.அவர்களுக்கு ரீட்டா, நயன்தாரா, சந்திரலேகா என்ற 3 மகள்கள் பிறந்தனர். இவர்களில் இருவர் நாவல் எழுதும் புலமை பெற்றிருந்தனர். 1932-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால், 1942-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல் பெண் அமைச்சராக பொறுப்பு ஏற்றார். 1953-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக பணியாற்றினார். மேலும் அவர் பல நாடுகளுக்கு இந்தியாவின் தூதுவராக இருந்தார். இந்தியாவின் சார்பாக ஐக்கிய நாடுகளின் சபையைச் சார்ந்த மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார். 1962ல் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார்.1964ல் ஜவஹர்லால் நேரு மறைந்தார்.அவருக்கு பதிலாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் சிறிது காலத்திலேயே காரணம் கூறாமல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 1977ல் இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.அது இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடன காலம். விஜயலட்சுமி பண்டிட் அப்போது இந்திரா காந்திக்கு எதிராக குரல் கொடுத்தார். எனவே அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற முடியவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.டேராடூனில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வுக் காலத்தை கழித்தார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். “த ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் : ஏ பெர்சனல் மிமோயர்” என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியானது. இந்த நூலை எழுத 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 1990ம் ஆண்டு இதே டிசம்பர் 1ம் தேதி இயற்கை எய்தினார்.

ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) காலமான தினம்

உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) காலமான தினம் இன்று (டிசம்பர் 1).இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் (1877) பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண் களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.

இவரது கணிதத் திறனுக்காக வின்செஸ் டர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர், அக்கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்திய கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனிடம் இருந்து 1913-ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டதுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவரை அரிய பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். அவருக்கு ஆசான், வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்தார். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு கணித உலகின் மகத்தான கட்டுரைகளாகப் புகழப்படும் 5 கட்டுரைகளை எழுதினர். அதில் ‘ஹார்டி – ராமானுஜன் அசிம்டாடிக்’ சூத்திரம் மிகவும் பிரசித்தம்.

‘கணிதத் துறையில் எனது மிகப் பெரிய பங்களிப்பு ராமானுஜனைக் கண்டெடுத்ததுதான்’ என பெருமிதத்துடன் கூறுவார். தன்னடக்கம் மிக்கவர். உலகக் கணிதமேதைகளை வரிசைப்படுத்தச் சொன்ன போது, ராமானுஜனுக்கு 100 மதிப்பெண் வழங்கியவர், தனக்கு 25 மதிப்பெண் மட்டுமே போட்டுக்கொண்டார். இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து ‘தி இந்தியன் கிளார்க்’ என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.

எட்மண்ட் லாண்டவ், ஜார்ஜ் போல்யா, இ.எம்.ரைட் உட்பட பல கணித மேதைகளுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். கணிதப் பகுப்பாய்வு, எண்கணிதக் கோட்பாட்டு பகுப்பாய்வு, எண் கோட்பாடு, முழு எண் பகிர்வுகள் உள்ளிட்ட ஏராளமான கணிதக் கோட்பாடுகளை மேம்படுத்தினார்.

ராணுவம், போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு கணிதத்தை பயன் படுத்துவதை கடுமையாக எதிர்த்தார். ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே கணிதம் பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கணிதம் தவிர இவர் ஆர்வம் கொண்டிருந்த ஒரே விஷயம் கிரிக்கெட்!

இவர் எழுதிய ‘எ மேதமேடிசியன்ஸ் அபாலஜி’ என்ற கட்டுரை, சாமானியர்களுக்கும் கணிதத்தை புரியவைக்கிற அரிய படைப்பு. ஒரு கணித மேதையின் ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது, கணிதத்தால் வரும் ஆனந்தம் ஆகியவை பற்றிய இவரது அரிய சிந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

கணிதத் துறையில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகவும், லண்டன் மேதமேடிகல் சொசைட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.

