எம்.ஜி.ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள் இன்று..!
வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.விஷயம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகையாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, “எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல் இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்.என்று கூறினார்.
இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. சட்டசபையில் சித்தன் (இ.காங்கிரஸ்) பேசும்போது, “எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன்,”5.10.1984 வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு “ஆஸ்துமா” போன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ ஆஸ்பத்தி ரியை சேர்ந்த டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய டாக்டர்கள் குழுவினர் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து கவனித்து வருகிறார்கள்.மறுநாள் முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கிவிட்டது. இன்று காலையில் முதல் அமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்.மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசீஸ்) நல்ல உதவியை செய்துள்ளது. சிறு நீரகத்தை கிட்னி என்ற உறுப்பில் இந்த டயாலிசீஸ்’ இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வயிற்று குடலில் உள்ள ஜவ்வில்தான் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.” என்று நெடுஞ்செழியன் கூறினார்..
பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி,”நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த திரவத்தை “பெரிடோனியல் டயாலி சீஸ்” முறை மூலம் முழுவதுமாக வெளி எடுத்துவிட்டோம்.இது போன்றவற்றால் சிறுநீரகத்தில் மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே “டயாலிசீஸ்” மூலம் திரவத்தை வெளியேற்றினோம்.அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. எனவே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்கவேண்டும். ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல.” என்று அவர் கூறினார்..
இப்படி எம்.ஜி.ஆர். உடல் நிலை தேறி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் 14ந்தேதி அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.
அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கை,””13ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உடல் நிலையை ஆராய்ந்தார்.
தலைப்பகுதியை `எக்ஸ்ரே’ படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.” என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது..சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வெளிநாட்டிற்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்புவதாக இருந்தாலோ அதற்கு உதவிகளை செய்வதாக கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.
அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.அக்காலக்கட்டத்தில் அப்போலோ வராண்டாவில் அமர்ந்து, படுத்துறங்கி செய்தி சேகரித்தோரில் அடியேனும் ஒருவர். திரை உலக பிரமுகர்கள், நடிகர்_ நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு படை யெடுத்தனர். எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி விசாரித்தனர்.கோயில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
ஆஸ்பத்திரி சார்பிலும் மருத்துவ அறிக்கை அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. 16ந்தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திராகாந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அறைக்கு சென்று 10 நிமிடம் இருந்து எம்.ஜி.ஆரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.அப்போது அந்த அறையில் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் மற்றும் டாக்டர்கள் இருந்தனர். பிறகு டாக்டர்களுடன் இந்திரா 15 நிமிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந் தார். மொத்தம் 30 நிமிடம் இருந்துவிட்டு இந்திரா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது நடந்த கேள்வி – பதில் :.
கேள்வி:- எம்.ஜி.ஆர். உடல் நிலை எப்படி இருக்கிறது?
பதில்:-அவரை பார்க்கப்போன எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். “நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றை சமாளித்து இருக்கிறீர்கள்.அதுபோல இப்போது மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல் லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்” என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார்.நாங்கள் அவர் இருக்கிற அறைக்கு போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள்.
கேள்வி:- மேற்கொண்டு சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரா?
பதில்:-வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வருகிறார்கள். எம்.ஜி.ஆரை பரிசோதித்துவிட்டு, அவரை வெளி நாட்டுக்கு கொண்டுபோகவேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.” என்று இந்திராகாந்தி கூறினார்.
பின்னர் அமைச்சர் ஹண்டேயையும் இந்திரா டெல்லிக்கு அழைத்துச்சென்றார் -சில சுப்பீரியர் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யதான்.
ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமராவ், கர்நாடக முதல் மந்திரி ஹெக்டே, மத்திய மந்திரிகள் பலர் எம்.ஜி.ஆர். உடல் நிலைபற்றி விசாரித்தபடி இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.
அக்டோபர் 17ந்தேதி காலையில் எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் பிரீட்மேன் (நியூயார்க் நகரில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப் பிரிவு தலைவர்), டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் (வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர்), டாக்டர் ஸ்ரீபரதராவ் (புருக்லீன் டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரி டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்), டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் (டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர்) ஆகியோர் சென்னை வந்தார்கள்.
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அவர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே வரவேற்று தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். காலை 8.20 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க டாக்டர்கள் வந்து எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர்.பின்பு இதுவரை சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்பு அமெரிக்க டாக்டர்களை நிருபர்கள் மீட் பண்ணிய போது,””எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன. வலதுபுற கை, கால் செயல் இழந்து உள்ளன.இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக அளித்த சிகிச்சையால் அவரது உயிரை காப்பாற்றி குணம் அடையும் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.”இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்…..
டாக்டர் பிரீட்மேன் கூறும்போது, “எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள்.
அமெரிக்க டாக்டர் பிரீட்மேன் அமெரிக்கா புறப்படும் முன்பு விசேஷ பேட்டி அளித்தார். “எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பழைய நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையை தொடர முடியும். அவர் 67 வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால்நடக்கமுடியும்” என்று கூறினார்.
