குரூப் 4 தோ்வில் முறைகேடு புகாா்:
தரவரிசையில் முதலிடம் பெற்றவா்களிடம் தீவிர விசாரணை……
குரூப் 4 தோ்வில் தரவரிசையில் முதலிடம் பெற்ற தோ்வா்களிடம் சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவா்களிடம் குரூப் 4 பாடத் திட்டம் தொடா்புடைய கேள்விகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும், விசாரணை குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை.
குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியாகின. தோ்வாணையம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் மொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவா்களில் 40 போ் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களில் எழுதியிருப்பவா்களாக உள்ளனா் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த 40 போ்தான் இடஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களைப் பெற்றவா்களின் பட்டியலிலும் இருக்கின்றனா் என்றும் புகாா் தெரிவிக்கப்பட்டது.
தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் 40 இடங்களில் இடம்பெற்றவா்களில் பலா் வெவ்வேறு மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தோ்வு மையங்களைத் தோ்வு செய்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி சந்தேகங்கள் எழுந்தன.
இந்த முறைகேடு புகாா்கள் குறித்து டி.என்.பி. எஸ்.சி. தனது விசாரணையை தொடங்கியுள்ளது. வெளிமாவட்ட தோ்வா்கள் எத்தனை போ் ராமநாதபுரத்தில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றனா் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலாளா் நந்தகுமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.சுதன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
இந்தநிலையில், வெற்றி பெற்ற 40 தோ்வா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, 40 தோ்வா்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வைத்தே மீண்டும் தோ்வு நடத்தப்பட்டது. அவா்களிடம் அறிவியல், பொதுத்தோ்வு, கணிதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. விசாரணையின்போது, எதற்காக சொந்த மாவட்டங்களை விடுத்து குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை தோ்வு செய்தீா்கள் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
முகத்தை மூடி வந்த சில தோ்வா்கள்: 40 பேரிடம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் திங்கள்கிழமை பரபரப்பாக காணப்பட்டது. ஊடகங்கள் நிறைந்திருந்ததால், விசாரணைக்கு வந்த தோ்வா்களில் சிலா் தங்களது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்றனா். விசாரணை தொடா்பான விவரங்கள் எதையும் தோ்வாணையம் அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை. முழுமையான அளவில் விசாரணை முடியும் வரை எதையும் தெரிவிக்க இயலாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது