கோடியக்கரையில் இருந்து சென்ற பாம்பன் மீனவர்கள் உள்ளட்ட 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.
வேதாரண்யம்: கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கடலுக்குள் சென்ற பாம்பன் மீனவர்கள் உள்பட 8 பேரை படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்று வரும் மீன்பிடிப் பருவத்தையொட்டி பல்வேறு மாவட்ட மீனவர்கள் தற்காலிகமாக தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பாம்பன் , தெற்கு வாடி பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாம் மகன் மரிய ஜுன்கட்டார் (28) என்பவருக்கு சொந்தமான ஐ.என்.டி.டி என் – 10 எம்.ஒ.1353 என்ற வல்லம் படகு மீன் பிடிக்கு ஈடுத்தப்பட்டது. இந்த படகு ஜன.27 ஆம் தேதி 8 மீனவர்களுடன் கடலுக்குள் சென்றுள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முல்லைத்தீவு கடற்கரைப் பரப்பில் இந்தப் படகு நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர் அவர்களை படகுடன் கைது செய்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.