அசெம்ப்ளி லைன் தொழிற்சாலையில் நடைமுறைப்படுத்திய நாள்

1913 – கார் உற்பத்தியில் மட்டுமின்றி, அனைத்து உற்பத்தித் துறைகளிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய, கன்வேயர் பெல்ட்மீது நகரும் மேடைகளைக்கொண்ட, கோப்பு வரிசை(அசெம்ப்ளி லைன்) என்பதை, உலகிலேயே முதன்முறையாக ஹென்றி ஃபோர்ட் தன் தொழிற்சாலையில் நடைமுறைப்படுத்திய நாள் டிசம்பர் 1. (கோர்ப்பு, கோர்த்தல், கோர்வை ஆகியவை தவறானவை. கோப்பு, கோத்தல், கோவை என்பவையே சரியான தமிழ்ச்சொற்களாம்.) ஏற்கெனவே, அவ்வாண்டின் அக்டோபரில், சில பாகங்களின் தயாரிப்பில் கோப்பு வரிசையை ஃபோர்ட் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இந்த முழுத் தயாரிப்புக்குமான கோப்பு வரிசை, ஒரு காரின் தயாரிப்பு நேரத்தை பன்னிரண்டரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாகக் குறைத்தது. தொழிற்புரட்சிக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்னரே, சீனாவில், விவசாயக் கருவிகள், ஆயுதங்கள் முதலானவற்றின் பெருவீத உற்பத்தியில், முழுக் கருவியையும் ஒருவரே உருவாக்காமல், தொழிலாளர்கள் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் உருவாக்கும் ‘வேலைப் பிரிவினை’ என்பது நடைமுறையிலிருந்துள்ளது. 1100களில், வெனிஸ் குடியரசின் கப்பல் கட்டும் தளமான ‘வெனிசின் ஆயுதத்தொழிற்சாலை’யில், 16 ஆயிரம் தொழிலாளர்கள், அடுத்தடுத்த இடங்களில் ஒவ்வொரு பாகமாகக் கோத்து, ஒரு நாளைக்கு ஒரு (கேலினி என்னும் துடுப்பும், பாய்மரமும் கொண்ட) கப்பலை உருவாக்கியிருக்கிறார்கள். தொழிற்புரட்சிக்கால உற்பத்தி உயர்வின்போது, வேலைப் பிரிவினை பரவியது. நெப்போலியப் போர்க்காலத்தில், இங்கிலாந்து கடற்படைக்குத் தேவையான கருவிகளை உருவாக்க, மார்க் ப்ரூனெல் என்பவரின் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டதே உலகின் முதல் வரிசையாகக் கோக்கும் தொழிற்சாலையாகும். அமெரிக்காவின் சின்சினாட்டியில் ஒரு கசாப்பு நிறுவனத்தில், மாமிசத்துக்காக் கொல்லப்பட்ட விலங்கின் உடல் நகர்ந்து செல்ல, ஒவ்வொரு மேடையிலும் ஒரு தொழிலாளி குறிப்பிட்ட பாகத்தைப் பிரித்து பதப்படுத்தும் (பிரிப்பு வரிசை!) முறை இருந்தது. இதைப் பார்த்தே ஃபோர்ட் தன் கோப்பு வரிசையை உருவாக்கினார். கார் உற்பத்தியில் அமெரிக்காவிலேயே ரேன்சம் ஓட்ஸ் என்பவர், தனது ஓல்ட்ஸ்மொபைல் நிறுவனத்தில், வரிசையாகக் கோக்கும் முறையை 1901இலேயே அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்காலத்திய முறையை ஃபோர்ட்தான் உருவாக்கினார். இந்தக் கோப்பு வரிசை, துறைசார்ந்த திறன்பெற்ற(ஸ்கில்ட்) தொழிலாளர்களின் தேவையை நீக்கியதாலேயே, வாழ்க்கைச் செலவுகள் குறைவான வளரும் நாடுகளின் தொழிலாளர்களைக் குறைந்த கூலியில் பயன்படுத்திக்கொண்டு, அந்நாடுகளுக்கு தொழிற்சாலைகள் இடம்பெயர முக்கியக் காரணியாகியது. அனைவருக்கும் கார் என்ற ஃபோர்டின் முழக்கத்தை நிறைவேற்றுமளவுக்கு கார் உற்பத்திச் செலவைக் குறைத்த கோப்பு வரிசை, இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

