இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.11.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (18.11.2024)

தி.ஜானகிராமன் காலமான நாள்

மோகமுள்’, `அம்மா வந்தாள்’, `மரப்பசு’, `உயிர்த்தேன்’, `நளபாகம்’ போன்ற நாவல்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற தி.ஜானகிராமன் காலமான நாள். 😓

ஒரு நாவலாசிரியராகவே அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவரது `சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

தி.ஜா. என்றும் அழைக்கப்படும் இவர் இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாள் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

தமிழ்நாட்டு நீதிமான்களில் ஒருவரான வி.பாஷ்யம் அய்யங்கார் காலமான தினமின்று!

ஐகோர்ட் காம்பவுண்டுக்குள் அவருக்கு சிலை வைப்பதா? அதை தரிசனம் செய்து விட்டுத்தான் நாங்கள் கோர்ட்டுக்குள் வரவேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது’ என்று ஒரேயடியாக நீதிபதிகள் அடம் பிடித்தார்கள். வழக்கறிஞர்கள் சிலர் விடவே இல்லை. தொடர்ந்து போராடி, அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து ஒருவழியாக சிலை வைத்தார்கள்.

புகழ் பெற்ற சிற்பி எம்.எஸ்.நாகப்பா தத்ரூபமாக வடித்த அந்த சிலை ஐகோர்ட் வளாகத்திற்குள் வந்த பிறகு, நீதிபதிகள் வேறுவிதமாக வெறுப்பைக் காட்டினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்குப் பக்க வாசல் வழியாக வந்தால் அந்த சிலையைப் பார்த்துக் கொண்டு வரவேண்டியிருக்கும் என்பதால், தெற்குப் புற வாசலை அதிகம் பயன்படுத்தினார்கள்.

சத்தமில்லாமல் இன்னொரு வேலையையும் செய்தார்கள். ஐகோர்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி கட்டடங்களை இணைக்கும் பாதையின் பக்கங்களில் நிர்வாக அலுவலகங்களையும், ஆவணக் காப்பகத்தையும் செயல்பட செய்துவிட்டார்கள். அப்படி என்றால் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்ல வேண்டி இருக்காதல்லவா? எவ்வளவு வன்மம் பார்த்தீர்களா? சிலை வைப்பதற்கே இவ்வளவு எதிர்ப்பென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அப்படிப்பட்ட ஆங்கிலேயரின் இனவெறி எதிர்ப்புகளை முறியடித்து, சட்டத் தொழிலில் வென்றவரான வி.பாஷ்யம் அய்யங்கார், இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டபடி கம்பீர சிலையாக உட்கார்ந்திருக்கிறார்.

அப்படி அதிரடி நீதிமானாக நீதிபதியசக இருந்து அப் பதவியிலிருந்து விலகிய பிறகு வழக்கறிஞராக மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்தார். 1908 நவம்பரில் முக்கிய வழக்கு ஒன்று, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்.அர்னால்டு ஒயிட், நீதிபதி அப்துர் ரகீம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் காலையிலிருந்து வாதங்களை முன்வைத்த அய்யங்கார் திடீரென மயங்கி விழுந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இதே நவம்பர் 18 அன்று மரணமடைந்தார்.

நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 18, 1787).

லூயி தாகர் (Louis-Jacques-Daguerre) நவம்பர் 18, 1787ல் பிரான்சில் வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். பிரான்சின், இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.

உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.

பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோவகை எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் ஜூலை 10, 1851ல் தனது 63வது வயதில், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இன்றைய தேதியான நவம்பர் 18ல் தான் ( 2002) – நம்ம சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டுச்சு.

சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவ மனையாக மாற்றப் படாமல் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது !இப்பேருந்து நிலையத்துக்கு தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்..ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் இப்போ இந்த பஸ் ஸ்டேண்ட் என்ன ஆகப் போகுது என்று தெரியவில்லை.

திருமலை கிருஷ்ணமாச்சாரியார் பிறந்த நாள்

இந்தியாவின் தலைசிறந்த யோகா குருவாகவும் ஆயுர்வேத பண்டிதராகவும் திகழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1888ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார்.

16 வயதில் இவருடைய கனவில் இவரின் மூதாதையரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த யோகியுமான நாதமுனியும் தோன்றி தமிழகத்தின் ஆழ்வார் திருநகருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அதை மேற்கொண்டு இவர் தமிழகம் வந்தார்.

இவர் 1916ஆம் ஆண்டு யோகேஷ்வரா ராமா மோகனிடம் கல்வி பெற கைலாய மலைக்குச் சென்றார். அங்கு ஏழரை ஆண்டுகள் யோகா பயிற்சிகளை ஆழமாகப் பயின்றார். 11 வருடங்கள் பனாரசில் தங்கியிருந்தார். மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற பிரத்யேக யோகா அமைப்பை 1933ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரைகள் மூலமாகவும், செயல்முறை விளக்கம் மூலமாகவும் யோகாவை வளர்த்தார். யோகா பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார். யோக மகரன்தா, யோகாசனகளு, யோக ரஹஸ்யா, யோகாவளி ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

யோகாஞ்சலிசாரம், எஃபக்ட் ஆஃப் யோகா பிராக்டீஸ் உள்ளிட்ட பல கட்டுரைகளையும்,கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகா குருவாகப் போற்றப்பட்ட திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.

