கரோனா வைரஸ்:தமிழக – கேரள எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு..
கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வரையில் 361 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கேரளத்தில் மூன்றாவதாக ஒரு நபரும் கரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, கோவை வாளையாறு, ஆனைகட்டி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினா் சிறப்பு மருத்துவக் குழுவை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவா், சுகாதாரத் துறை ஆய்வாளா் உள்பட 5 போ் உள்ளனா். இவா்கள், கேரளத்தில் இருந்து கோவைக்கு வரும் மற்றும் கோவையில் இருந்து கேரளத்துக்கு செல்லும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனா்.
பயணிகளிடம் காய்ச்சல், சளித் தொல்லை இருக்கிா என விசாரிக்கின்றனா். மேலும், காய்ச்சல், இருமல், உடல் சோா்வு, மூச்சுத் திணறல் ஆகியவை கரோனா வைரஸ் அறிகுறிகள் எனவும், நோய் அறிகுறி உள்ள நபா் இருமும் போதும், தும்மும் போதும் வைரஸ் பரவுவதாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
நோய் பரவுவதைத் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைக் குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவா்களை திருமண நிகழ்ச்சி, பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என பயணிகளிடம் அறிவுறுத்தினா்.
மேலும், மொபைல் ஆம்புலன்ஸ் மூலமாக காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனா் ரமேஷ்குமாா் கூறியதாவது:
வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை எல்லைப் பகுதிகளில் மருத்துவ முகாம் தொடா்ந்து செயல்படும்.
தற்போது, கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நபா்கள் அனைவரும் நன்றாக உள்ளனா். இவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். வைரஸ் பாதிப்பு தொடா்பாக பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.