‘கா.சு.பிள்ளை’ பிறந்த தினம் இன்று..!
‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர் கா.சு.பிள்ளை. அவரது பிறந்த தினம் இன்று.
கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதி நாத பிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 – 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர்.
திருநெல்வேலியில் சைவ சித்தாந்த சங்கம் ஒன்றை நிறுவி அதன் தலைவராக இருந்தார். இவருடைய நாற்பெருங்குரவர்களின் வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் இந்தச் சங்கம் மூலம் வெளிவந்தன. நெல்லையப்பர் கோயிலில் தர்மகர்த்தாவாக இருந்து இறைப் பணிகள் செய்தார். ‘சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம்’, ‘இந்து சமயங்களின் சுருக்க வரலாறு’ போன்ற நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
கலப்புத் திருமணம்; கைம்பெண் மறுமணம்; ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை; தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்றுமொழி; தமிழிலேயே கடவுள் வழிபாடு; தமிழிலேயே சமயச் சடங்குகள் போன்றவற்றை வலியுறுத்தினார். கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பொருட்களை ஏழைகளின் கல்வி நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘பல்கலைப் புலவர்’, ‘பைந்தமிழ்க் காசு’ எனப் புகழ்ப்பெற்ற கா.சு.பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றினார். தமிழின் கருவூலமாகவும், சைவத்தின் திருவுருவமாகவும் விளங்கிய கா.சு.பிள்ளை 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மறைந்தார்.