தவறான திசையில் வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பம் புவனேஸ்வரில் அறிமுகம்
புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேஸ்வர் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேஸ்வரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி, சாலைகளில் வேகத் தடுப்பு போன்று ஸ்பைக் பேரியர்கள் பொருத்தப்படும். இது எதிர் அல்லது தவறான திசையில் வரும் வாகனங்களின் டயர்களை கிழித்து பங்சராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக எஸ்பிளனேட் ஒன் மால் பகுதியில் இந்த டையர் கில்லர்கள் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு, பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது.
நகரில் 242 இடங்கள், தவறான வழியில் வாகனம் இயக்கப்படுவதால் நெரிசல் ஏற்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றியடைந்தால், 242 இடங்களிலும் இந்த டையர் கில்லர்களைப் பொருத்தலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.