முதல் ‘லாட்டரி’ குலுக்கல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட நாள்

1969 – வியட்னாம் போருக்கான முதல் ‘லாட்டரி’ குலுக்கல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட நாள் டிசம்பர் 1. லாட்டரி என்றால் நிதி திரட்டுவதற்காக அல்ல! போரில் ஈடுபடுத்துவதற்காக, கட்டாய ராணுவப் பணிக்கு இளைஞர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்காக, ‘ட்ராஃப்ட் லாட்டரி’ என்ற பெயரில் நடத்தப்பட்டவற்றில் முதலாவது, இந்நாளில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில், கட்டாய ராணுவப்பணியில் ஈடுபடுத்தப்படுவது ‘ட்ராஃப்ட்’ என்றழைக்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில், தங்கள் குழுவை, நிலப்பரப்பை காக்க, அனைவருமே போரிடுதல் என்பது இயல்பானதாகவே இருந்துள்ளது. ‘வேல்வடித்துத் தருதல் கொல்லற்குக் கடனே…’ என்ற பொன்முடியார் எழுதிய புறநானூற்றுப் பாடல்வரி இதைத் தெளிவாகவே உணர்த்துகிறது. ஹம்முராபி காலத்திய(கி.மு.18ஆம் நூற்றாண்டு!), பாபிலோனியப் பேரரசின் குறிப்புகள்தான், முதன்முதலில் முறைப்படி நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ராணுவப்பணியாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. மத்தியக் கிழக்கில், குலாம், மாம்லுக் முதலான ராணுவ அடிமைகள் இருந்துள்ளனர் (இத்தகையோர் ஆட்சிக்கு வந்ததுதான் அடிமை வம்சம்!). மக்கள்தொகை அதிகரித்து, நாட்டைக் காத்தல், விவசாயம் ஆகியவற்றைக் கடந்து, பிற தொழில்கள் உருவான பின்னணியில், போர்களில்(ராணுவப் பணியில்!) அனைவரும் ஈடுபடவேண்டிய தேவை தன்னியல்பாக மறைந்தது. ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், ஜீன்-பாப்ட்டைஸ் ஜோர்டான் இயற்றிய, குழந்தையில்லாத, 20-25 வயதுடைய அனைத்துத் தனி ஆண்களும் நாட்டைக் காக்க போரிடவேண்டும் என்ற சட்டமே, ராணுவப்பணியைக் கட்டாயமாக்கிய முதல் நவீன சட்டமாகும். தொடர்ந்து போர்களில் ஈடுபடுமளவுக்கு நெப்போலியனுக்கு மிகப்பெரிய படையை உருவாக்கித்தந்த இம்முறை, பின்னர் பிற நாடுகளாலும் பின்பற்றப்பட்டது. அமெரிக்காவில், விடுதலைப்போர், உள்நாட்டுப்போர், இரு உலகப்போர்கள், கொரிய, வியட்னாம் போர்கள் ஆகியவற்றின்போது, கட்டாய ராணுவப்பணி நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து இளைஞர்களும் போர்க்களத்துக்குத் தேவையில்லை என்ற நிலையேற்பட்டதால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், செலக்டிவ் சர்வீஸ் சிஸ்ட்டம் என்ற தேவையான அளவுக்கு ராணுவத்துக்கு அழைக்கும் முறை உருவாக்கப்பட்டது. இதன்படி, 18-25 வயதுள்ள அனைவரும் பதிவு செய்யப்பட்டு, 20,21,22,23,24,25,20,19 என்ற வயது வரிசையில், தேவைக்கேற்ப போருக்கு அழைக்கப்பட்டனர். வியட்னாம் போரையே தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் எதிர்த்த பின்னணியில், போர்க்களத்துக்கு வர விருப்பமில்லாத இளைஞர்கள் ‘லாட்டரி’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டாயமாகப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போருக்குத் தகுதியானவர்களின் பட்டியல் இன்றும் பராமரிக்கப்பட்டாலும், கட்டாய ராணுவப்பணி தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் இல்லை. சில நாடுகளில் முழுமையாகவும், சில நாடுகளில் கட்டுப்பாடுகளுக்குட்பட்டும் கட்டாய ராணுவப்பணி இன்னும் நடைமுறையிலிருந்தாலும், பெரும்பாலான உலக நாடுகள் இதனைக் கைவிட்டுவிட்டன.

ஜார்ஜ் எவரஸ்ட் மறைந்த தினம்

இந்தியாவில் குமரியில் துவங்கி முசூரி வரை அளந்த ஜார்ஜ் எவரஸ்ட் மறைந்த தினம் – இன்று. எவரஸ்ட் என்றால் மலை/சிகரம் என்று எண்ணியிருப்போம் நாம் இதுவரை அதன் காரணம் அறிவோம் இன்று. ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம். இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும் ?. ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார் ; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால், நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார். இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம் அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று, இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார். டைபாய்டு காய்ச்சல்,மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன் !” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக்கொண்டு போய் பார்த்துவிட்டு,கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைத்துப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள்.இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும்,டெராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர் ; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை -நானூறு மைல்கள். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதித்திருந்தார் எவரெஸ்ட். தென் ஆப்ரிக்காவில் படுத்துக்கொண்டு உடல்நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும் குறிப்பு என்ன தெரியுமா ? “லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48’ என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது.

ரோசா பார்க்ஸ்சை கைது செய்த நாள்

1955 – மாண்ட்கோமரி பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்த, பேருந்தில் வெள்ளையருக்கு இடம் தராத குற்றத்துக்காக, ரோசா பார்க்ஸ் என்ற பெண்மணியைக் கைது செய்த நிகழ்வு நடந்த நாள். அக்காலத்தில், ஜிம் க்ரோ சட்டங்கள் என்றழைக்கப்பட்ட, நிறவேற்றுமைச் சட்டங்கள் மாண்ட்கோமரி பகுதியின் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்டன. இவற்றின்படி, ஓட்டுனர் பணிக்குக் கருப்பினத்தவர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். கருப்பினத்தவர்கள் பேருந்தின் பின்பகுதியில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். முழுக்கட்டணமும் செலுத்தியிருந்தாலும் பாதியில் இறக்கிவிடப்படுவதும், ஓட்டுனர்களால் இவர்கள் தாக்கப்படுவதும் அடிக்கடி நடக்கும். வெள்ளையர்கள் வந்தால் இருக்கையை அவர்களுக்கு அளித்துவிட்டு நிற்க வேண்டும். அவ்வாறான ஒரு பேருந்தில், ரோசா பார்க்ஸ் வெள்ளையர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடமில்லை என்றாலும், ஒரு வெள்ளையருக்கு இடம் தர வற்புறுத்தப்பட்டபோது உறுதியாக மறுத்ததால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று அறிவித்து, 10 டாலர் அபராதமும், 4 டாலர் வழக்குச் செலவும் செலுத்த உத்தரவிட்டது. இதற்கு முன்பும் இத்தகைய நிகழ்வுகள் நடந்திருந்த நிலையில், 1955 டிசம்பர் 5இல் பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டமாக மாறியது. பேருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 75 சதவீதம் கருப்பின மக்கள் என்பதால், இந்தப் புறக்கணிப்பு, பேருந்துகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், போராட்டத்திற்கு ஆதரவாக, கருப்பின டாக்சி ஓட்டுனர்கள், பேருந்துக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு டாக்சியில் அழைத்துச் சென்றனர். இந்த டாக்சி ஓட்டுனர்கள்மீதும் மாண்ட்கோமரி நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நெருக்கடிகள் முற்றியதால், 1956 டிசம்பர் 20இல், பேருந்துகளில் வேற்றுமைகளைக் கடைப்பிடிப்பது சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. நிற பேதத்தை எதிர்த்து 1954 முதல் 1968 வரை நடைபெற்ற கருப்பின மக்கள் உரிமைப் பேராட்டத்தில், இந்தப் பேருந்துப் புறக்கணிப்பும், தீர்ப்பும் முக்கியமானதாக அமைந்தன.

