பொங்கல் வாழ்த்தும் தபால்காரரும் – மன்னார்குடி அம்ரா பாண்டியன்
பொங்கல் வாழ்த்து அட்டையை அஞ்சல் தலை ஒட்டி அனுப்பிவிட்டு, எப்படா தபால்காரர் பொங்கல் வாழ்த்து அட்டையைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்தக் காலம்!
அன்றைய பொங்கல் விழா வாழ்த்து அட்டைகளில்தான் ஆரம்பமானது. ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களிலும் கூட்டங்கள் நிறைந்து வழிந்தது. சில சமயங்களில் மளிகைக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் ஒரு ஓரமாக தொங்கிக் கொண்டிருக்கும். தனியே இதற்கென பலகையைப் போட்டு வாழ்த்து அட்டைகளை நிரப்பி விற்பனை செய்து சீசன் வியாபாரம் செய்துகொண்டும் பலர் இருப்பார்கள். இதைத் தேடித் தேடி தேர்வு செய்வதற்கு மெனக்கெட்டனர் மக்கள் அன்று.
ஒருவழியாகப் பிடித்தமான வாழ்த்து அட்டையைத் தேடிப்பிடித்து, அதில் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு, அதை உறையிலிட்டு முகவரி எழுதி அஞ்சல் தலையை ஒட்டி, முதல்வேலையாகத் தபால் பெட்டியைத் தேடிப்பிடித்து போட்டு விட்டு திரும்பும்போதுதான் நிம்மதியே வரும்.
நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். அதில் பொங்கலைச் சிறப்பித்துக் கவிதை வரிகள் நச்சென்று இடம்பிடித்திருக்கும். சில சமயம் இளசுகள் இலைமறை காயாக காதலைக்கூட இந்த வரிகளுடன் சேர்த்துத் தெரிவிக்கும் நயமும் அன்று இருந்தது.
தூரத்து உறவினர்களும் ஆண்டுக்கு ஒருமுறை அனுப்பும் இந்தப் பொங்கல் வாழ்த்து அட்டைக்கு நெகிழ்ந்து போய் விடுவர். விட்டுப் போன, மறந்துபோன, உறவுகளுக்குப் பாலமாய் அமைந்தது அன்றைய பொங்கல் வாழ்த்து அட்டைகள். அந்த அட்டைகளில் கடவுள்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொங்கல் பானை, குழந்தைகள் கரும்பு சாப்பிடுவது, அலங்கரித்த மாடுகள் என அழகாய்ப் படங்கள் இடம்பெறும்.