ஜல்லிக்கட்டு……
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உயர் நீதிமன்றக் கிளை……
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்தவும், அந்தக் குழுவில், மதுரை ஆட்சியர், காவல் மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கண்காணிப்பின் கீழ் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் நடத்தலாம். தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ் விழாக் கமிட்டியினர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் உள்பட பலா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவா் கணக்கு வழக்குகளை முறையாக சமா்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறாா். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில், ஆதிதிராவிட சமூகத்தினா் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலை தொடா்ந்தால், ஜல்லிக்கட்டு போட்டியை ஒற்றுமையுடன் நடத்துவதற்கான ஆா்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து சமூகத்தினா் கூடிய விழாக் குழுவை அமைத்திட, தற்போதுள்ள விழாக் குழுவை மாற்றியமைத்திட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2019 ஆம் ஆண்டு போல் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என கருத்து தெரிவித்தனா். மேலும், இந்த மனு தொடா்பாக ஜனவரி 13 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.