உலகின் முதல் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்ட நாள்

1913 – வாகனத்தை உள்ளே ஓட்டிச்சென்று நிரப்பும், உலகின் முதல் பெட்ரோல் நிலையம், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அமைக்கப்பட்ட நாள் தொடக்க காலத்தில், ஹார்ட்வேர் கடைகளிலும், கொல்லர் பட்டறைகளிலும்தான் எரிபொருள் வாங்கவேண்டியிருந்தது. உலகின் முதல் நீண்ட கார்ப் பயணத்திலிருந்து திரும்பும்போது, ஒரு மருந்துக்கடையில்தான் பெர்த்தா பென்ஸ் மீண்டும் எரிபொருள் நிரப்பினார். பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் லைக்ராய்ன், ஈதரைப்போலவே இருக்கும். இதைத்தான் மருந்துக் கடையில் வாங்கி காரில் நிரப்பி, தன் திரும்பிவரும் பயணத்தை மேற்கொண்டார் பெர்த்தா பென்ஸ். அதனால் உலகின் முதல் பெட்ரோல் நிலையம் மருந்துக்கடைதான்! முதல் பெட்ரோல் விற்குமிடம் 1905இல் அமெரிக்காவின் மிசவுரியில் தொடங்கப்பட்டது. இதில் வாகனத்தை உள்ளே ஓட்டிச்சென்று நிரப்ப முடியாது என்பதால் இது கடைதான்! முதல் பெட்ரோல் நிலையம் 1913இல் அமைக்கப்பட்டாலும் பெரிய வரவேற்பை உடனடியாகப் பெறவில்லை. அக்காலத்தில் கார்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டும் காரணமல்ல. எல்லா கார்களும் பெட்ரோலால் இயங்கவில்லை. எத்தனால், மின்சாரம் ஆகியவை மட்டுமின்றி, நிராவியில் இயங்கும் கார்களும் புழக்கத்திலிருந்தன. இதனால் வாகனங்களுக்கு இலவசமாக நீர், காற்று ஆகியவற்றையும், பின்னர் சாலை வரைபடங்களையும் (மேப்) இலவசமாக வழங்கிய முதல் பெட்ரோல் நிலையம் இதுதான். 1917வரை பென்சில்வேனியா மாநிலம் முழுவதற்குமே 7 பெட்ரோல் நிலையங்கள்தான் இருந்தன. மோட்டார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறைந்த விலை கார்கள் வரத் தொடங்கியதையடுத்து, 1920இல் அமெரிக்கா முழுவதும் 15 ஆயிரமாகவும், 1920களில் இறுதியில் 2 லட்சமாகவும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. உலகம் முழுவதும் பெட்ரோல் என்று அழைக்கப்பட்டாலும், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கேசோலின், கேஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனால் அங்கு பெட்ரோல் நிலையங்கள் கேஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற நாடுகளில் பெட்ரோல் பம்ப், பெட்ரோல் ஸ்டேஷன் என்றும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் பங்க் என்றும் எரிபொருள் நிலையங்கள் அழைக்கப்படுகின்றன.

எல்லைப் பாதுகாப்புப் படை தினம்

எல்லைப் பாதுகாப்புப் படை தினம் (Border Security Force) இன்று. இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும். நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்

திவான் பகதூர் பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி காலமான தினம்.

சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் திவான் பகதூர் பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி காலமான தினம். 1914ம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண நீதித்துறையின் முதல் இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1917ம் ஆண்டு சென்னை ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இதை அடுத்து லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். இதே 1 டிசம்பர் 1927ல் மரணமடைந்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...