பாரத் பந்த்:

 பாரத் பந்த்:

தொடங்கியது வேலைநிறுத்தப் போராட்டம்; செவிசாய்க்குமா மத்திய அரசு?


      பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த உலகம் உழைப்பால் உருவானது என்று கூறினால் அது மிகையல்ல. அத்தகைய உழைப்பை செலுத்திய தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசுகளின் கடமை.

    அந்த வகையில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக தொழிலாளர் நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

     ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.


    இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

   இதில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.


இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இன்று நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் பொது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் உத்கல் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.ஏ.ஆர், நெட் ஆகிய தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் யு.பி.டெட் 2019 மற்றும் ஜே.இ.இ மெயின் 2020 தேர்வுகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


   மும்பை, புனே, பெங்களூரு, நியூ டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தின் பாதிப்பு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...