மெய்யழகன்\moviereview

 மெய்யழகன்\moviereview

மெய்யழகன்\moviereview

காணும் மனிதர்களை எல்லாம் புன்னகையோடு வரவேற்று எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பாசத்தைத் தடையின்றிப் பொழிய ‘தான்’ என்ற அகந்தை அற்றுப் போயிருக்க வேண்டும்.

இன்றைய சூழலில் மெய்யழகன்கள் ‘ரொம்ப over -ஆ பண்றாங்கப்பா’ ‘சீன் போடுறாங்க பாரு ‘ எனும் அன்புத் தொல்லைகளாக, பிழைக்கத் தெரியாத, பட்டிக்காட்டான்களாகப் பார்க்கப்படுவார்கள் . ஆனால் அப்படிச் சொல்லும் அருள்மொழிகளுக்கு உள்ளே ஒரு காலத்தில் மெய்யழகன் இருந்திருப்பான். தூய்மையான அன்பை எங்கும் விதைத்து இயல்பான கரிசனத்தோடு எல்லோரையும் அரவணைத்துப் போயிருப்பான். சொல்லப்போனால் இளவயது அருளின் வளர்பிரதியே மெய்யழகன்.அப்படியே கிராமத்தில் இருந்திருந்தால்… பச்சைத் துரோகங்களை .. பெரும் இழப்புகளை சந்தித்து இருக்காவிடில் அவனும் அப்படித்தான் வெள்ளந்தியாக மனிதர்களிடம் இன்னும் நம்பிக்கை இழக்காமல் சட்டென நெருங்கி உறவாடிக் கொண்டிருப்பான்.தாய்மண்ணின் ஒட்டுறவை, வேர்களைத் தொலைத்தவனை காலம் இப்படித்தான் Diplomatic Gentle man ஆக வார்த்தெடுத்து விடும்.அவன் மனைவிக்கு ( தேவதர்ஷினி ) மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும் decent man அவன்.ஆனால், அவனுக்கு மட்டுமே தெரியும் உண்மையில் அவன் வாழ்வு, மனம் விட்டுச் சிரிக்க மறந்துபோய் அடையாளம் தொலைத்த குறைவாழ்வு என்பது.

விழிப்புணர்வு எனும் சுயம் பேணுதல் நம்மை எல்லாம் மனிதர்களை விட்டு எவ்வளவு விலகியோடச் செய்கிறது… ஆனாலும் எப்போதோ மெய்யழகன்போல் கள்ளங்கபடமின்றி உள்நோக்கமின்றி எவர் வாழ்விலோ ஏதோவொன்று மலர்ந்து விரிய காரணமாக இருந்திருக்கிறோம். அப்படியான காலங்களில்தான் முழு வாழ்வுக்குமான உறுதியை, மதிப்பீடுகளைக் கண்டெடுத்து உள்ளே புதைத்து வைத்திருக்கிறோம்.நம்மை நாமே இனம் காண, நினைவூட்ட தீராவலிகளை வழங்கிய இடங்களைக் கண்டு அஞ்சி ஒளிந்து கொள்ளாமல் புறந்திரும்பாமல் நேரடியாக சந்திப்போம். அப்படி சந்திக்கும்போது அங்கே நாம் தவற விட்ட நெகிழ்வான உறவொன்றை மீட்டெடுப்போம்.சொந்த வீடோ, சைக்கிளோ, பணமோ எது கைவிட்டுப்போனாலும் அது போகாது.

அவன் ஒருவன் மட்டுமல்ல.. இரவு நேரத்தில் முன்பின் தெரியாத நகரத்து ஆண்மகனிடம் ‘அண்ணே அண்ணே பூ வாங்காட்டி என்ன உக்காருங்க..டீத்தண்ணி குடிக்கறீங்களா bus போனா என்ன’ என கனிவை இயல்பாகக் கொட்டும் பெயரில்லாத அந்தப் பூக்காரியும், ‘எதாவது வேணும்னா கேளுங்க கேளுங்க ‘என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருக்கும்..’கஷ்டப்பட்டு மேல வந்துருக்காரு இப்போ சந்தோஷமா இருக்கட்டும்னு நான் எதுவும் சொல்றது இல்லண்ணே’ எனும் இன்முக மனைவி ஸ்ரீதிவ்யாவும் கூட மெய்யழகிகள்தான்.சரண் சக்தியின் புன்னகைமுகம் கண்ணில் நிறைகிறது.அரவிந்த்சாமியும் கார்த்தியும் கனகச்சிதம் தேர்ந்த நடிப்பென நான் சொல்ல வேண்டுமா என்ன..எவ்வளவு அழகான பாத்திரப்படைப்புகள்.தந்தையின் குற்றவுணர்வைக் கண்டு phone செய்து பேசக்கொடுக்கும் நகரத்து மகள் ஜான்வியும் அப்படிப் பிறருக்காக சிந்திப்பவள்தான். எனவே இந்த உலகில் நிறைய நல்இதயங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று உறுதியாக நேர்த்தியாக இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பக்காட்சிகளிலேயே நம்மோடு உடனடியாகப் பொருத்திக் கொள்ள முடியாத துயர்பாடல், ரியலிஸ்டிக்கான மெதுவான காட்சிகளின் நகர்வு, ராஜ்கிரணின் சொந்தவூர் பாசக்கார பெருசு கிளிஷே வசனங்கள் என்று வெகுசில இடங்களில் சலிப்புதட்டினாலும் பார்க்க வேண்டிய படமிது.

