கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்!
கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
உலகின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சமீபத்தில் கரோனா வைரஸ் குறித்து தேடுபொறி தளமான கூகுளில் மக்கள் அதிகம் தேடிப் படிக்கின்றனர்.
இந்நிலையில், கூகுளில் கரோனா வைரஸ் குறித்து தேடும் பல நபர்கள் கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இந்தக் குழப்பத்தில் கரோனா வைரஸுக்கு பதிலாக ‘கரோனா பீர் வைரஸ்’ குறித்து சிலர் படித்துள்ளனர். ‘கரோனா பீர் வைரஸ்’ என்ற தலைப்பில் சமீபத்தில் கூகுளில் அதிக தேடல்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கரோனா என்ற பெயரில் பிரபலமான ஒரு பீர் ப்ராண்ட் இருப்பதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சில பகுதிகளில் ‘கரோனா’ என்று தேடும்போது கூகுள், ‘கரோனா பீர்’ என பரிந்துரைப்பதாலேயே மக்கள் குழப்பமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தகுறித்து ரீலேபோகா மாஷியானே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸுக்கும். கரோனா பீருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இரண்டு புகைப்படத்தின் மூலமாக விளக்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
எனவே மக்கள் கூகுளில் தேடும்போது, ‘கரோனா வைரஸ்’ என்று தெளிவாக பதிவிட்டு சரியானதை படிக்கவும்.