ஆனால் திடீரென்று எம்.ஜி.ஆரின் மூளையில் ஒரு கட்டி ஏற்ப்படிருப்பதாகவும் அந்த ரத்தக்கட்டியை கரைப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானிய நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் 20_ந்தேதி சென்னை வந்தார்கள்.காலை 7.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். எம்.ஜி.ஆர். அறைக்குச்சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதித்தனர். மொத்தம் 2 மணி நேரம் பரிசோதனை நடந்தது. எம்.ஜி.ஆரின் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்கட்டியை கரைக்க அறுவை சிகிச்சை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதுவும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து போய் பண்ன திட்டமிட்டார்கள்
அதாவது இன்னும் சில வாரங்கள் கழித்து “பைபாஸ்” முறையில் ரத்த குழாய்களில் ஒட்டு அறுவை சிகிச்சை பெறச்செய்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது பற்றி சிந்திப்பதாகவும் ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர்.எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து சில முக்கியமான மருந்துகளையும் ஜப்பான் டாக்டர்கள் கொண்டு வந்தார்கள். மூளையில் உள்ள வீக்கத்தை குறைக்க அவர்கள் கொண்டு வந்த “கிளிசரால்” என்ற மருந்து எம்.ஜி.ஆர். உடலில் ஏற்றப்பட்டது.
மேலும் விமானப்பயணத்தை எம்.ஜி.ஆர். உடல் தாங்குவ தற்கான விசேஷ மருந்தும் ஜப்பானில் இருந்து வர வழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் சென்று மீண்டும் வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் கானு, நகமோரா ஆகியோர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். இச்சூழலில் எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் மாண்டனர். கோவையைச் சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பேர் பாதயாத்திரை சென்று வழிபாடு நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருடன் அன்பழகன், துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், டி.ஆர்.பாலு, நீலநாராயணன் ஆகியோரும் சென்றனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், டாக்டர்கள் ஆகியோரை கருணாநிதி சந்தித்து எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து விசாரித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனும் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரித்தார். இதற்கிடையே எம்.ஜி.ஆரிடம் இருந்த இலாகாக்களை, அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று கவர்னர் குரானா அறிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி புதிய பிரதமராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் உடல் நிலையைக் கருதி, இந்திரா காந்தி மரணம் அடைந்தது பற்றி, அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.எம்.ஜி.ஆர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது. விமானப் பயணம் செய்யும் அளவுக்கு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது அல்லவா?.
அதையொட்டி எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் 3ந்தேதி சென்னை வந்தார். எம்.ஜி.ஆரை பரிசோதித்து விட்டு, “எம்.ஜி.ஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் தேவை இல்லை” என்று அறிவித்தார். எனவே, மூளை ஆபரேஷனுக்காக எம்.ஜி.ஆரை ஜப்பானுக்கு கொண்டு செல்லும் யோசனை கைவிடப்பட்டது.ஆனாலும், சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந் தன. அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனை சிறுநீரக கோளாறுக்காக, சிகிச்சை அளிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த ஆஸ்பத்திரியில்தான் எம்.ஜி. ஆருக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்று அமைக்கப்பட்ட விசேஷ விமானம் தயாரானது. அந்த `போயிங்’ ரக விசேஷ விமானம் 4_ந்தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டு படுக்கை வசதி, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசீஸ்) கருவிகள், ரத்தப்பரி சோதனை கருவி, பிராணவாயு சிலிண்டர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.விமானம் பறக்கும்போது சிகிச்சை கருவிகள் சரிவர இயங்குகின்றனவா? என்று பரிசோதிக்க இந்த விமானம் 70 நிமிடம் வானத்தில் சென்னை நகரை சுற்றி பறந்தது. பின்னர் தரை இறக்கப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் மந்திரி நரசிம்மராவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், ஜி.பார்த்தசாரதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்கள்.ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார்கள். ராஜீவ் காந்தியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்கள்.
இதையடுத்து இதே 5.11.1984 இரவு 9.05 மணிக்கு எம்.ஜி.ஆரை `ஆம்புலன்ஸ்’ வேன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி ஜன்னல்களின் திரை தொங்கவிடப்பட்டிருந்தது.இருபுறமும் போலீஸ் ஜீப்புகள் சென்றன. ஜானகி அம்மாள், டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். இரவு 9.55 மணிக்கு ஆம்பு லன்ஸ் வேன் விமான நிலை யத்தை அடைந்தது. அங்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் காத்திருந்த னர். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, அவர் மனைவி மீனா அம்மாள் மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தனர்.
விமானத்தின் அருகில் கவர்னர் குரானா, அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்றனர். விமானம் அருகே ஆம்புலன்ஸ் வேன் சென்றதும் எம்.ஜி.ஆர். இருந்த தூக்குப் படுக்கையை (ஸ்டிரெச்சர்) இயந்திர கருவி மூலம் அப்படியே தூக்கி விமானத்துக்குள்ளே வைத்தார்கள். சரியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது.பின்னர் இந்திய நேரப்படி 6.ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரத்தை அடைந்தது. அமெரிக்க டாக்டர்கள் விமானத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதித்தனர். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.பின்னர் எம்.ஜி.ஆர். ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு ஏற்கனவே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியின் 5 வது மாடியில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
10ந்தேதி எம்.ஜி.ஆரை சாய்வு நாற்காலியில் அமர வைத்தார்கள். 2 மணி நேரம் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்ததாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்தது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.