முதல் அழுத்தும் பட்டன் தொலைபேசி அறிமுகப்படுத்திய நாள்

வணிக அடிப்படையிலான முதல் அழுத்தும் பட்டன் தொலைபேசிச் சேவையை, பெல் சிஸ்ட்டம் என்ற தொலைபேசி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிமுகப்படுத்திய நாள் நவம்பர் 18.

பெல் சிஸ்ட்டம் என்பது, பின்னாளில் ஏடி அண்ட் டி ஆக மாறிய பெல் டெலிஃபோன் கம்ப்பெனியின் முயற்சியிலும், தலைமையிலும், தொடக்கத்தில் தொலைபேசி வசதியை வழங்கிவந்த (தனியார்) நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மாறுபட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கிடையே தொலைபேசி அழைப்புகளை இணைத்தல், பொதுவான தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும்.

தொலைபேசி இணைப்பகத்திலுள்ள ஊழியரிடம், நாம் பேச வேண்டியவரைச் சொல்லி இணைக்கப்படுவதே தொடக்ககால தொலைபேசியாக இருந்தது. தொலைபேசி எண்கள் வந்துவிட்டாலும், அதனை எந்திரத்திற்கு நேரடியாகத் தெரிவிப்பதற்கு அக்காலத்தில் தொழில்நுட்பம் இல்லை. தந்தி போன்ற கருவியின்மூலம், எண்களை உள்ளிடக்கூடிய தானியங்கி தொலைபேசி இணைப்பகம், ஆல்மன் ஸ்ட்ரோஜர் என்ற அமெரிக்கரால் 1892இல் உருவாக்கப்பட்டது. முதல் ரோட்டரி டயலை இவரே உருவாக்கினார்.

நேர்மின் சுற்றால் இணைக்கப்பட்டிருக்கிற தொலைபேசி இணைப்பகத்தில், துடிப்புகளின்மூலம் எண்களை உள்ளிடும் இந்த முறையில், எண்ணைச் சுழற்றும்போதே துடிப்புகள் செல்லும். இதில் தவறுகள் அதிகம் நிகழ்ந்ததால், சுழலை ஸ்ப்ரிங்மூலம் திரும்பச் சுழலச்செய்து, அவ்வாறு திரும்பச் சுழலும்போது துடிப்புகள் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட சுழல் டயலே மிகநீண்ட காலம் பயன்பாட்டிலிருந்தது. இடையில், ரிசீவரை மாட்டும் கொக்கியையே ஸ்விட்ச்சாகப் பயன்படுத்தி, எந்த எண்ணோ அத்தனை முறை, வேகமாக கொக்கியைத் தட்டுவது உருவாகி, துல்லியமின்மையால் கைவிடப்பட்டது.

ஆனால், இங்கிலாந்தில், நாணயம் போட்டுப் பயன்படுத்தும் தொலைபேசிகளை இம்முறையில் நாணயமின்றி(கட்டணமின்றி!) மக்கள் பயன்படுத்தியதால், இது குற்றமாக அறிவிக்கப்பட்டது தனிக்கதை! துடிப்புகளின்மூலம் இணைப்பை ஏற்படுத்துவது தாமதமாவதாகப் பின்னாளில் உணரப்பட, ‘டோன்’ டயலிங்குக்கான முயற்சிகள் தொடங்கினாலும், ட்ரான்சிஸ்ட்டர் கண்டுபிடிக்கப்படும்வரை அது வெற்றிகரமாகவில்லை.

ட்ரான்சிஸ்ட்டரின் வருகைக்குப்பின், ஏடி அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய ட்யூயல்-டோன் மல்ட்டி-ஃப்ரீக்வென்சி(டிடிஎம்எஃப்) சிக்னலிங் என்ற டோன் டயலிங் முறையை, மூன்றாண்டுகள் வாடிக்கையாளர்களிடையே அந்நிறுவனம் சோதித்தபின், இந்நாளில், பெல் சிஸ்ட்டத்தில் வணிக அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. சுழல் டயலுக்கான துடிப்புகளை உருவாக்கும் புஷ் பட்டன் தொலைபேசிகளும் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டாலும், டிடிஎம்எஃப் முறையில் டயல் செய்யும் தொலைபேசிகளே சீர்தரமாக நிலைபெற்று, இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

உலக சி.ஓ.பி.டி தினம் இன்று.

உலக அளவில், மனித உயிர் இழப்புக்கான காரணிகளில் நான்காவது இடத்தில் மூச்சுக்குழாய் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி (Chronic obstructive pulmonary disease)) இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

நாம் உயிர்வாழ ஆக்சிஜன் தேவை. காற்றில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் பிரித்து ரத்தத்தில் சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியாகத்தான் நுரையீரலை அடைகிறது. மூச்சுக்குழாயில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, சுருக்கம் ஏற்படும்போது காற்று செல்வது தடைப்படுகிறது. தொடக்கத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், முற்றிலும் பாதிக்கப்படும் நிலைதான் நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...