கிரின்ஞ் என்று தட்டிவிட முடியாத தங்கை புவனாவின் முத்துமாலை கண்ணீர், இழந்தவற்றை மீட்டெடுக்க முடியாதெனத் தெரிந்தும் தன்னையறியாமல் முன்நீண்டு.. நகர்ந்துகொள்ளும் முன்னாள் காதலியின் கடைசித் தொடுகை, அன்புக்குப் பணியும் மூர்க்கம் கொண்ட வளர்ப்புமிருகம், முணுமுணுத்து விட்டப்பாடல் இங்கேயே நிற்கிறது ஆனால் கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று மூளையைத்தட்டிப் பிடித்துவிடும் பிடிவாத மென்வரிகள்.. இப்படிப் படம் முழுக்க வாழ்தலுக்கான அழகழகான சிறுசிறு காட்சியமைப்புகளின் குறியீடுகள் மிகச்சிறப்பு.

தன் தோட்டத்திலேயே பாம்புகள் உலா வந்தாலும் அவற்றுக்கும் வணக்கம் சொல்லி சிரித்துக் கடப்பான்.. இந்த மெய்யழகன் Emotional idiot அல்ல. உண்மையில் அவன்தான் எல்லோரையும் விட உறுதியாக மனிதத்தைப் பற்றிக் கொண்ட துணிச்சல்காரன்.’நீங்க number சரியாகத்தான் சொல்லியிருப்பீங்க..நான்தான் தப்பா எழுதி இருப்பேன்’ என்று தன்னைத் தாழ்த்திக் கொள்பவன்.. இவ்வளவு செய்த தன்னை ஒருவனுக்கு அடையாளம் தெரியவில்லை என்றாலும் கூட அது அவரின் சூழலாக இருக்குமென்பதை உணர்ந்த பக்குவமே அவனின் அதே பாசத்தோடு தொடரும் பழங்கதையாடல்.ஆங்கில மொழியாற்றல் இருந்தும் அதனைக் காட்டிக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை சக மனிதர் மீது காட்டும் மனிதநேயமே சிறந்த அடையாளம் என உணர்ந்த ஸ்ரீதிவ்யாபோல்தான் அவனும். தான் எவ்வளவு சிறந்தவன் என்று அறியாதவன்.
கமலின் குரல் பாடல் சூழலை உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.ஓர் இரவில் எல்லாம் மாறிவிடுமா என்ற விதண்டாவாத அவநம்பிக்கைக் கேள்விகளுக்கு…ஓர் இரவில் ஒட்டுமொத்த வாழ்வின் காதலை 96 என்று பாடிய இயக்குனர் ப்ரேம்குமார், மெய்யழகனிலும் ஓர் இரவில் வாழ்வின் நினைவுக் கசடுகளைப் பளிச்செனத் துடைத்து, இனம்காண வேண்டிய மறுபக்கத்தைக் காட்டிவிடுகிறார்.

இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா – தான் உணராத எதுவும் சாத்தியமில்லை- என்று உள்நிலைப்பாட்டோடு கேள்விகேட்கும் மேதாவிப் போர்வைகள்தான் அருள்மொழிகள். தயவுசெய்து நிறைய பயணம் மேற்கொள்ளுங்கள்… அவை எழில் கொஞ்சும் Elite கனவு தேசங்களுக்கு, வரலாற்று நினைவிடங்களுக்குச் சென்று பெருமை பீற்றுவதற்கென மட்டும் வேண்டாம். கொள்ளுத் தாத்தாக்களை, நம் வாழ்வை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகித்த எளிய பால்யத்து வாழிடங்களை..நாம் மறந்துவிட்ட உடன் வாழ்ந்த நல்ல மனிதர்களைக் இனம்கண்டு நம்மை நாமே புனரமைத்துக் கொள்ள என்றாகட்டும்.இதுவே படத்தின் மறைபொருளாக நான் உணர்ந்தேன்.

