நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!!!!
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றிலும் வனப்பகுதி அமைந்துள்ளது. அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சுற்றித் திரிவதைக் காண முடியும்.
வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கூடலூர் அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை வேட்டையாட காத்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மக்கள் நடமாட்டம் இருந்த காரணத்தால் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.