அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது..!

 அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது..!

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, அப்போதைய அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார். ஜோ பைடனின் ஆட்சி காலம் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (நவ.5) நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க மக்கள் தங்கள் அதிபரை நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக (எலெக்ட்ரோல்) அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

இந்த எலெக்ட்ரோல் ஓட்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். அந்தவகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கலிபோர்னியாவில் 54 எலெக்ட்ரோல் ஓட்டுகளும், குறைந்த மக்கள் தொகை உள்ள வியாமிங் மாகாணத்தில் 3 ஓட்டுகளும் உள்ளன.மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 48 மாகாணங்களில் அதிக ஓட்டு பெறுபவர்களுக்கு, அனைத்து எலெக்ட்ரோல் ஓட்டுகளும் கிடைத்துவிடும். அவரே வெற்றி பெற்றவராவார். மைன், நெப்ரஸ்கா மாகாணங்களில் மட்டுமே 2-ம் இடம் பெறுபவர்களுக்கு விகிதாசார முறைப்படி ஓட்டுகள் பகிர்ந்து வழங்கப்படும். மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

எஞ்சியவர்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இன்று (நவ.5) வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். தற்போதைய நிலவரப்படி கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...