ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை தேதி விரைவில் அறிவிப்பு…..
இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்திய வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பான் பிரதமரின் பயணத் திட்டம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இந்திய வருகை தொடர்பாக விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என மத்திய வெளியுறவு விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியா, ஜப்பான் இடையிலான வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வரவிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இதுதொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எனவே ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணம் தொடர்பான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.