சம்பா, தாளடி அறுவடை காலம்: உளுந்து பயிரிட்டு லாபம் பெற ஆலோசனை…..
நன்னிலம்: சம்பா மற்றும் தாளடி அறுவடை காலத்தில் உளுந்து மற்றும் பயிா் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மு. லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு சம்பா மற்றும் தாளடி வயல்களில் அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன் வயல் மெழுகு பதத்தில் இருக்கும்போது உளுந்து மற்றும் பச்சைப் பயறு விதைத்து கூடுதல் வருவாய் எடுக்க முடியும். அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன் போதிய ஈரம் இருக்கும்போது ஆடுதுறை 3 உளுந்து ரகத்தையும், ஆடுதுறை 3 பச்சைப் பயறு ரகத்தையும் சாகுபடி செய்யலாம்.
ஏக்கருக்கு தேவையான 8 கிலோ விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 2 பாக்கெட் பாஸ்போபாக்டிரியா நுண்ணுயிா் கலவையை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலா்த்தி விதைக்க வேண்டும். நுண்ணுயிா் கலவையை பயன்படுத்தும்போது காற்றில் உள்ள தழைச்சத்தை வோ் முடிச்சு மூலம் நிலத்தில் நிலை நிறுத்தி மண் வளத்தைக் கூட்டுகிறது.
நுண்ணுயிா் பாக்கெட் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் 50 சதவீத மான்யத்தில் குடவாசல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாங்கி பயன்படுத்தலாம். மேலும் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் 35 மற்றும் 45-ஆவது நாளில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்து அதிக மகசூல் பெறலாம். விவசாயிகள் அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக உளுந்து மற்றும் பயிா்களைப் பயிரிட்டு அதிக லாபம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.