உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது. அப்போது சிறுமியுடன் இருந்த தாய், பொதுமக்களின் உதவியுடன் அவர்களை விரட்டி தனது மகளை மீட்டார்.
பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் கான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்மந்தப்பட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நான்கு பேரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று நான்கு குற்றவாளிகளில் ஒருவர் தனது நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த 5 பேரும் சிறுமியின் வீட்டுக்கு சென்று தங்களது மீது இருக்கும் புகாரை வாபஸ் பெறவேண்டும் என சிறுமியின் தாயை மிரட்டியுள்ளனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அப்பெண்ணை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை தொடர்ந்து தாக்கிய அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 8 நாட்கள் கழித்து உயிரிழந்தார். வாலிபர்கள் பெண்ணை தாக்கும் வீடியோவை ஆய்வு செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