மேலும், நீடாமங்கலத்தைக் காட்டினாலும் இயக்குனர் ஒரு இடத்தையோ, பொருளையோ, சொத்தையோ முன்னிறுத்த விரும்பவில்லை.சிலர் எங்கள் ஊர் எங்கள் தெரு என்று குதிப்பதற்காக இயக்குனர் அந்த இடங்களைக் காட்டவில்லை. அது ஒரு எளிய கிராமத்துக் கதைக்களம்.. அவ்வளவுதான்.நீடாமங்கலம் போன்று பல ஊர்கள் உண்டு. மெய்யழகன் பொதுவான உலகிற்கானவன். எனவே, அவனின் பரந்தமனத்தின் திறந்தவெளிதான் இங்கு பிரதானக்கரு.எளிய மொழியில் சொல்வதானால் கண்ணால் காண முடியாதவொன்று ஆனால் அதை உணரமுடியும்…மனிதம் /பாசம் /கருணை / இப்படி.பார்க்க இயலாத உண்மையான அகஅழகு = மெய்யழகன்.இதுவே பொருத்தமான தலைப்பு.

ஜல்லிக்கட்டு காட்சிகள் தேவையா – படத்திலேயே அதற்கான விளக்கம் அருள் அவன் மனைவியிடம் சொல்வான் . “அவன் பூனை நாய் கிளி வானம் பூமி மனுஷங்க எல்லாத்தையும் அப்படி பாசமா பாக்குறான்.. எப்படி இப்படி ஒருத்தன்..”மனிதர்கள் மட்டுமல்ல காலை மெல்லக்கடிக்கும் மீன்குஞ்சுகள் முதல் மூர்க்கமான காளை.. விஷம்கொண்ட பாம்புகள் என அனைத்து உயிர்களுமே மெய்யழகனுக்கு ஒன்றுதான்.கொஞ்சம் ஈரம் ஒட்டியிருக்கும் எந்த உயிரும் அவனின் உண்மையான பாசத்திற்கு கட்டுப்பட்டுவிடும். அவன் உணர்வுரீதியான கோழை அல்ல எல்லாவற்றையும் நேரடியாக பயமின்றி எதிர்கொள்ளும் துணிச்சலான யதார்த்தவாதி என்பதை நிலைநாட்டவே இந்தக்காட்சிகள்.

True caller பார்த்திருககலாமே, கேட்டால் சொல்லிட்டு போறான் – எனச் சிரிக்கும் சிலருக்கு பெயர் இங்கே முக்கியம் இல்லை என்றே புரியவில்லை.தன்னை தன் குடும்பத்தை அறிந்த ஒருவனை தெரியவில்லை எனும்போது இயல்பாக முதலில் நினைவுபடுத்திக்கொள்ளவே முயற்சி செய்வார்கள். சின்ன ஊர் அதிலேயே விடை உள்ளது..யாரிடமாவது கேட்டு அவர்கள் உங்களை தெரியவில்லையாமே என்று அவனிடமே போய் கேட்டு விட்டால் அவனுக்கு சங்கடமாக இருக்குமே என்று தோன்றக்கூடிய நல்ல மனது உள்ளவன்தான் அருள். அதையும் மீறி ஒரு சில முறை கேட்க முயற்சி செய்வார்… அது சூழல் காரணமாக தடைபடும். சரி இரவு கிளம்பி விடுவோமே அதுவரை அவனையும் நோகடிக்காமல் யாரென்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை தொல்லை தராமல் கிளம்பி விடுவோம் என்பது அவன் எண்ணம். ஆனால் மெய் இரவு தங்க வைத்தபின் நெருக்கம்கூடி நிலை மாறுகிறது.

வெள்ளந்தியான அவனுக்கு வலிக்குமே என்று யோசிக்காமல் முகத்திற்கு நேராக நீங்க யாருன்னே தெரியல என்று உடனே அறுத்து விட 2k kids -க்குதான் முடியும்.படத்தில் எதை முன்னிருத்த வேண்டுமென்பது படைப்பாளியின் சுதந்திரம். சொத்தில் என்ன பிரச்சனை என்பது உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்கள்தான் அதைப் படமாக எடுக்க வேண்டும்.

