தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!
பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பரவும் மிக மோசமான ஒரு நோய்ப் பாதிப்பாக டெங்கு இருக்கிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு நோயால் உயிரிழப்புகள் கூட ஏற்படும்.
இதற்கிடையே இந்தாண்டு டெங்குவால் தமிழ்நாட்டில் இதுவரை 20,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறை: இது தொடர்பாகத் தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜனவரி 2024 முதல் நவம்பர் 5 வரை, தமிழ்நாட்டில் 20,138 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டதால் 8 பேர் பலியாகினர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணமும் அடங்கும்.