இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை:
இந்திய வெளியுறவுத் துறை உறுதி:
இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பதிமூன்று மீனவர்களை கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் வெளியுறவுத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக “தினமணி’ சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் பதிலளிக்கையில், “இலங்கைக்கும் இந்தியாவிற்கும் சுமுகமான ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்படும் போதெல்லாம் இலங்கையின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதே போன்ற நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்ற விவகாரங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு சென்று இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கிக் கொண்டு இருக்கிறது. அனைத்து நாடுகளின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக தூதர்கள் அந்தந்த நாட்டு அரசிடம் இது குறித்து முழுமையாக விளக்கி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஏற்கெனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஐந்து விளக்கங்கள் இந்த நாடுகளிடம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
“இது முற்றிலும் உள்விவகாரம்; இந்தத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை; இது குடியுரிமையை வழங்கும் சட்டம்; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, இந்தியாவுக்குத் திரும்பிய சிறுபான்மையினருக்குத்தான் இந்தத் திருத்தச் சட்டம் குடியுரிமையை வழங்குகிறது; இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் தடுக்காது’ போன்ற விஷயங்கள் இந்த நாடுகளுக்கு இந்தியா சார்பில் எடுத்து ரைக்கப்பட்டு வருகிறது.
மேலும், உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டதுதான் தேசியக் குடியுரிமை பதிவேடு என்பது குறித்தும் விளக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் சீனாவோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான நிலைமை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் எல்லைத் தகராறு குறித்த விவகாரத்தை மட்டும் தனியாக ஒதுக்கி வைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டது.
சுவாமி நித்யானந்தா இருக்கும் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை. அவர் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் குறித்த தகவலை இந்தியாவிற்கு தெரிவிக்குமாறு ஏற்கெனவே அனைத்து நாடுகளுக்கும் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் ரவிஷ் குமார்.