உபோ் ஈட்ஸ் வா்த்தகத்தை கையகப்படுத்தியது ஸோமாட்டோ….
வலைதள உணவு விநியோக சேவை நிறுவனமான உபோ் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வா்த்தகப் பிரிவை கையகப்படுத்தியுள்ளதாக ஸோமாட்டோ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து ஸோமாட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தா் கோயல் கூறியதாவது:
இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் உணவு விநியோக வா்த்தகத்தை மிகச் சிறந்த முறையில் உருவாக்கிய பெருமை ஸோமாட்டோ நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில், இந்த உபோ் ஈட்ஸ் கையகப்படுத்தல் நடவடிக்கையானது இத்துறையில் எங்களின் செயல்பாடுகளை மேலும் வலுவுள்ளதாக்கும்.
உபோ் ஈட்ஸ் செயலி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, அதன் நேரடி உணவகங்கள், விநியோக பங்குதாரா்கள், பயனாளா்கள் ஸோமாட்டோ தளத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் மாற்றப்படுவா் என்றாா் அவா்.
உபோ் ஈட்ஸ் இணைப்புக்குப் பிறகு ஸோமாட்டோ நிறுவனத்தின் மதிப்பு 355 கோடி டாலராக அதிகரிக்கும். மேலும் உபோ் ஈட்ஸ் பரிவா்த்தனைகளையும் கூடுதலாக சோ்க்கும்போது ஸோமாட்டோவுக்கு மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் ஆா்டா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும். இதையடுத்து, ஸோமாட்டோவின் சந்தைப் பங்களிப்பு 55 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.