காட்டிய திரைக்கதையை விமர்சிப்பது அறிவின் அடையாளம். அனைவரின் உரிமை.. நீ ஏன் இதைச் சொல்லவில்லை அதை விளக்கவில்லை ஏன் நீட்டி முழக்கவில்லை என்று கேட்பது தன்அறிவின் பறைசாற்றலே.பொறியியலையும் குறிப்பிட்டு ஒரு கவிதை/நாடகம் எழுதிய ஒரு கலைக்கல்லூரி மாணவனிடம் நீ ஏன் பொறியியல் தேர்வு எழுதவில்லை என்று கேட்பதுதான் சிலரின் மெய்யழகன் மீதான எதிர்மறை விமர்சனம்.

இந்தப் படத்தில் மையக்கருவாக material thing அதாவது சொந்த வீடு இழப்பு என்பது இல்லை. (கவனிக்க.. கோடிகளோ லட்சமோ பெறும் வீட்டின்(செங்கல் சுவர் ) இழப்புவலி அல்ல… தான் வாழ்ந்த உயிரற்ற வீட்டின் மீதான பிணைப்பு அறுபட்ட வலி ) ஊரும் சூழலும் மாற அது ஒரு காரணமே.எவரையும் சந்தேகிக்கும் மனித மனங்களின் எதிர்மனநிலையும், எதையும் நம்பும் அடுத்தவருக்காக யோசிக்கும் இயல்பான வெள்ளந்தி மனநிலையுமான இருதுருவங்களைச் சொல்வதே இயக்குனரின் விருப்பம்.

ஆக, இப்படியான மனிதர்கள் இல்லவே இல்லை இது மாயை /புராணம் என்று சொன்னால்.. யாராக ஆனாலும் அவர் பாவம்தான். தான் உணராத (எதிர்பார்ப்புகளற்ற உண்மையான அன்பு )எதையும் நம்பாத மனநிலையின் வெளிப்பாடு இது. நுண்உணர்வுத் திறனறிவு(Emotional Intelligence ) குறைபாடாகக் கூட இருக்கலாம்.

மெய்யழகன் என்ற தலைப்பு சஸ்பென்சை உடைத்து விடுகிறது என்றொரு பார்வை சிலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால், இது ஒரு கதையாடல் உத்தி. என்ன நடக்கப் போகிறது என்பதை சொல்லாமல் வைத்து திரைக்கதையை நகர்த்துவது ஒரு பாணி.இன்னொன்று இதைத்தான் சொல்லப்போகிறோம் என்று சொல்லிவிட்டு அதை சுவாரஸ்யமாக தனிநடையில் கொண்டு செல்வது இதயத்தை திருடாதே-நோயில் சாகத்தான் போகிறார் , குஷி -இந்த ஜோடி சேரத்தான் போகிறது etc பட்டியல் நிறைய உண்டு.இந்த இரண்டாம் வகைமையில் suspense இல்லாமல் படம் எடுக்க பெரும் கற்பனையாற்றாலும், துணிச்சலும் வேண்டும்.அதாவது படம் பார்க்கும் நமக்குத்தான் மெய்யழகன் என்ற பெயர் தெரியும். அருள் மொழிக்கு இல்லை.. நம்மை அவரென உணர வைக்கும் முயற்சி இது.அப்படி உணர்கையில் இந்த suspense குறையாக தெரியாமல் நாமும் அவரின் தவிப்பை உணர்வோம்.

Gen z பசங்களுக்கு ஏற்ப படம் எடுங்க..என்று சில வலைத்தளங்களில் இயக்குனருக்கு அறிவுரை வேறு கொடுக்கிறார்கள்.ஏற்கனவே வெட்டு குத்து துப்பாக்கி ரத்தம் புரட்சி சாதி எழவுனு எடுத்து அவங்கள கெடுக்கத்தான் நிறைய பிதுங்கி நசுங்கின இயக்குனர்கள் இருக்கிறார்களே.மனிதர்கள் முகத்தைக் கூட பார்க்க விரும்பாத அரைவேக்காட்டு சில்வண்டுகள்… போய் இந்தப்படத்தைப் பார்த்து இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் மனிதர்கள் என்று தெரிந்து கொள்ளட்டும்.ஒருவர் உண்மையான மனித உணர்வுகளோடு படம் எடுத்திருக்கிறார்.அவரையும் Gen z -என்று திருப்பி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு நான் தரும் பதில்.

மெய்யழகன் அருள்மொழி ஆகலாம். அருள்மொழி மெய்யழகனாக மீண்டும் திரும்புவது மிகக்கடினம். ஏனெனில் மெய்யழகனே மெய்யாலும் குணஅழகன்.மனிதம் சிதைந்து அலைபேசிக்குள் புதைந்து கொண்டிருக்கும் இக்காலத்திற்கு மிக அவசியமான படைப்பிது.

அன்புத்தோழி_ஜெயஸ்ரீ

Meiyazhagan 🎬 #tamilcinema

moviereview

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...