பணத்தைக் கட்டினால் உடலைக் கொடுப்போம்
- நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னைக்குக் கட்டடத் தொழிலுக்கு வந்தபோது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அதே பகுதியில் கட்டடம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருடன் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த துர்காராவ் என்ற இளைஞரும் வேலை செய்து வருகிறார்.
-
ஜெயராஜ் மகள் பிரியாவை (17) துர்காராவ் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே பிரியாவைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், இந்தக் காதலுக்குப் பிரியா சம்மதம் தெரிவிக்கவில்லை. பள்ளிக்குச் சென்று வரும்போதெல்லாம் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். துர்காராவின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக ஆந்திராவிலிருந்து பட்டிபுலத்தில் உள்ள பெற்றோரிடம் வந்து தங்கினார்.
ஆனாலும், பிரியாவை தன்னுடைய வலையில் விழவைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தார் துர்காராவ். பிரியாவின் பெற்றோரிடம் பேசி ஜெயராஜ் வேலை செய்யும் கட்டடத்திலேயே கொத்தனார் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் தன்னைக் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்தவர், கத்தியால் உடல் முழுவதும் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண்ணுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்திருக்கிறோம். பணத்தைக் கட்டினால் மட்டுமே உடலைக் கொடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
கத்திக்குத்துக் காயங்களுடன் இருந்த பிரியாவை, கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். `சிகிச்சை தொகையை முழுமையாகக் கட்டினால் மட்டுமே உடலைக் கொடுப்போம்’ என மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். மகளைப் பறிகொடுத்த நிலையில், `திடீரென அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?’ என மருத்துவமனையிலேயே பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்
இந்த வழக்கு குறித்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம், “அந்தப் பெண்ணுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்திருக்கிறோம். பணத்தைக் கட்டினால் மட்டுமே உடலைக் கொடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். நாங்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி இருக்கிறோம். ஆனால், அவர்கள் உடலைக் கொடுக்க மறுக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 25,000 ரூபாய் கட்டியிருக்கிறார்கள். இன்னும் 1.5 லட்சம் பணம் கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதனால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றார்.