முகமது அசாருதீன்: சூதாட்ட புகார் முதல் அரசியல் வரை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், சர்வதேச கிரிக்கெட் அணியில் வலுவான நிலையில் நுழைந்தார். 1985 இல் அவர் பங்கேற்ற முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்தார் அசாருதீன்.ஆனால் 2000 ஆம் ஆண்டில், அவர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றம் சாட்டப்பட்டபோது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தலைகீழாக மாறியது. பி.சி.சி.ஐ அவருக்கு ஆயுட்காலத் தடை விதித்தது.ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலத் தடை சட்டவிரோதமானது என்று 2012-இல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது 49 வயதாகி இருந்த நிலையில், அவரால் ஆடுகளத்திற்கு திரும்ப முடியாமல் போய்விட்டது. 2009 ஆம் ஆண்டில், முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், இங்கிருந்துதான் அவரது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இது விளையாட்டு இன்னிங்க்ஸ் அல்ல, அரசியல் இன்னிங்ஸ். மொராதாபாத் தொகுதி மக்களவை எம்.பி.யாகவும் இருந்தார். தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் முகமது அசாருதீனை பிபிசி குஜராத்தி செய்தியாளர் அங்கூர் ஜெயின் சந்தித்து உரையாடினார்.
கிரிக்கெட் சூதாட்டம் அல்லது அந்த நாட்களைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும்போது ஏன் சங்கடப்படுகிறீர்கள்?
தவறான கேள்விகளை யாரிடம் கேட்டாலும், அது அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். நீதிமன்றம் என்னை நிரபராதி என்று அறிவித்துவிட்டது. எனவே இப்போது நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.
இந்த விஷயத்துடன் தொடர்புடைய பிற விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது எதிர்காலத்தில் புத்தகம் ஏதாவது எழுதுவீர்களா?
இந்த விஷயத்தில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த சவாலை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். அனைத்தையும் பகிரங்கப்படுத்துவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏதாவது சொல்ல, அதன் மீது யாராவது வேறு ஏதாவது மற்றுமொரு கருத்தைச் சொல்லி, சாதாரண விஷயத்தை மிகப்பெரிய விவகாரமாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குழந்தைப் பருவத்தில் அனைவருக்கும் நல்லொழுக்கம் கற்பிக்கப்படுகிறது, அது என்னுள்ளே மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எனது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரிடமிருந்து எனது குழந்தை பருவத்தில் நான் பெற்ற கல்வி, இதுபோன்ற எதையும் செய்ய என்னை அனுமதிப்பதில்லை.
உங்கள் பணிக்காக நீங்கள் பெற வேண்டிய பாராட்டு உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா?
எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கடினமாக உழைத்து செவ்வனே செய்தேன். ஊடகங்களில் என்னைப் பற்றி விமர்சித்து எழுதியவர்களின் கருத்து, அவர்களின் சொந்த சிந்தனை. நான் அதைப் பற்றி அதிகம் பேச மாட்டேன். ஏனென்றால் நான் எனது கடமையை சரியாக செய்தேன். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடினேன்.போட்டிகளில் வெற்றி பெற்றபோது, மிகுந்த மகிழ்சியடைந்தேன். அதை நன்றாக அனுபவித்தேன். எழுதுபவர்களின் கைகளையோ வாயையோ மூட முடியாது. அவர்கள் எதையும் எழுதலாம், அது அவர்களின் சொந்த விருப்பம். ஆக்கபூர்வமான விமர்சனம்தான் நல்லது என்று நினைக்கிறேன், அதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் விமர்சித்தால், அது சரியில்லை. ஒருவரை வீழ்த்துவதற்காக விமர்சிப்பதும் சரியல்ல.