வருமான வரி வரம்பை உயர்த்தினால், மற்ற சலுகைகள் கிடையாது!
வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.
ஹைலைட்ஸ்
- பட்ஜெட் 2020-21-ல் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்பட வாய்ப்பு.
- வாங்கும் சக்தியை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
- நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் 2வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
- 2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு சலுகைகளை ரத்து செய்துவிட்டு வருமான வரி வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- வருமான வரி வரம்பு
சில மாதங்களுக்கு முன் பெரு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கார்பரேட் நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர்.
வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவர்களுடைய வரி வரம்பு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யவுள்ள அவரது இரண்டாவது மத்திய பட்ஜெட்டில், இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானால் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்படும்.
வருவாய் அடுக்கு
2020-21ஆம் ஆண்டில் ஆண்டு வருவாய் அடுக்கில் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குறைந்தபட்ச வருமான வரி வரம்பு மாற்றப்படுவதால் அதிக பயன்பெறுபவர்கள் இவர்களாகவே இருப்பார்கள்.
ஆண்டு வருவாய் (ரூபாய்) ஈட்டுவோர் எண்ணிக்கை 5 லட்சம் வரை 4.8 கோடி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 2.1 கோடி 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 60.4 லட்சம் 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை 18.8 லட்சம் 50 லட்சம் முதல் 1 கோடி வரை 3.2 லட்சம் 1 கோடி முதல் 5 கோடி வரை 1.3 லட்சம் 5 கோடி முதல் 10 கோடி வரை 7.4 ஆயிரம் 10 கோடிக்கு மேல் 4.2 ஆயிரம் சலுகைகள் ரத்து?
வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமானால், இதுபோன்ற வரி விலக்கு சலுகைகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என நிதித்துறைக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக முதலீடுகள் குறைந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி பலவீனமாகியுள்ளது. நிறுவனங்களின் வரியைக் குறைத்தபோதே, பல நிறுவனங்கள் இத்துடன் வருமான வரி வரம்பையும் தளர்த்தி வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன.
நிதிப் பற்றாக்குறை
ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. எனவே எதிர்வரும் 2020-21 பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் இடம்பெறும் சாத்தியம் குறைவு.
5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.