தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, மற்றுமொரு சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி

 தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, மற்றுமொரு சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி

நியூஸிலாந்து அணி வெற்றி பெற 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள்.

எந்த அணி வெற்றி பெறும் என எண்ணுவீர்கள்?

   நியூஸிலாந்து என்று தானே! ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தமுறையும் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் ரசிகர்களுக்கு மற்றுமொரு சூப்பர் ஓவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தமுறையும் சூப்பர் ஓவரை வீசிய செளதியை அழகாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது.

   இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். எனவே, வில்லியம்சனுக்குப் பதிலாக டிம் செளதி கேப்டனாகச் செயல்பட்டார்.

    டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வில்லியம்சன், கிராண்ட்ஹோமுக்குப் பதிலாக டாம் ப்ரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர் நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

   தொடக்க வீரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினார்கள். 2-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கே.எல். ராகுல் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை நகர்த்தினார். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த கோலி, பென்னட் பந்துவீச்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 7 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். 

   இந்திய அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த கே.எல். ராகுல் சிக்ஸர் அடிக்க முயன்று 26 பந்துகளில் 39 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். என்னால் எந்த மைதானத்திலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்று பேட்டியளித்த ஷிவம் டுபே, 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் சோதி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர், சான்ட்னர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். முதல் மூன்று டி20 ஆட்டங்களிலும் அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று மிகவும் ஏமாற்றம் அளித்தார்கள்.

   12-வது ஓவரிலேயே பின்வரிசை வீரர் ஷர்துல் தாக்குர் விளையாட வந்தது இந்திய அணி இன்று பேட்டிங் செய்த விதத்தை வெளிப்படுத்தியது. பாண்டே – தாக்குர் ஆகிய இருவரும் 17-வது ஓவர் வரை தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தார்கள்.

15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்குர் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

   9-வது ஓவரின்போது ராகுல் அவுட் ஆனபிறகு களமிறங்கிய மணிஷ் பாண்டே, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். மற்ற வீரர்கள் செய்த தவறை தானும் செய்யாமல் பக்குவமாக விளையாடினார். அவரும் மற்றவர்கள் போல வந்தவேகத்தில் வெளியேறியிருந்தால் இந்திய அணியின் நிலைமை மோசமாகியிருக்கும். அவரால் தான் இந்திய அணி கெளரவமான ஸ்கோரைப் பெற்றது. 

   19-வது ஓவர் முழுக்க விளையாடிய சைனி, சில பந்துகளை வீணடித்து ரசிகர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தினாலும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரிலும் 10 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே, 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சைனி 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸி. தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

   இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால், ரன்கள் எடுக்கத் தடுமாறினார்கள் நியூஸிலாந்து தொடக்க வீரர்கள். கப்தில் 4 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மன்ரோவும் சைஃபர்ட்டும் அற்புதமாக விளையாடி வேகமாக ரன்கள் குவித்தார்கள். 47 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த மன்ரோ, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ப்ரூஸ், சஹால் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாடினார்கள். ஆனால் சைஃபர்ட் – டெய்லர் ஜோடியால் நியூஸிலாந்து அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. 19 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியவில்லை. இதனால் 4-வது டி20 ஆட்டத்தை வெல்லும் நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. 32 பந்துகளில் அரை சதமெடுத்தார் சைஃபர்ட். 

  19-வது ஓவரை வீசிய சைனி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற, 7 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை ஷர்துல் தாக்குர் வீசியதால் இந்திய ரசிகர்கள் சிறிது பதற்றம் அடைந்தார்கள்.

   முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 24 ரன்களில் வெளியேறினார் டெய்லர். அடுத்த பந்தில் மிட்செல், பவுண்டரி அடித்ததால் நியூஸிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 4 பந்துகளில் 3 ரன்கள். அடுத்தப் பந்தில் சைஃபர்ட்டை ரன் அவுட் செய்தார் ராகுல்.

இதற்குப் பிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டது. சான்ட்னர் 1 ரன் எடுத்தார். 2 பந்துகளில் 2 ரன்கள். 

   ஐந்தாவது பந்தில் மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல். இதனால் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இக்கட்டான நிலைமை ஏற்பட்டது நியூஸிலாந்து அணிக்கு. அந்தக் கடைசிப் பந்தில் சான்ட்னரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ரன் எடுக்க முயன்று அவர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது. மீண்டுமொரு சூப்பர் ஓவர்!

  இந்தமுறை சூப்பர் ஓவரில் நம்பிக்கையுடன் பந்துவீசினார் பும்ரா. ஒரு பவுண்டரி அடித்த சைஃபர்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் மன்ரோ ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா வீசிய 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து அணி.

    14 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. மீண்டும் சூப்பர் ஓவரில் பந்துவீசினார் செளதி. முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல் அடுத்தப் பந்தில் பவுண்டரி அடித்து மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த கோலி, 5-வது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 

3-வது டி20 ஆட்டம் போலவே இம்முறையும் தோல்வியின் விளம்பில் இருந்து வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய அணி. 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது டி20 ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...